வணிக வீதி

சென்னையில் `ஹீட் அலவன்ஸ்’ கேட்கும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்

செய்திப்பிரிவு

கோடைக் காலம் தொடங்கும் முன்பாகவே வெயிலின் கொடுமை சென்னை மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. வெயிலின் கொடுமையைத் தாக்குப் பிடிக்க நிறுவனங்கள் தங்களுக்கு ``ஹீட் அலவன்ஸ்’’ அளிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் நிர்வாகத்தைக் கோரி வருகின்றனர்.

சென்னையை அடுத்த ஒரகடத்தில் செயல்படும் ரெனால்ட் நிசான் ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு ``ஹீட் அலவன்ஸ்’’ வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிறுவன ஊழியர்கள் இத்தகைய கோரிக்கை வைப்பதற்குக் காரணம் இருக்கிறது. அருகில் இருங்காட்டுக் கோட்டையில் செயல்படும் ஹூண்டாய் நிறுவனம் இது போன்ற ஹீட் அலவன்ஸை பணியாளர்களுக்கு அளிக்கிறது. ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை ரெனால்ட் நிசான் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தில் ஃபவுண்டரி பிரிவில் அதாவது இரும்புத் தகடுகளை உருக்கும் பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.500 ஹீட் அலவன்சாக அளிக்கப்படுகிறது. இங்கு உலோகம் 500 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உருக்கப்படுகிறது. இதனால் இங்குள்ளவர்களுக்கு ஹீட் அலவன்ஸ் அளிக்கப்படுவதாக ஹூண்டாய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல வெப்பம் மிகுந்த பகுதிகளில் பணிபுரிவோருக்கு இத்தகைய அலவன்ஸ் வழங்கப்படுகிறது.

பொதுவாக ஆலையினுள் பணியாளர்களை ஏற்றிவரும் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இப்போது ஊழியர்கள் பணி புரியும் பகுதி வரை சென்று விட்டுவிட்டு வரச் செய்துள்ளது ஹூண்டாய்.

கோடைக் காலத்தின் வெப்பத்தின் கடுமையைத் தணிக்க பணியாளர்களுக்கு பச்சை காய்கறிகள் சாலட் அளிக்கப்படுகிறது. அத்துடன் மோர், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாக ஹூண்டாய் நிர்வாகம் தெரிவிக்கிறது.

வெப்பமான பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீரிழப்பைத் தடுக்க எலுமிச்சை ஜூஸ், மோர் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இப்பகுதியில் வெப்பத்தின் தீவிரத்தைத் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் வகையில் ஆலையின் மேற்கூரையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள தாக ரெனால்ட் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT