உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் ஓட்டு நிலவரத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது இந்தியாவில் நோட்டு நிலவரம் குறித்து பிரதம மந்திரி நரேந்திர மோடி அவசர சிறப்புரையாற்றியது உலகின் கவனத்தை இந்தியா பக்கம் திரும்பியது. உலக முன்னணி நாடுகளில் அதிக அளவு ரொக்கப் புழக்கம் இருக்கும் நாடு இந்தியா என்று கருதப்படுகிறது. உயர் மதிப்பு ரூபாய்களான ரூ. 500, ரூ.1000 ஐ நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை மோடி செய்தபோது பெரும்பாலான இந்தியர்களின் தூக்கம் இழந்த இரவாக காணப்பட்டது.
புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுக்களை சாமானிய மனிதன் கண்டுபிடிக்க முடியாது; தீவிரவாதம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைக்கு இந்த பணம் வெகுவாக உபயோகப்படுத்தப்படு கிறது. மேலும் கறுப்புப் பணம் அதிக அளவு புழக்கத்தில் இருப்பது மட்டு மல்லாமல் பெரும்தொகை பதுக்கி வைத்திருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அளிக்கப்பட்ட வாய்ப்பு
2015 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை வரி மற்றும் அபராதம் செலுத்தி சரி செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்குப் பின்னர் 2016-ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை உள்நாட்டுக் கறுப்புப் பணத்தையும் வரி மற்றும் அபராதத் தொகைகளாக 45% செலுத்தி சரி செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.
அப்போது மோடி ``பணத்தையும் வரியையும் செலுத்தி தூக்கத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறியது தற்போது நவம்பர் 8 ஆம் தேதியன்று தூக்கத்தைத் தொலைத்தவர்களுக்கு புரியும். ``நான் என்றைக்கும் குப்பைத் தொட்டிக்குப் போனதில்லை’’ என்று மார்த்தட்டும் உயர் மதிப்பு தொகை களான ரூ. 500, ரூ.1000 ஒரே இரவில் மதிப்பிழந்து பொலிவிழந்து செல்லும் இடம் தெரியாமல் முழி பிதுங்கும் சூழ்நிலையில் உள்ளது.
ரூ. 500, ரூ.1,000 நோட்டு ரத்தா? செல்லாதா?
அறிவிக்கப்பட்ட நள்ளிரவு முதல் வர்த்தகத்திற்கு செல்லாது என்று சொல்லப்பட்டாலும் இந்த பணம் செல்லும் பணம்தான். ஆனால் வங்கி மூலம் மட்டுமே இதை செல்லும் பண மாக மாற்ற முடியும். ரூ.4,000 வரை ஒரு நபரால் அவரது அடையாள விவரங்க ளான ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் பான் கார்ட் (நிரந்தர கணக்கு எண்) கொடுத்து மாற்ற முடியும். மேலும் எந்த வரம்பும் இல்லாமல் அவரது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்ய முடியும்.
அதற்கு மேல் மார்ச் 31 வரை, ரிசர்வ் வங்கிக்கு ஒரு உத்தரவாதம் (Affidavit) கொடுத்து அந்த பணத்தையும் செலுத்த முடியும். இவ் வாறு ரூ.4,000க்கும் மேற்பட்ட தொகை தேவைப்படுவோர் வங்கிகளில் காசோலை (அ) இணைய வழி வங்கி (அ) மொபைல் வங்கி (அ) கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய திட்டங்கள்
1946-ம் ஆண்டு ரூ.1,000, ரூ.10,000 போன்ற உயர் மதிப்பு தொகைகளை அரசாங்கம் ரத்து செய்தது. மீண்டும் 1954-ம் ஆண்டு ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. 1978-ம் ஆண்டு ஜனதா அரசாங்கத்தால் இந்த உயர் மதிப்பிலான தொகைகள் ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 ரத்து செய் யப்பட்டன. இது கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டங்களாகும்.
வருமான வரி
வருமான வரித்துறையின் இணைய தளம் ரூ.500 ரூ.1000 டெபாசிட் செய் பவர்களின் விவரங்களை திரட்டுகிறது. அனுமதிக்கப்பட்டுள்ள 50 நாட்களில் வங்கியில் டெபாசிட் செய்பவர்களின் விவரங்கள் வருமான வரித்துறைக்கு போய் சேரும்.
குறிப்பாக ரூ.3,00,000க்கு மேல் டெபாசிட் செய்பவர்களது விவரம் வருமான வரி கணக்கோடு ஒப்பிடப்பட்டு அதற்கான வரி செலுத் தப்பட்டதா என்று பார்க்கப்படும். வரிச்சட் டப்படி கணக்கில் காட்டாத டெபாசிட் டுக்கு 30% வரியும், 200% அபராதமும் (வரிமேல்) விதிக்க அதிகாரம் உண்டு. உதாரணமாக ஒருவர் 50 லட்சம் டெபாசிட் செய்தால் 15 லட்சம் வரியாகவும், 30 லட்சம் அபராதமாகவும் விதிக்கப் படலாம்.
சாதக பாதகங்கள்
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு கறுப்பு பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு மிக முக்கிய பங்காற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல நிலைகளில் ரகசியம் பாதுகாக்கப்பட்டு கறுப்புப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் நடத்திய மோடி தலைமையிலான அரசுக்கு உலக அளவில் ஆதரவு பெருமளவு கிடைத்துள்ளது. ஏவுகணை தாக்குதல் போன்ற திட்டத்தை எதிர்பாராத நிலையில் அரசு அறிவித்துள்ளது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பன்மடங்கு பெருக்க உதவும்.
இந்த கறுப்புப் பணம் வெகுவாக ஒழிவது மட்டுமல்லாமல் ஊழல் மிக அதிகளவு குறையும். மேலும் அடுத்த ஆண்டு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப் படும் போது கணக்கில் காண்பிக்காமல் வியாபாரம் செய்வது என்பது மிகவும் குறைந்த வாய்ப்பாக காணப்படும்.
குறுகிய காலத்தில் ஏராளமான நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் தொலைநோக்கில் இந்த முயற்சி நிச்சயம் கைகொடுக்கும். ரியல் எஸ்டேட், சினிமா, நகை வியாபாரம் போன்றவை குறுகிய காலத்திற்கே சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். கறுப்பு பணம், ஊழல் பெருமளவு குறையும். ஆனால் காலப்போக்கில் புதிய பாணியில் தழைக்கும் கறுப்பு பொருளாதாரத்தை அவ்வப்போது கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இந்தியா பொருளாதார வல்லரசு நாடாக மாற பிரகாசமான வாய்ப்புள்ளது.
பாதிப்பு உண்டா?
இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களில் 86% க்கும் அதிகமாக ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் இவ்வளவு பெரிய உயர் மதிப்பு பண ரத்து (De-Monetization) கடந்த அரை நூற்றாண்டுகளில், எந்த நாட்டிலும் இல்லாத அளவு இந்தியா வில் ஆணித்தரமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதேசமயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற நல்ல முயற்சியை அரசு தீவிரமாக எடுத்து வந்தாலும் சுமார் 30 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு மற்றும் அடையாள விவரங்கள் கிடையாது. இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டுக்கு அருகே வசிப்பதால் இவர்களுக்கு இந்த சட்ட மாற்றத்தால் பெரிய பாதிப்பு இருக்காது.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறை சூழ்நிலை காரணமாக வீடுகட்ட, நிலம் வாங்க, திருமணம் செய்ய, நகை வாங்க போன்ற செலவுகளுக்கு ரொக்கமாக சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு இந்த சட்டம் பாதிக்கும். 30 சதவீத வரி மற்றும் அபராதம் பொருந்தும். பொதுவாக ரொக்கத்தில் அல்லாமல் நிலம் மற்றும் கறுப்பு பொருளாதாரத்தில் ஏற்கெனவே முடக்கியவர்கள் இதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டாலும் பெரும் அளவு கறுப்பு பொருளாதாரம் இந்த மாற்றத்தால் கட்டுப்படுத்தப்படும்.
30 சதவீத விதிப்பு நிச்சயம் சரியான நடவடிக்கையாக இருந்தாலும், வரி ஏய்ப்புக்கு 200 சதவீத அபராதம் கடும் தண்டனையாக கருதப்படலாம். இதனால் அரசு மேல் அதிருப்தி சூழ்நிலை ஏற்படும். ஆனால் ஏற்கெனவே கொடுத்த வாய்ப்பை தவற விட்டவர்கள் அதற்கு கொடுக்கும் விலை என்றுதான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கறுப்புப் பணம் வெகுவாக ஒழிவது மட்டுமல்லாமல் ஊழல் மிக அதிகளவு குறையும். மேலும் அடுத்த ஆண்டு ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படும் போது கணக்கில் காண்பிக்காமல் வியாபாரம் செய்வது என்பது மிகவும் குறைந்த வாய்ப்பாக காணப்படும்.
- karthikeyan.auditor@gmail.com