வணிக வீதி

ஏழைகளின் உலோகம் அலுமினியம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் அலுமினிய பாத்திரங்கள் இருக்கும். நம் வாழ்வோடு அலுமினியம் ஒன்றிவிட்டது என்றே கூறலாம். மிகக் குறைந்த விலை காரணமாக அலுமினிய பாத்திரத்தை அனைவரும் பயன்படுத்துவதுண்டு. சர்வதேச அளவில் சீனாதான் அலுமினிய உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவிலிருந்தும் அலுமினிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறோம். உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகிறது. அலுமினியத்தை பற்றிய சில தகவல்கள்….

மற்ற உலோகங்களை விட குறைவான விலை கொண்டதால் அனைத்து வீடுகளிலும் அலுமினிய பாத்திரம் பயன்படுத்தப்படுகிறது. கிடைக்கும் வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இழந்துவிடாமல் உட்புறமாகக் கடத்தி சமைக்க வேண்டிய பொருளை விரைவில் சமைப்பதற்கு அலுமினிய பாத்திரங்கள் பயன்படுகிறது.சமைக்கும் போது உணவிலும் கொஞ்சம் அலுமினியம் கலந்து விடுகிறது.

அல்சீமர் நோய் வருவதற்கு அலுமினியச் சத்தின் சேர்க்கை ஒரு காரணமாக கருதப்படுகிறது.

மண்ணிலிருந்து கிடைக்கும் நவரத்தினங்களில் மரகதம், செந்நிறக்கல், நீலக்கல் மற்றும் பசுமை கலந்த நீலக்கல் போன்றவற்றில் அலுமினியம் ஒரு சேர்மானப் பொருளாகச் சேர்ந்துள்ளது.

அறிவியல் வளர்ச்சி அடைந்திராத பண்டைய காலத்திலேயே அக்கால மக்கள் அலுமினியத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால் அலுமினியம் ஓர் உலோகம் என்பதையும் அதன் பலன்கள், தன்மை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. எடுத்துக்காட்டாக கி. மு 5300 ஆம் ஆண்டுக்கு முன்னரே மத்திய கிழக்கில் வாழ்ந்த மனிதர்கள் பயன் படுத்திய உபகரணங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாக இருந்தன. அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் அலுமினியக் கலவை இருந்தது பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

அலுமினியத்தை கிரேக்கர்களும், ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர்.

1787 ல் லவாய்சியர் இதை அதுநாள் வரை அறியப்படாத ஓர் உலோகத்தின் ஆக்சைடு என்று கூறினார்.

1825-ம் ஆண்டு டென்மார்கைச் சேர்ந்த ஓர்ஸ்டடு (Oersted) என்ற விஞ்ஞானியால் தூய உலோக அலுமினியம் பிரித்தெடுக்கப்பட்டது.

1886-ம் ஆண்டு அமெரிக்காவின் ஹால் (Hall) மற்றும் பிரான்சின் ஹெரௌல்டு (Heroult) ஆகியோர் மின்னாற்பகுப்பு முறை மூலம் வர்த்தக முறையில் அலுமினிய உற்பத்திக்கு வழிகாட்டினர்.

அலுமினியம் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ள நாடுகள் (ஆயிரம் டன்னில்)

சீனா 22,088

அமெரிக்கா 5,505

ஜப்பான் 2,259

ஜெர்மனி 2,054

மத்திய கிழக்கு நாடுகள் 2,030

உலகில் அதிகம் கிடைக்கக்கூடிய தனிமங்களில் அலுமினியத்தின் இடம். - 3

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பாக்சைட் அதிகமாகக் கிடைக்கிறது.

ஆகாய விமானங்கள் செய்யப் பயன்படும் டூராலுமின் என்ற உலோகம் அலுமினியம், சிறிதளவு செம்பு, மக்னீசியம், மாங்கனீஸ் கலந்த உலோகக் கலவையாகும்.

அப்பிரகம், கற்பலகை, சில களிமண் வகைகள், பாக்சைட், கிரையோலைட் ஆகியன அலுமினியம் கலந்த கூட்டுப் பொருள்கள்.

அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பர்.

இந்தியாவில் 1943-ம் ஆண்டு அலுமினிய உற்பத்தி தொடங்கியது.

ஆக்சிஜன் போன்ற தனிமங்களுடன் சேர்ந்த கூட்டுப் பொருளாகவே அலுமினியம் உள்ளது.

வெப்பம் உணர் கருவிகளுக்குத் தேவையான வெப்பக் கடத்தியாகவும் மின்சாதனங்களுக்குத் தேவையான மின்கம்பியாகவும் அலுமினியம் பயன்படுத்தப்படுகின்றது.

கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்

SCROLL FOR NEXT