இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்கள் ஸ்கூட்டர் தயாரிப்பில் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.
ஜப்பானுக்குத் தேவைப்படும் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளன. பன்னெடுங்காலமாக இரு நிறுவனங்களிடையே நிலவி வந்த தொழில்போட்டி இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
இருசக்கர வாகன சந்தை சுருங்கி வரும் நிலையில் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கில் இரு நிறுவனங் களும் இணைந்து ஸ்கூட்டர்களைத் தயாரிக்க உள்ளன. முதல்கட்டமாக தெற்கு ஜப்பானில் உள்ள ஹோண்டா ஆலையில் யமஹா நிறுவனத்தின் 50 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஸ்கூட்டர் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகவே சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் இரு நிறுவனங்களும் தனித்தனியாக இப் பிரச்சினையை எதிர்கொள்வதை விட ஒன்று சேர்ந்து சந்திக்கத் திட்டமிட் டுள்ளன. இதன் வெளிப்பாடாகவே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. தற்போது இரு நிறுவனங்களும் ஜப்பானில் மட்டும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. ஆசிய பிராந்தியத்தில் ஸ்கூட்டர்களுக்கு மிகுந்த கிராக்கி நிலவுகிறது. இதனால் இரு நிறுவனங்களும் இப்பிராந்தியத்தில் தனித்தனியே இயங்க முடிவு செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தற்போது ஆகும் தயாரிப்புச்செலவைக் காட்டிலும் குறைந்த செலவில் யமஹா நிறுவனத்தால் ஸ்கூட்டர்களை உரு வாக்க முடியும். ஏனெனில் தயாரிப் புக்கு ஹோண்டா ஆலையைப் பயன் படுத்துவது பிரதான காரணமாகும்.
இரு நிறுவனங்களும் இணைந்து பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன.
ஜப்பானில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை பெருமளவு சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் விற்பனை 10 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளது. இதனால் இரு நிறுவனங்களும் இணைந்து குறைந்த உற்பத்தி செலவில் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.
ஜப்பானில் ஒன்று சேரும் இவ்விரு நிறுவனங்களும் இந்தியாவில் கை கோர்த்தால் பல புதிய வாகனங்கள் மேம் பட்ட தொழில்நுட்பத்தில் கிடைக்கும். இங்கும் இரு நிறுவனங்களும் இணையுமா?