வணிக வீதி

குறள் இனிது: பிடித்த இடத்தை விடலாமா...?

சோம.வீரப்பன்

எண்ணியர் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின் குறள்:494

நம்ம குடியரசுத் தலைவருக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு தெரியுமா? இருவரும் பவனி வருவது பென்ஸ் காரில்தான்! ரஷ்ய அதிபரும், சிங்கப்பூர் அதிபரும் கூட உபயோகிப்பது பென்ஸ்தான். 1926-ல் ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவ னத்தின் கார்கள் இன்று உலகின் பல தலைவர்களால் உபயோகப்படுத்தப் படுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து , பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாட்டின் தலைவர்கள் அவர்கள் நாட்டிலேயே உற்பத்தியாகும் கார்களை உபயோகிப்பது கொள்கை காரணமாக இருக்கலாம். ஆனால் பெரும் பணக்காரர்களான புருனை சுல்தான், குவைத்தின் அமிர், ஸ்பெயின் அரச குடும்பத்தினர் கூட மெர்ஸிடஸ் பென்ஸ் வைத்திருக்கும் விசிறிகள்தான்.

கார்களின் முடிசூடா மன்னனாக பென்ஸ் தொடர்வதற்குக் காரணம் என்ன? காரின் அருகில் சென்று ஆராய்ந்து பாருங்கள். மலைத்துப் போவீர்கள். தேர் போல் கம்பீரம். ஒப்பிட முடியாத சௌகர்யம். எட்ட முடியாத தொழில்நுட்பம். இணையில்லாப் பாதுகாப்பு. உலகின் உன்னதமான கார் என்றும் உயரிய இடத்தை பல காலமாக பிடித்துக் கொண்டுள்ளது பென்ஸ்!

அதை விடுங்கள். எல்லோராலும் வாங்க முடிந்த எல்லோ ருக்கும் பிடித்த சாக்லேட் பற்றிப் பேசுவோம். 1845-ல் ஸ்விட்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட லிண்ட் சாக்லேட் இன்று உலகப் பிரசித்தம். நாக்கில் போட்டால் கரையும் என்பது சத்தியம். விளம்பரங்களில் காண்பிப்பார்களே அது போலக் கண்களை மூடி ரசிக்கலாம்.

இப்ப நம்ம ஊரில் ஆன்லைனில் கூடக் கிடைக்கிறது. விலையைப் பார்த்து விட்டு என்னை திட்டாதீர்கள். சரி. பல்பொருள் அங்காடிகளில் பெரெரோ ராச்சர் சாக்லேட்களைப் பார்த்திருப்பீர்கள். பலரும் சுவைத்திருப்பீர்கள். சும்மா குட்டி லட்டு மாதிரி இருக்கும்.

தங்கக் கலரில் ஜிகினா பேப்பர் சுற்றி அழகிய டப்பாக்களில் அலுங்காமல் குலுங்காமல் உட்கார்ந்திருக்கும் அழகே தனி. வாயில் போட்டால் கொஞ்சம் கொஞ்சமாக வேறுவேறு சுவைகளை உணர்வீர்கள்! சர்க்கரை வியாதிக்காரர்கள் மன்னிக்கவும். 1982 ல் இத்தாலியில் ஆரம்பிக் கப்பட்டது. இன்று உலகெங்கும் கொண்டாடப்படுவது ஏன்?

நாமெல்லாருமே தரத்தில் மயங்குகிறோம். அதற்காக ஏங்குகிறோம். இன்றும் பலரும் திருமணம் என்றாலும் நேர்முகத் தேர்வு என்றாலும் ரேமண்ட் சூட்டுடன் கொண்டாடுகிறார்கள். ஜில்லெட் பிளேடு போல வருமா என்று கேட்போரும் உண்டு.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நாங்கள் நேரந்தவறமையில் முன்னோ டிகள் என்று சொன்னால் கூட்டம் அந்தப்பக்கம் பறக்கிறது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் போட்டி இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் இவர்கள் பல ஆண்டுகளாகத் தமக்கென்று ஒரு தனித்துவம், தனியிடம் அமைத்துக்கொண்டு அதை யாரும் பிடிக்க முடியாதபடி பார்த்துக் கொள்கிறார்கள்!

ஒருவன் தனக்குச் சாதகமான இடத்தை அறிந்து கொண்டு அதனை விடாது பற்றிக்கொண்டால், அவனை வெல்ல நினைக்கும் பகைவர்களின் எண்ணம் நிறைவேறாது எனும் குறள் வணிகப் போட்டியாளர்களுக்கும் பொருந்துகிறது.

தொடர்புக்கு - somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT