இந்தியாவின் வாகன உலகம் விரி வடைந்து வருகிறது. வெளிநாட்டு கார்கள் ஒருபக்கம் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து வரும் நிலை யில் சாலைப் போக்குவரத்துக்கு எளிதான அதேசமயம் இளைஞர்களைப் பெரிதும் கவரும் இரு சக்கர வாகனங்களின் பெருக்கமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இந்தியச் சந்தையில் தனது தயாரிப்புகளைக் களமிறக்கியுள்ளது இத்தாலியைச் சேர்ந்த எம்வி அகஸ்டா. இதற்காக புணேயைச் சேர்ந்த கைனடிக் குழுமத்துடன் கை கோர்த்துள்ளது.
மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் பகுதி யளவில் எம்வி அகஸ்டாவில் பங்கு களைக் கொண்டுள்ளது. இதனால் இந்நிறுவன பைக்குகளும் பென்ஸ் கார் களைப் போன்றே அதிக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மூன்று மாடல் மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ. 16.78 லட்சம் முதல் ரூ. 50.10 லட்சம் வரையாகும்.
இத்தாலி நிறுவனத்துடன் கை கோர்த்ததன் மூலம் மீண்டும் இரு சக்கர வாகன உலகில் பிரவேசித்துள்ளது கைனடிக் குழுமம். 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருசக்கர வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இந்நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்புக்கு ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்துடன் சேர்ந்தது. இவ்விரு நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பான கைனடிக் ஹோண்டா இந்தியச் சந்தையில் மிகவும் பிரபலம். பிறகு ஜப்பான் நிறுவனம் உறவை முறித்துக் கொண்டதால் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்நிறுவனத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இத்தாலி நிறுவனமான அகஸ்டா பைக்குகள் அகமத் நகரில் உள்ள கைனடிக் ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளன. இதற்காக ரூ. 5 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பகுதியளவில் அசெம்பிள் செய்யப்பட்டு இறக்குமதியாகும் மோட்டார் சைக்கிள்கள் இந்த ஆலையில் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்படும்.
இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் இந்த பிரீமியம் மோட்டார் சைக்கிளை விற்பதற்கான ஒப்பந்தத்தை கைனடிக் நிறுவனம் இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ளது. இந்தியாவில் எம்வி அகஸ்டா இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் செயல்படும்.
எப் 4, எப்3 மற்றும் புருடேல் 1090 என்ற பெயரில் இந்தியாவில் உள்ள 6 விற்பனையகங்களில் இவை விற்பனை செய்யப்பட உள்ளது. முதலாவது விற்பனையகம் புணேயில் திறக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன.
சர்வதேச அளவில் 2015-ம் ஆண்டில் இந்நிறுவனம் 8 ஆயிரம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்துள்ளது. இதில் ஆசிய பிரிவின் பங்களிப்பு 22 சதவீதமாகும். இப்பிரிவு 12 சதவீத அளவுக்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணக்காரர்கள் அதிகரித்துவரும் இந்தியச் சந்தையில் இதுபோன்ற பிரீமியம் பைக்குகளுக்கு மிகச் சிறந்த சந்தை இருப்பதையே இந்நிறுவன வருகை உணர்த்துகிறது.