வணிக வீதி

காற்று மாசுபாடு

செய்திப்பிரிவு

மனிதன் வாழ அடிப்படையானது காற்று. சுத்தமான காற்றை சுவாசிக்கத் தான் நாம் எல்லோரும் விரும்புவோம். ஆனால் நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா? பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதுவும் காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.

நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா என காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் ஏராளம். இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதுவும் பெரிதாக வெற்றி அடைவதில்லை. அரை கிலோமீட்டர் தொலைவுக்கே வண்டியை எடுத்துச் செல்லும் நாம் எப்படி மாசுபாட்டை குறைக்கப்போகிறோம். சீனா மற்றும் இந்தியாதான் அதிக அளவு மாசுபாடு உடைய நாடாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதற்கு மக்கள் தொகை காரணமாக இருக்கலாம் ஆனால் மாசுபாட்டை குறைக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

ஏனெனில் அதிகரிக்கும் மாசுபாட்டால் நம் தலைமுறை மட்டும் அல்ல எதிர்வரும் தலைமுறையையும் சேர்த்து பாதிக்கும். தற்போது பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்தமான காற்றை பணம் கொடுத்து வாங்கி சுவாசித்து கொண்டிருக்கிறார்கள் சீனர்கள். இனியும் நம் விழித்துக் கொள்ளவில்லையென்றால் நம் நாட்டிலும் சுத்தமான காற்றை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நாள் வரும்.

# காற்றில் இருக்கும் நுண்துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது.

# மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், மேற்கு பசிபிக் நாடுகள்தான் அதிக மாசுபாடு அடைந்த நாடுகளாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

# 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரசு காற்றின் தரக் குறியீட்டை வெளியிட்டது. பொதுமக்களுக்கு நாள்தோறும் காற்றின் தரம் குறித்து அறிவிக்கவும் மாசுபாடு குறித்து தெரிவிப்பதற்கும் இந்த தரக் குறியீடு முறை தொடங்கப்பட்டது.

# வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியாவில் வாகனங்கள் வெளியிடும் புகையால் 70 சதவீத காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

# 1951-ம் ஆண்டு இந்தியாவில் 30 லட்சம் வாகனங்கள் மட்டுமே இருந்தது. 2001ம் ஆண்டு தகவலின் படி 5.83 கோடி வாகனங்கள் இருந்தன. இது தற்போது மூன்று மடங்காக அதிகரித்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

# தனிநபர் வாகனங்கள் அதிகரிப்பதால் 2001-02ம் ஆண்டில் 75.7 சதவீதமாக இருந்த பொதுப் போக்குவரத்து பயன்பாடு 2030-31ம் ஆண்டில் 44.7 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

# ஒரு வருடத்தில் ஒரு வாகனத்திலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 1.92 டன்

# இரு சக்கர வாகனத்தை ஒரு நாள் பயன்படுத்தும் போது வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 8000 கிராம்.

# வாகன மாசுப்பாட்டை குறைப்பதற்காக இந்தியா பாரத் ஸ்டேஜ் விதிகளை அறிமுகப்படுத்தியது. தற்போது மத்திய அரசு பாரத் ஸ்டேஜ் 4 விதிகளிலிருந்து நேரடியாக பாரத் ஸ்டேஜ் 6 விதிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது. இதனால் வாகனங்களில் இன்ஜின்களில் இருந்து வெளிவரும் மாசுக்கள் கட்டுப்படுத்தப்படும்.

# சீனாவில் காற்றில் இருக்கும் மாசின் அளவு, பாதுகாப்பான வரம்பைக் காட்டிலும் 20 மடங்கு அதிகம். இதனால் ஆண்டுக்கு 3.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான மக்கள் உயிரிழக்கின்றனர்.

# சீனாவில் 3 லிட்டர் காற்று அடைக்கப்பட்ட ஒரு பாட்டிலின் விலை 32 டாலர். இந்திய மதிப்பில் 2,100 ரூபாய்.

# சீனா தலைநகரான பெய்ஜிங் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 21 சிகெரட்டை பிடிப்பதற்கு சமம் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு மாசுள்ளதாக காற்று இருக்கிறது.

# 2016-ம் ஆண்டில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்கள் (ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் உள்ள மைக்ரோகிராம்ஸ் நுண்துகள்கள்)

ஈரான் - ஜாபோல் - 217

இந்தியா - குவாலியர் - 176

இந்தியா - பாட்னா - 149

இந்தியா - அலாகாபாத் - 170

இந்தியா - ராய்ப்பூர் - 144

இந்தியா - டெல்லி

சவுதி அரேபியா - அல் ஜூபாயில் - 152

சீனா - ஜிங்டாய் - 128

சீனா - பயோடிங் - 126

சவுதி அரேபியா - ரியாத் - 156

# கடந்த ஐந்து வருடங்களில் காற்று மாசுபாட்டின் அளவு சர்வதேச அளவில் 8% அதிகரித்துள்ளது.

# உலகளவில் காற்று மாசுபாடு அடைந்த 10 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன.

# சர்வதேச அளவில் காற்று மாசுபாட்டால் மிக அபாய கட்டத்தில் உள்ள நகரங்களின் எண்ணிக்கை 3,000

# 50 சதவீத இந்திய நகரங்கள் காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இதனால் இந்தியர்களின் ஆயுட்காலம் 3 முதல் 4 ஆண்டுகள் குறைவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

# சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் 181 நாடுகளில் இந்தியாவின் இடம் 141

# இந்தியாவில் இறப்பதற்கு உரிய காரணங்களில் காற்று மாசுபாடு 5-வது இடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் 35,000 பேர் காற்று மாசுபாட்டால் இறந்து போகின்றனர்.

# 2.5 முதல் 10 வரை மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண் துகள்கள் பிஎம் 10 என்று அழைக்கப்படுகின்றன. இவை உடலுக்கு ஓரளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை.

# 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட நுண்துகள்கள் பிஎம் 2.5 என்று அழைக்கப்படுகின்றன. இந்த பிஎம் 2.5 நுண்துகள்கள்தான் உடலுக்கு மிக தீங்கை விளைவிக்கும் தன்மை கொண்டது. இந்தியாவில் இந்த துகள்கள்தான் அதிகம் இருக்கிறது.

# 141 இந்திய நகரங்களில் 78 சதவீத நகரங்கள் பிஎம் 2.5 நுண்துகள்கள் நிர்ணயித்த அளவை விட அதிகமாக இருக்கிறது.

# இந்தியாவில் 3 கோடி மக்கள் காற்று மாசுபாட்டால் ஏற்படும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

# காற்று மாசுபாட்டால் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT