நிகேஷ் அரோரா. கார்ப்பரேட் உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் மூன்றாவது நபர் இவர். 900 கோடி ரூபாய் (13.5 கோடி டாலர்). ஜப்பானை சேர்ந்த சாப்ட் பேங்க் நிறுவனத்தின் தலைவராக 2014-ம் ஆண்டு முதல் பணிபுரிகிறார். முன்னதாக கூகுள் நிறுவனத்தில் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை பல முக்கியமான பொறுப்புகளை வகித்து வந்த இந்தியர். சாப்ட் பேங்க் நிறுவனத்தின் பல முக்கியமான முதலீட்டு முடிவுகளை எடுப்பவர் இவர். சாப்ட் பேங்க் சார்பாக பல இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.
பல உச்சங்களை தொட்டிருந் தாலும், இப்போது சாப்ட் பேங்க் நிறுவனத்தின் முதலீட்டாளர்களால், நிகேஷ் அரோராவின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. பிரச்சினை இதுதான்.
சாப்ட் பேங்க் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடவிரும்பாத சில முதலீட்டாளர்கள், அமெரிக்க சட்ட நிறுவனம் மூலம் சாப்ட் பேங்க் இயக்குநர் குழுவுக்கு 11 பக்க கடிதத்தை ஜனவரி 20-ம் தேதி எழுதி இருக்கிறது.
அதில் சில்வர் லேக் என்னும் நிறுவனத்தில் நிகேஷ் அரோரா 2007-ம் ஆண்டு முதல் ஆலோசகராக இருக்கிறார். இன்னொரு முதலீட்டு நிறுவனத்தில் ஆலோசகராக இருக்கும் ஒருவர் எப்படி சாப்ட்பேங்கின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். அவரது தவறான செயல்களுக்கு இயக்குநர் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை அவரை நீக்க வேண்டும் என்று குற்றம் சாட்டி இருக்கிறது.
தவிர அவரது முதலீட்டு முடிவுகள் இதுவரை பெரிய வெற்றியை அடையவில்லை. குறிப்பாக இந்தியாவில் சாப்ட்பேங்க் முதலீடு செய்துள்ள ஹவுசிங் டாட் காம் பிரச்சினையில் இருக்கிறது. இதுபோல சில முதலீடுகள் பிரச்சினையில் உள்ளன.
மூன்றாவது அவரது சம்பளம் மிக அதிகம். தவறான முடிவுகள் எடுக்கும் ஒருவருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் என்று குறிப்பிட்ட சில முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அந்த முதலீட்டாளர்கள் யார், சாப்ட்பேங்கில் எத்தனை சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் சாப்ட்பேங்கின் தலைவர் மசயோஷி சான் (Masayoshi Son) கூறும்போது, நிகேஷ் அரோராவின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் மீது 1,000 சதவீத நம்பிக்கை வைத்திருக்கிறேன். சில்வர் லேக் நிறுவனத்தின் ஆலோசகராக இருப்பது சாப்ட்பேங்குக்கு தெரியும். அவரது ஆலோசகர் பதவியினால் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 18 மாதங்களாக இந்த நிறுவனத்தில் இருக்கிறேன். நிறுவனத்தை மேம்படுத்தவே நான் நடவடிக்கை எடுத்துவருகிறேன். சில்வர் லேக் நிறுவனத்துடனான என்னுடைய தொடர்பு முடியப்போகிறது. கடந்த வருடத்தில் 10 முதல் 20 மணிநேரங்கள் மட்டுமே அங்கு செலவிட்டிருக்கிறேன். என்னுடைய முடிவுகள் எனக்காக பேசும் என்று நிகேஷ் அரோரா குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் சாப்ட்பேங்க் செய்தி தொடர்பாளர் கூறும்போது, சாப்ட் பேங்க் நீண்ட கால அடிப்படையில் செயல்படும் நிறுவனம், தவிர ஒருவரது முதலீட்டு முடிவுகளை 18 மாதங்களில் மதிப்பிட முடியாது. அவரது பல முதலீடுகள் சிறப்பாக உள்ளன. மேலும் அவரின் திறமையை அடிப்படையாக வைத்துதான் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. தவிர 48.3 கோடி டாலர் மதிப்பு சாப்ட் பேங்கின் பங்குகளை நிகேஷ் அரோரா வாங்கி இருக்கிறார். நிறுவனத்தில் தவறான முடிவு எடுப்பவர் ஏன் இவ்வளவு தொகை முதலீடு செய்யப்போகிறார் என்று சாப்ட் பேங்க் கேட்டிருக்கிறது.
முடிவு மசயோஷி சான் கையில் உள்ளது.