வணிக வீதி

சீனாவில் டிரைவர் இல்லா கார் வெள்ளோட்டம்

செய்திப்பிரிவு

வெள்ளோட்டம் என்ற தமிழ் வார்த்தை உபயோகத்தில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தபோது, கூகுள் தேடு பொறியில் இந்த வார்த்தைப் பிரயோகத்துக்கு - சோதனை ரீதியில் - என்று விளக்கம் போடப்பட்டிருந்தது. ஆக கூகுள் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத காருக்கு போட்டியாக சீனாவை சேர்ந்த நிறுவனமும் டிரைவர் இல்லாத தானியங்கி காரை வெள்ளோட்டம் விட உள்ளதாக அறிவித்துள்ளது. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்தக் காரை இயக்கிப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 2 கார்கள் இவ்வித பரிட்சார்த்த முயற்சியில் சாலைகளில் இறக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மாறுபட்ட சூழலில் இந்தக் கார் எவ்விதம் செயல்படுகிறது என்பதை சோதித்தறிய போவதாக சாங் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் மற்றும் ஆய்வு மையத்தின் தலைவர் லி யுஷேங் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற சாலைகளில் இந்தக் கார் எவ்வித சிரமமும் இன்றி செயல்படும். இருப்பினும் நகர் பகுதிகளில் நெடுஞ்சாலை மற்றும் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், சுங்கச் சாவடிகள் உள்ளிட்டவை குறித்தவற்றை உணர்த்த இந்தக் காருக்கு மனிதர்களின் உதவி தேவைப்படுகிறது. எனவே இந்த விஷயங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் காரில் உள்ள உணர் கருவிகள் (சென்சார்) மூலமான சமிக்ஞைகள் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. இவை அனைத்தும் சிறப்பாக செயல்படுவது உறுதியான பிறகே அதிக எண்ணிக்கையில் இத்தகைய காரை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லி யுஷேங் குறிப்பிட்டார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2018-ல் இத்தகைய கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. கூகுள் கார்கள் சாலைகளில் களமிறங்கும் முன்பாக தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை சோதனை ரீதியில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயண தூரத்தை அவை முடித்துள்ளன. கூகுள் கார்கள் மனிதர்களின் உதவியின்றி இதுவரை நடைபெற்ற சோதனை ஓட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

உலகம் முழுவதும் டிரைவர் இல்லாத கார்கள் தயாரிக்கும் பணியில் 18 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் ஜப்பானின் டொயோடா நிறுவனங்களும் அடங்கும்.

சீனாவில் இத்தகைய கார் தயாரிப்பில் பிஏஐசி குழுமம், ஜிஏசி குழுமம், எஸ்ஏஐசி மோட்டார், சாங்கன் மற்றும் பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

எதிர்காலத்தில் டிரைவர் இல்லாத கார்கள்தான் சாலையை ஆக்கிரமித்திருக்கும். இதனால் மனிதத் தவறுகளால் ஏற்படும் விபத்துகள் குறையும் என்று நம்பலாம்.

SCROLL FOR NEXT