சர்வதேச அளவில் டிரைவர் இல்லாத கார், லாரி, பஸ் ஆகியனவற்றை இயக்கிப் பார்க்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின் றன. சிங்கப்பூர் ஆராய்ச்சி மையம் ஒன்று டிரைவர் தேவைப்படாத ஸ்கூட்டரை தயாரித்து அதை வெள்ளோட்டம் விட்டுள்ளது.
டிரைவர் இல்லாத ஸ்கூட்டரா? என்ற ஆச்சர்யம் மேலோங்கலாம். வழக்கமான ஸ்கூட்டரைப் போல இது இரண்டு சக்கரங்களைக் கொண்டதல்ல. மாறாக நான்கு சக்கரங்களைக் கொண்டது. இதன் அதிகபட்ச எடை 50 கிலோதான். மணிக்கு 6 கி.மீ. வேகத்தில்தான் இது ஓடும்.
சைக்கிளை விட நடந்து மெதுவாக செல்லும் இந்த ஸ்கூட்டருக்கு அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். வழக்கமாக நடந்து செல்வோர் பெரும்பாலும் போன் பேசியபடியே செல்வர். பல சமயங்களில் சிறு, சிறு விபத்துகளில் சிக்குவோரும் இவர்களே. படி இருப்பது தெரியாமல் தவறி விழுந்து அடிபட்டுக் கொள்வோரும் உண்டு. வாகனங்கள் வருவதை உணராமல் சாலையைக் கடந்து காயமடைவோரும் உண்டு.
இத்தகையோரை பாதுகாக்கவே இத்தகைய ஸ்கூட்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது.
பாதசாரிகளுக்கான பாதையில் நடந்து செல்வோர், போன் வரும்போது இதில் அமர்ந்தபடியே செல்லலாம். இந்த ஸ்கூட்டரில் உள்ள லேசர் உணர் கருவிகள் (சென்சார்) சுற்றுப் புறத்தில் உள்ள சூழலை அறிந்து ஊர்ந்து செல்லும்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் (என்யுஎஸ்) இந்த ஸ்கூட்டரை உருவாக்கி யுள்ளது. டிரைவர் பற்றாக்குறை நிலவும் சிங்கப்பூரில் ஆளில்லா வாகனங்கள் உற்பத்திக்கான அவசியம் கருதி மேற் கொள்ளப்படும் ஆராய்ச்சியின் விளை வாக உருவானதுதான் இந்த ஸ்கூட்டர் என்று என்யுஎஸ் தெரிவித்துள்ளது.
பல்கலைக் கழக வளாகத்தில் இந்த ஸ்கூட்டர் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில் இது அமைந்துள்ளது. கார் தேவைப்படாத அதேசமயம் விபத்து குறைவான வாகனமாக இது செயல்பட்டுள்ளது.
உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், எடையைக் குறைக் கவும் என பல்வேறு நோக்கங்களுக்காக நடை பயிற்சி மேற்கொள்வோர் உண்டு. கொழுப்புச் சத்தைக் குறைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பலர் நடை நடையாய் நடக்கின்றனர். இருந்தாலும் பல சமயங்களில் இவர்கள் செல்போனில் உரையாட வேண்டிய சூழல் உள்ளது. பல தொழிலதிபர்கள் தங்களுக்கு வரும் இ-மெயிலுக்கு உடனடி பதில் அனுப்ப வேண்டியிருக்கும். நடந்து கொண்டிருக்கும்போது இதுபோன்று பதில் அனுப்புவது என்றால் பலராலும் அது முடியாமல் போகிறது. அது போன்ற சமயங்களில் இந்த ஸ்கூட்டரில் அமர்ந்தபடியே இ-மெயிலுக்கு பதில் அனுப்பலாம். இந்த ஸ்கூட்டரும் தானாக ஊர்ந்து செல்லும்.
முதல் கட்டமாக பெரிய வாகனங்கள் புழக்கத்தில் இல்லாத, நடை பாதை போன்ற நேர் பாதைகளில் மட்டுமே இந்த டிரைவர் இல்லாத ஸ்கூட்டரை இயக்க முடியும். அதுபோன்ற சாலைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று என்யுஎஸ் பேராசிரியர் மார்செலோ ஆங் ஜூனியர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பிற சாலைகளில் இயங்கு வதற்கேற்ப இந்த ஸ்கூட்டரில் மாற்றங் கள் செய்து வருவதாக அவர் குறிப் பிட்டுள்ளார். பிற டிரைவர் தேவைப்படாத வாகனங்களில் உள்ளதைப் போன்ற தொழில்நுட்பங்களை சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவது தொடர்பான ஆய்வுகள் தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மாசசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி மையம், சிங்கப் பூர் எம்ஐடி அலையன்ஸ் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையம் (ஸ்மார்ட்) ஆகியவற்றுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலை இணைந்து இந்த ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் தொடரும் என்றும், உடனடியாக இதை விற்பனைக்கு அனுப்பும் உத்தேசம் இல்லை என்றும் என்யுஎஸ் தெரிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் முக்கிய மானது பேட்டரியால் இயங்கும் வாகனங்கள்தான். அதற்கடுத்தபடியாக வருவது டிரைவர் இல்லாத வாகனங் கள்தான். இந்த வரிசையில் டிரைவர் தேவைப்படாத ஸ்கூட்டரும் சேர்ந் துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் இந்த வாகனம் புழக்கத்துக்கு வரும் நாள் வெகு தொலை வில் இல்லை என்றே தோன்றுகிறது.