சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார் திலகவதி. உணவு தயாரிப்புத் துறையில் பல நஷ்டங்களுக்கு பிறகு துவண்டு விடாமல் திரும்பவும், அதிலேயே தனக்கான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சேவை என்கிற உணவு தயாரிப்பில் தினசரி இவரது உழைப்பு ஆச்சரியமளிக்கிறது. தனது பிராண்டான ‘சுபி சேவை’க்கு சென்னையில் பல பகுதிகளில் நிரந்தர வாடிக்கையாளர்களை உருவாக்கி யுள்ளார். இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிகவீதி’-யில் இடம் பெறுகிறது.
சொந்த ஊர் கோயம்புத்தூர். எனது அண்ணன் இங்கு வசித்ததால் குடும்பத்தோடு சென்னை வந்துவிட்டோம். திருமணத்துக்கு பிறகு ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என்கிற யோசனையோடு கணவரின் உதவியுடன் சென்னை அண்ணாசாலையில் எல்ஐசிக்கு அருகில் ‘சென்னை மெஸ்’ என்கிற பெயரில் ஓட்டல் தொடங்கினேன். அந்த ஏரியா அலுவலகம் நிறைந்த ஏரியா என்பதால் மதியம் மட்டும்தான் விற்பனை இருக்கும். இதனால் பெரிய நஷ்டமில்லை என்றாலும் சின்ன அளவில் சொந்த தொழில் செய்கிறோம் என்கிற திருப்தியாவது இருந்தது. அப்போது ஐடி நிறுவனங்கள் வளர்ந்து கொண்டிருந்த நேரம் என்பதால், அங்கு உணவகம் அமைப்பதற்காக அழைப்புகள் வந்தன. மதியத்துக்கு பிறகு நேரம் இருந்ததால் அதை முயற்சித்து பார்க்கலாம் என இறங்கினோம்.
ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்று அழைப்பார்கள். ஆனால் பெரிய உணவு நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடும் இடைவெளியில் எங்களை அழைத்துள்ளனர் என்பதை பிறகுதான் உணர்ந்தோம். அப்படி முதற்கட்டமாக இறங்கிய ஒரு சில நிறுவனங்களால் அதிக நஷ்டம் ஏற்பட்டது. எனது நகைகள், குடும்பத்தினரின் முதலீடுகள் எல்லாம் எங்களது நிர்வாக குறைகளால் கை நழுவி போனது என்றே சொல்லலாம். இதற்கிடையில் கடையை கவனிக்க நேரம் ஒதுக்காததால் அதையும் தொடர்ச்சியாக நடத்தவில்லை. 2008-ம் ஆண்டு கிட்டத்தட்ட எல்லாவற்றையும் இழந்து வீட்டில் முடங்கினோம். அடுத்த சில மாதங்களில் எனது கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் என்னால் சமாதானமாக இருக்க முடியவில்லை. எங்கே தவறு செய்தோம், ஏன் இவ்வளவு இழப்பு, எப்படி மீண்டு வருவது என்கிற சிந்தனையாகவே இருக்கும். ஆனால் அப்படியே முடங்கி இருப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. மீண்டும் சொந்த தொழில் என்று இறங்கினால் வீட்டில் தேவையில்லாமல் சிக்கல் வரும் என்பதால் சுமார் ஒரு வருடம் எனது தோல்விகளை நினைத்து சமாதானமாகவே இருந்தேன். 2010-ம் ஆண்டு இனிமேலும் சும்மா இருக்க வேண்டாம் என இந்த வேலைகளில் இறங்கினேன்.
கோவை மக்களின் உணவில் இதற்கென தனி இடம் உண்டு. முதலில் கோவை பழமுதிர் நிலைய கடைகளில் வைத்து முயற்சித்தேன். இது புழுங்கல் அரிசியில் செய்வதால் ஒருநாள் முழுவதும் வைத்திருந்து சாப்பிடலாம். அதிகாலையில் எழுந்து தயாரித்து கணவர் வேலைக்கு போகிற வழியில் உள்ள பழமுதிர் நிலைய கடையில் சேர்த்து விடுவேன். தவிர அக்கம் பக்க கடைகளிலும் கொடுக்கத் தொடங்கினேன். ஆனால் முதல் சில நாட்களில் அப்படியே ரிட்டன் ஆகிக் கொண்டிருந்தது. முன்பு போல பலத்த நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன். எனது சேவையை சாப்பிட்டு பார்த்த ஒருவர் போன் செய்து தினசரி வீட்டுக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டார். இதுவே எனக்கு நல்ல வழியாகப் பட்டது. கடைகளில் போடுவதை விட வீடுகளுக்கு நேரடியாக அறிமுகப்படுத்த என்ன வழி என்பதை அறிந்து உள்ளூர் செய்தி மலரில் விளம்பரம் கொடுத்தேன்.
வாடிக்கையாளர்களின் அழைப்பு எதிர்பார்த்தபடியே இருந்தது. அதற்கு பிறகு கடைகளில் போடுவதை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அளித்து வருகிறேன்.
இந்த ஆறு ஆண்டுகளில் முதலிரண்டு ஆண்டுகள் சற்றே சிரமமாக இருந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளில் நல்ல விற்பனை உள்ளது. பலவித தொழில் நெருக்கடிகளையும் கடந்து இன்று சராசரியாக 50 கிலோ வரையில் சப்ளை நடந்து கொண்டிருக்கிறது. தற்போது உற்பத்திக்கு ஆட்டோமேட்டிக் இயந்திரம், நிரந்தரமாக 5 பேருக்கு வேலை, பகுதி நேரமாக இருவருக்கு வேலை என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளேன் என்று குறிப்பிடலாம். தவறுகளிலிருந்து பாடம் கற்றவேண்டும். ஆனால் முயற்சியையும், கனவையும் என்றுமே கைவிடக்கூடாது என்பதுதான் எனது அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்து கொண்டது என்கிறார் திலகவதி.
vanigaveedhi@thehindutamil.co.in