நல்ல பெயரை சம்பாதித்தால் கடன் கிடைக்குமா? எப்படி கிடைக்கும்? எங்கு கிடைக்கும் என அவசரப்பட வேண்டாம். உங்கள் ஊரிலேயே..., உங்கள் பக்கத்து வீட்டினருக்கு.., ஏன் உங்களுக்கும் கூட நற்பெயருக்கு கடன் கிடைக்கும் காலம் உருவாகியுள்ளது என்றால் நம்புங்கள்... ஆம் அதற்கு முன்னர் நாம் மைக்ரோ பைனான்ஸ்கள் குறித்து கொஞ்சம் பார்த்தால் குழம்ப மாட்டோம்.
கடந்த பத்து ஆண்டுகளில் மைக்ரோ பைனான்ஸ்களின் செயல்பாடுகளும் பல வகைகளிலும் நம்மை வந்தடைந்திருக்கிறது. காரணம் நமது நிதி தேவைகள். சிறிய நிதி தேவைகளுக்கு கந்து வட்டி என்கிற அதிக வட்டிக்கு பணம் வாங்கி திணறும் கொடுமையிலிருந்து திசை மாற்றியதில் பெரும் பங்கு இதற்கு உண்டு.
இந்தியாவில் வங்கிச் சேவைகள் எந்த அளவுக்கு வளர்ந்ததோ அதே அளவு மக்களுக்கு வங்கிச் செயல்பாடுகள் என்றால் என்னவென்றே தெரியாத நிலைமையும் இருக்கத்தான் செய்தது. முறைப்படுத்தப்பட்ட வங்கிச் சேவைக்குள் வராமலேயே பல கோடி இந்தியர்கள் இருந்தனர், இருக்கின்றனர். இதுவும் மைக்ரோ பைனான்ஸ் வளர முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
கடந்த பத்தாண்டுகளில் வங்கிகள் செல்லாத சின்ன கிராமத்துக்கும் மைக்ரோ பைனான்ஸ் செயல்பாடுகள் சென்றிருக்கிறது. இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மிகப் பெரிய மாற்றம் அடைந்திருக்கிறது. அன்றாட மற்றும் குறுகிய கால நிதி தேவைகளை பூர்த்தி செய்த மைக்ரோ பைனான்ஸ் துறை குறிப்பிட்ட பிரிவு மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதும் உண்மை. அதன் தொடர்ச்சிதான் மத்திய அரசின் முத்ரா வங்கி உள்ளிட்ட திட்டங்கள். கந்துவட்டி, மீட்டர் வட்டி போன்ற கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வந்ததில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
அதுபோல முறைப்படுத்தாத தொழில் துறையினருக்கான வீட்டுக்கடன் துறையும் கடந்த பத்தாண்டுகளில் வளர்ந்து உள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன மாத சம்பளக்காரர்களுக்கு எளிதாக வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகள் சிறு தொழில் செய்பவர்கள், வணிகர்கள், விவசாயிகளுக்கு எளிதாக கடன் கொடுப்பதில்லை. கடனை திருப்பி செலுத்தும் திறனாக மாதச் சம்பளத்தை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர் என்பது இவர்களின் குற்றச்சாட்டு. இந்த நிலையில் முறைப்படுத்தப்படாத தொழில்துறையினரின் வீட்டுக்கடன் தேவைகளை தனியார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள் நிறைவேற்றி தொடங்கி அந்த துறையும் வளர்ந்து விட்டது.
தற்போது இதுபோன்ற முறைப்படுத்தப்படாத தொழில் துறையினருக்கு குறிப்பாக சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. தற்போது வங்கியல்லாத நிதிச் சேவைகள் துறையில் வளரும் கருத்தாக இது உள்ளது. இதனையொட்டி எஸ்எம்இ பைனான்ஸ் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலை விரிவாக்கவோ அல்லது சீசனுக்கு ஏற்ப புதிய முதலீட்டு தேவைகளுக்கோ இந்த நிறுவனங்கள் தொழில் முனைவர்களுக்கு உதவுகின்றன.
ஏற்கெனவே வங்கிகளில் சிறு குறுந் தொழில் கடன் பிரிவுகள் இருந்தாலும், இதில் கடன் வழங்கும் நடைமுறைகள் மிக சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது. வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரித்து வருவதால் மேலாளர்கள் தங்கள் நிலையிலான முடிவெடுக்கும் அதிகாரம் குறைந்துள்ளது என்கின்றனர். மேலும் கடன் தொகைக்கு ஏற்ற உத்திரவாதங்கள், பிணை போன்றவை கோரப்படுவதால் எஸ்எம்இ துறையினர் வங்கிகளில் கடன் வாங்குவது சிரமம். ஏனென்றால் வங்கிகள் கடனுக்காக கோரும் ஆவணங்கள் பெரும்பாலானவர்களிடம் இருப்பதில்லை.
இது போன்றவர்களுக்கு எந்த பிணையும் இல்லாமல் குறுகிய கால கடன்களை அளிக்க இப்போது பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதே சமயத்தில் இவ்வாறு குறிப்பிட்ட பிரிவினருக்கான நிதிச் தேவைகளை பூர்த்தி செய்வது மிகப் பெரிய சவாலானது.
இது குறித்து அறிந்துகொள்ள இந்த துறையில் ஈடுபட்டுள்ள வெரிடாஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அருள்மணியை சந்தித்தோம்.
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவிகள் சென்று சேரவில்லை என்பதுதான் நமது முன் உள்ள முக்கிய சவால் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் சில நாட்களுக்கு முன் ஒரு கருத்தை முன்வைத்தார். முறைப்படுத்தப்படாத தொழில்கள், சிறு தொழில்களை மேற்கொள்பவர்களுக்கு நிதித் தேவைகள் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு வட்டி விகிதம் அதிகம் குறைவு என்பதெல்லாம் அடுத்த பிரச்சினைகள்தான். முதல் பிரச்சினை தேவையான மூலதனம் கிடைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கந்து வட்டி போன்ற மிக கடுமையான வட்டி கொடுமைகளில் சிக்க வேண்டியிருக்கும்.
பல ஆண்டுகளாக சிறிய அளவில் வியாபாரம் செய்து வருபவர் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும், அல்லது தொழிலுக்கு தேவையான நேரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் என நினைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். வளர்ந்த வங்கிகளில் உள்ள நடைமுறைகள் அவருக்கு சரியாக இருக்காது.
காய்கறி கடை வைத்திருப்பவர் பண்டிகை நாளில் விற்பனை அதிகமாக இருக்கும் அதற்கு கூடுதல் முதல் வேண்டும் என்றால் வங்கிகளில் கிடைக்காது. அவரது நிதி தேவை இரண்டு நாட்கள் அல்லது இரண்டு மாதங்கள் என்றால் வளர்ந்த வங்கிகளில் அவ்வாறு கடன் கொடுக்க நடைமுறைகள் இல்லை. இதனால்தான் அவர்கள் கந்து வட்டி அல்லது மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிகளை நாடுகின்றனர். ரூ. 5000 த்துக்கு ஒரு நாளைக்கு ரூ.500 வட்டி என்றாலும் வாங்குகிறார்கள்.
இது போன்ற நிலைமைகளில்தான் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். இது போன்ற நிதி சேவை நிறுவனங்கள் விதிக்கும் வட்டி விகிதங்கள் வங்கிகள் வசூலிக்கும் வட்டியை விட இரண்டு மூன்று சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் சிறு குறு தொழில் துறையினருக்கு எந்த உத்திரவாதமும் இல்லாமல் கடன் அளிப்பது, அவர்களிடம் பொறுமையாக திருப்பி வாங்குவது போன்ற காரணங்களால்தான் சில சதவீதம் வட்டி அதிகம் உள்ளது. ஒரு தொழில் முனைவர் கடன் வாங்க அடிப்படை தகுதி அவரது நற்பெயர்தான் என்றார் இவர்.
பொதுவாக முறைப்படுத்தப்பட்ட இந்த நிறுவனங்கள் நம்பகமில்லாத தொழில்முனைவர்களுக்கு கடன் கொடுத்து ரிஸ்க் எடுப்பதில்லை, நம்பகமான உண்மையிலேயே நிதி தேவை இருக்கிற தொழில் முனைவர்களுக்கு கடன் வழங்குகின்றன. நேரடியாக அவர்களது இடங்களுக்கே சென்று அவர்களது தேவைகள் திருப்பி செலுத்தும் பக்குவம் போன்றவற்றை அடையாளம் காண்கின்றனர். கடனை திருப்பி செலுத்துவதில் நெருக்கடிகள் கொடுக்காமல், அவகாசம் கொடுத்து வாங்கும் நடைமுறைகளை வைத்துள்ளன.
தவிர கடன் வாங்குவதற்கு பிணையம், அலைச்சல், அடமானம் எதுவும் தேவையில்லை. தொழில் முனைவரது அனுபவம், அவர் மீது நற்பெயர் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலேயே கடன் வழங்குகின்றன. இந்த அணுகுமுறை தொழில் முனைவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை கொடுக்கக்கூடியது. நற்பெயரை வைத்துக் கொண்டு நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் இது போன்ற நிறுவனங்கள் வளர்வது இந்திய பொருளாதாரத்துக்கு ஏறுமுகம்தான்.