வணிக வீதி

வெளிநாட்டினரைக் கவரும் இந்திய வேளாண் தயாரிப்புகள்

செய்திப்பிரிவு

கரோனாவுக்குப் பிறகு மக்களின் உணவுத் தேர்வில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. செயற்கை உரங்கள், பூச்சிமருந்துகள், ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் உணவுகளை மக்கள் அதிகம் நாடத் தொடங்கியுள்ளனர். இதனால், இந்தியாவில் ஆர்கானிக் உணவுகள் சார்ந்து மிகப் பெரும் சந்தை வாய்ப்பு உருவாகி உள்ளது. தானியங்கள், எண்ணெய் வித்துகள் ஆரம்பித்து மசாலா, தீவனம், தேயிலை, காபி வரையில் ஆர்கானிக் தயாரிப்புகள் சந்தையை நிறைக்கின்றன. உள்நாட்டினர் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் இந்திய ஆர்கானிக் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

கரோனா காலத்தில் இந்தியாவின் ஆர்கானிக் தயாரிப்புகள் ஏற்றுமதி இருமடங்கு உயர்ந்தது. 2019-20-ல் இந்தியா ரூ.5,372 கோடி அளவில் ஆர்கானிக் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

2020-21-ல் அது ரூ.8,137 கோடியாக உயர்ந்தது. 2021-22 நிதி ஆண்டில் ஏற்றுமதி ரூ.6,000 கோடியாக குறைந்தது என்றாலும், இந்திய ஆர்கானிக் தயாரிப்புகளுக்கான தேவை வெளிநாடுகளில் அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. மொத்தமாக 2019-2022 வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்தியா ரூ.19,592 கோடி அளவில் ஆர்கானிக் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவின் ஆர்கானிக் ஏற்றுமதியில் 50 சதவீதம் அமெரிக்காவுக்குத்தான் செல்கிறது. 37 சதவீதம் ஐரோப்பிய யூனியனுக்குச் செல்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு மட்டும் ரூ.9,717 கோடி அளவில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ரூ.7,190 கோடி அளவில் ஏற்றுமதி செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் 60 லட்சம் ஹெக்டர் பரப்பளவு நிலம் இயற்கை விவசாயத்துக்கான சான்றிதழ் பெற்றுள்ளது. இயற்கை விவசாயத்துக்கான நிலச் சான்றிதழ் அடிப்படையில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT