சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கிக்கு செல்வதற்கு இரண்டு காரணங்கள்தான் இருந்தன. பணத்தை டெபாசிட் செய்ய அல்லது கடன் வாங்க என இரண்டு தேவைகளுக்கு மட்டும்தான் வங்கிக்கு சென்று வருவார்கள். இப்போதும் இந்த இரண்டு செயல்கள்தான் பிரதானம். ஆனால் அதற்கான வழிமுறையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கடன், கிரெடிட் கார்டு, வென்ச்சர் கேபிடல் பல வடிவங்களை பெற்று அடுத்தாக பி2பி லெண்டிங் (peer to peer lending) முறைக்கு வந்திருக்கிறது.
பி2பி லெண்டிங் என்றால்?
இதுவும் கடன் கொடுக்கல் வாங்கல்தான் ஆனால் முறை வேறு. தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றம் கண்டிருக்கிறது. புரிந்துகொள்ளும்படி சொல்ல வேண்டும் என்றால் இணையதளம் மூலம் கடன் வாங்குவது என்று வைத்துக்கொள்ளலாம். கடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையை கையாளுவதற்கு என்றே சில இணையதளங்கள் உள்ளன.
அந்த தளங்களில் நீங்கள் யார், உங்களுக்கு எவ்வளவு தொகை கடன் வேண்டும் என்பதை தெரிவிக்கலாம். பணம் இருக்கும் தனிநபர்கள் உங்களுடைய தகுதியை வைத்து கடன் கொடுக்கலாம். இதுதான் பி2பி லெண்டிங் ஆகும்.
வங்கியில் கடன் வாங்க முடியாத நிலை, என்னிடம் அடமானம் வைக்க சொத்துகள் இல்லை, உடனடியாக கடன் வேண்டும் என்னும் பட்சத்தில் இதுபோன்ற இணையதளங்களை நாடலாம். இணையதளத்தை நம்பி ஏன் ஒருவர் கடன் கொடுக்க முன்வர வேண்டும். காரணம் மிக எளிது. அதிக வட்டி. வங்கியில் டெபாசிட் செய்யும் போது அதிகபட்சம் 9 சதவீதம் கிடைக்கும். ஆனால் இந்த இடத்தில் நீங்கள் சொல்வதுதான் வட்டி என்பதால் (வாங்குபவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்!) கூடுதல் வட்டி கிடைக்கும். இந்தியாவில் இதுபோல இயங்கும் பேர்சென்ட் (Faircent) இணையதளத்தில் சராசரி வட்டி விகிதம் 24 சதவீதமாக இருக்கிறது.
இது கிரவுட் பண்டிங் அல்ல
பலரும் இது கிரவுட் பண்டிங் போல என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கிரவுட் பண்டிங் அல்ல. கிரவுட் பண்டிங் என்பது ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கு நிதி திரட்டுவார்கள். இது பெரும்பாலும் நன்கொடையாக இருக்கும் அல்லது செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப பங்குகள் வழங்கப்படும். ஆனால் பி2பி லெண்டிங் என்பது கடன். யார் வேண்டுமானாலும் கடன் வாங்கலாம் கொடுக்கலாம். இங்கு வட்டி மட்டுமே கிடைக்கும்.
இப்போது இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டவை. சீனாவில் இதுபோல 2000 இணையதளங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ம் ஆண்டு உலகளவில் 22 லட்சம் கோடி டாலர் பரிவர்த்தனை நடந்தது. 2015-ம் ஆண்டில் 440 கோடி டாலர் கடன் பி2பி மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளில் முறைப்படுத்தப்பட்ட துறையாக இது இருக்கிறது. இந்தியாவில் இந்த துறை வளர்ந்து வரும் அதே நேரத்தில் முறைப்படுத்தப்படாமலும் இருக்கிறது என்பதை கருத்தில் கொண்ட ரிசர்வ் வங்கி இந்த துறையினை முறைப்படுத்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதன் மீதான கருத்துகளை வரும் மே 31-ம் தேதிக்குள் இது சம்பந்தமானவர்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விதிமுறைகள்?
முதல் விஷயம் கடன் வாங்குபவர் களுக்கும் கொடுப்பவர்களுக்கும் இடையே பாலமாக மட்டுமே இது போன்ற நிறுவனங்கள் இருக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் வங்கி போல செயல்பட்டு பணத்தை கையாளக் கூடாது. நேரடியாக சம்பந்தப் பட்டவர்களின் வங்கி கணக்கில் பரிமாற்றம் நடக்க வேண்டும். வட்டி தொடர்பாக எந்தவிதமான உத்தரவாதமும் கொடுக்க கூடாது, குறைந்தபட்ச முதலீடு ரூ.2 கோடி வேண்டும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயரதிகாரிகளின் இந்த துறைக்கு தகுதி உடையவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் பணம் நேரடியாக பரிமாற்றம் நடப்பதை இதுபோன்ற நிறுவனங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வந்த சில நாட்களில் பேர்அசெட்ஸ் என்னும் பி2பி நிறுவனத்தில் ஜேஎம் பைனான்சியல் 9.84 சதவீத பங்குகளை கையகப்படுத்தியிருக்கிறது. பொது வாக விதிமுறைகள் என்பது துறையின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் நம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் வளர்ச்சிக்கு உதவுமா அல்லது முட்டுக்கட்டையாக இருக்குமா என்பதை விரைவில் பார்ப்போம்.