முக்கனிகளில் ஒன்றான வாழை அதிகம் விளையும் ஊர்களில் ஒன்று தொட்டியம். இங்குள்ள 15 விவசாயிகள் ஒன்று சேர்ந்து உலர் வாழைப்பழ உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த தொழில் கூட்டு முயற்சி என்றாலும், சில தனிநபர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக இருந்து வருகிறது என்பதால் இந்த வாரம் இவர்களது அனுபவம் இடம் பெறுகிறது.
அதிகபட்சம் 3 நாட்களுக்குமேல் தாங்காத வாழைப்பழத்தை 6 மாதங்கள் வரை வைத்திருந்து சாப்பிடும் அளவுக்கு சாத்தியமாக்கியுள்ளனர் இவர்கள். இந்த தொழிலைத் தொடங்க முழு முயற்சி எடுத்தவரும், தொழிலை இப்போது முன்னின்று நடத்திவரும் குழுவின் செயலாளருமான அஜிதன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இவர் கரும்பு உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைபார்த்து வந்தவர். குடும்ப சூழ்நிலை காரணமாக இப்போது முழு நேர விவசாயி.
வாழை விவசாயம் அதிக இடர்களைக் கொண்டது. நல்ல பருவத்திலேயே காய்களை வெட்டி அனுப்பிவிட வேண்டும். விலை கிடைக்கட்டும் என்று காத்திருக்கவோ, அதிக நாட்களுக்கு பாதுகாக்கவோ முடியாது. காய்கள் பழுத்துவிட்டால் அதிகபட்சம் மூன்று நாட்கள்தான் தாங்கும். பிறகு சும்மா கொடுத்தாலும் மக்கள் வாங்க மாட்டார்கள். இப்படித்தான் எல்லா பகுதியிலும் வாழை விவசாயிகள் உள்ளனர் என்று தங்களது உற்பத்தி இடர்கள் குறித்த முன்னுரையோடு தொடங்கினார்.
நான் பொறுப்பில் உள்ள வாழை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பல ஊர்களிலும் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். இதனையொட்டி விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் தொடர்பில் இருந்தனர். வாழை உற்பத்தியாளர்களுக்கு உதவும் விதமாக பேயர் சயின்ஸ் நிறுவனம் உலர் தொழில்நுட்பத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அவர்கள் பாலிகார்பனேட் தொழில்நுட்பத்திலான தகடுகளை இந்தியாவில் தயாரித்து தாய்லாந்துக்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த தகடுகள் சூரிய ஒளியின் வெப்பத்தை அதிகரித்து கொடுக்கும் தன்மை கொண்டவை. அதைக் கொண்டு அமைக்கும் குடிலினுள் பழங்களை வைத்தால் விரைவில் உலர்ந்துவிடும். தாய்லாந்து நாட்டு விவசாயிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை நீங்களும் மேற்கொள்ளலாம் என அவர்கள் ஊக்கப்படுத்தினர்.
இந்த குடிலை பேயர் நிறுவனமே எங்களுக்கு அமைத்து தர முன்வந்தது. இதற்கு ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடனுதவியையும் பேயர் நிறுவனம் ஏற்பாடு செய்தது. தனிநபராக இந்த தொழிலை மேற்கொள்வதை விடவும் விவசாயிகள் குழுவாக மேற்கொள்ளலாம் என முடிவு செய்து இந்தத் தொழிலை ஆரம்பித்தோம்.
பழுத்த வாழைப்பழங்களை தேன் கலந்த நீரில் நனைத்து எடுத்து இந்த குடிலுக்குள் வைப்போம். 40 மணி நேரத்தில் பழத்தின் 88 சதவீத ஈரப்பதம் குறைந்துவிடும். இதை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஆரம்பத்தில் பேக்கிங் முறைகளையும் கைகளால்தான் செய்து வந்தோம். இப்போது இதை இயந்திரமயமாக்கியுள்ளோம். தேவையான வாழைப்பழங்கள் எங்கள் குழு மூலம் கிடைத்துவிடுகிறது.
மதுர் என்கிற நிறுவன பெயரில் யெம்மி பனானா என்கிற பிராண்டில் விற்பனையாகிறது. ஆரம்பத்தில் கடும் போராட்டம்தான். புதிய பொருள் என்பதால் கண்காட்சிகளில் மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தோம். பழ கொள் முதல், ஆட்கள் செலவு, விற்பனை செலவு எல்லாம் கணக்கிட்டால் பெரிய நஷ்டம்தான். ஆனால் இதற்கான சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்தினால் லாபம் கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தினோம்.
கோயம்புத்தூரில் இதற்கு பெரிய சந்தை உள்ளது. குறிப்பாக கேரள மக்கள் இதை விரும்பி வாங்குகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் உயர் வகுப்பு மக்கள் விரும்பி வாங்குகின்றனர். அமேசான் இணையதளத்தின் மூலமும் விற்பனை செய்து வருகிறோம். இப்போது 15 விவசாயிகள் தவிர முழு நேரமாக 12 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.
ரூ.5 லட்சம் இருந்தால் இந்த தொழிலை அனைவரும் தொடங்கலாம். எங்களது முயற்சிகளின் பலனாக மத்திய, மாநில அரசுகளும் இதை ஊக்குவிக்கிறது. இந்த குடிலை அமைக்க மாநில அரசு 50 சதவீத மானியம் கொடுக்கிறது.
உலர் பழங்கள், காய்களில் ஈரப்பதம் குறைவு என்பதைத் தவிர வேறு சத்து மாறுதல்கள் எதுவும் கிடையாது என்பதால் எதிர்காலத்தில் அதிக சந்தை வாய்ப்புகள் இந்த தொழிலுக்கு உள்ளது என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார். மதிப்புக் கூட்டு தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளுக்கு மகத்தான லாபம் கிடைக்கட்டும்.
உலர் பழங்கள், காய்களில் ஈரப்பதம் குறைவு என்பதைத் தவிர வேறு சத்து மாறுதல்கள் எதுவும் கிடையாது என்பதால் எதிர்காலத்தில் அதிக சந்தை வாய்ப்புகள் இந்த தொழிலுக்கு உள்ளது என்கிற நம்பிக்கை இருக்கிறது.
- maheswaran.p@thehindutamil.co.in