முதலீட்டாளர்கள் நலன் குறித்த விஷயத்தில் `செபி’ தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதலீட்டு ஆலோசகர் தொடர்பாக கடந்த அக்டோபர் 7-ம் தேதி செபி புதிய வரைவு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. 30 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் மீது வரும் நவம்பர் 4-ம் தேதிக்குள் கருத்து கூறுமாறு `செபி’ தெரிவித்திருக்கிறது. `செபி’-யின் இந்த வரைவு முதலீட்டு ஆலோசகர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து கருத்துகளை பார்ப்பதற்கு முன்பு `செபி’ வரைவு அறிக்கையில் இருக்கும் முக்கியமான விஷயங்களை பார்ப்போம்.
காரணம் என்ன?
2013-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி முதலீட்டு ஆலோசகர்களுக்கான விதிகளை `செபி’ வரையரை செய்தது. பங்குகளை பரிந்துரை செய்யும் முத லீட்டு ஆலோசகர் அதற்கான அனுமதி வாங்கி இருக்க வேண்டும். அவரிடம் அந்த பங்குகள் இருக்கும் பட்சத்தில் அதனை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும், மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்கு பரிந்துரையில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதற்காக இந்த விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால் செப்டம்பர் இறுதிவரை இந்தியாவில் 515 நபர்கள் மட்டுமே முதலீட்டு ஆலோசகர்களாக பதிவு செய்துள்ளனர். அதில் சில விதி விலக்குகளை `செபி’ குறிப்பிட்டிருந்தது அந்த விதி விலக்குகளை இப்போது மறு பரிசீலனை செய்வதாக கூறியிருக்கிறது.
விதிமுறைகள்
இனி மியூச்சுவல் பண்ட் ஆலோ சகர்கள் மியூச்சுவல் பண்ட்களை விற்பனை செய்ய முடியாது. ஆலோ சனைக்கான கட்டணத்தை வாடிக்கை யாளர்களிடம் இருந்து வாங்க வேண்டும். இதனை ஆவணப்படுத்த வேண்டும். அதேபோல மியூச்சுவல் பண்ட் விற்பனையாளர்கள், தங்களை வெல்த் அட்வைசர், நிதி ஆலோசகர் என்று குறிப்பிடுகின்றனர். அப்படி தொடர்ந்து தங்களை அழைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். விநியோகம் மட்டுமே செய்வதாக இருந்தால் மியூச்சுவல் பண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் என்று மட்டுமே அழைத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் எந்தவிதமான ஆலோசனையும் வழங்கக் கூடாது.
இப்போது கணினி மற்றும் குறுந் தகவல் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதனால் பங்கு வர்த்தக பரிந்துரைகள் எளிதாக வழங்கப்படுகின்றன. குறுந்தகவல், பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. முதலீட்டு ஆலோசகர் அல்லாத யாரும் இனி இதுபோன்ற பரிந்துரைகளை எந்த வடிவத்திலும் வழங்க முடியாது. பரிந்துரைகள் வழங்கப்பட்டதை ஆவணப்படுத்த வேண்டும்.
மேலும் இது குறித்த சேவைகளை விளம்பரப்படுத்துவதற்கும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எவ்வளவு லாபம் கிடைக்கும் என்னும் உத்தரவாதம் வழங்கக்கூடாது. அதேபோல நிறுவனத்தின் இணைய தளத்தில் நிறுவனத்தை பற்றிய தகவல்கள் இருக்க வேண்டும்.
சில நிறுவனங்கள் வர்த்தகர்களைக் கவர்வதற்காக சில நாட்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்குகின்றன. அவை வழங்கக்கூடாது, தவிர ரோபோ அட்வைசரி, பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுதல் என்பது உள்ளிட்ட சில விஷயங்களுக்கான புதிய பரிந்துரைகளை `செபி’ கூறியிருக்கிறது.
முதலீட்டு ஆலோசகர்கள் மத்தியில் இவை விவாத பொருளாக இருக்கிறது. இது சரி என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். தவறு என்று கூறுபவர்களும் இருக்கிறார்.
ஒரு டாக்டர் பரிந்துரை செய்யும் அத்தனை விஷயங்களையும் ஆவ ணப்படுத்த முடியாது அதுபோல, நாங்களே எப்படி எங்களை ஆவணப்படுத்த முடியும். நீண்ட கால அனுபவம் கொண்டவர்களை முதலீட்டு ஆலோசகராக அனுமதிக்கலாம். தேவையெனில் ஆடிட்டர்களுக்கு கொடுப்பது போல முதலீட்டு ஆலோசகர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி வழங்கலாம். ஒவ்வொரு துறைக்கும் ஒருவித ரிஸ்க் இருக்கிறது. அதுபோல மியூச்சுவல் பண்ட் துறைக்கும் ஒழுங்குமுறை சார்ந்த ரிஸ்க் உள்ளது என்கிறார் நம்மிடம் கருத்துகளை பகிந்து கொண்ட முதலீட்டு ஆலோசகர் ஒருவர்.
இது குறித்து இன்னொரு ஆலோசகர் கூறும்போது, மருந்து கடை என்றால் மருத்து மட்டுமே கொடுக்க வேண்டும். மருத்துவம் பார்க்கக் கூடாது. அதுபோலதான் பரிந்துரைப்பதும், விற்பதும். தவிர தற்போது `செபி’-யின் புதிய பரிந்துரைகள்படி ஏன், எப்படி இதனை பரிந்துரை செய்தீர்கள் என்று கேள்வி எழவில்லை. பரிந்துரை செய்ததை ஆவணப்படுத்துங்கள் என்று மட்டுமே கூறுகிறது. தொழிலில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு இது போன்ற தேர்வுகளோ அல்லது ஆவணப்படுத்துவதோ பிரச்சினையாக இருக்காது என்றார்.
தகவல் தொடர்பு பெருகிவிட்ட இந்த காலத்தில் தவறான பரிந்துரைகளை தடுத்து முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் `செபி’-க்கு உள்ள அக்கறைக்கு வேறு காரணம் இருக்க முடியாது.