2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் பிழைத்தவர். ரொக்கம் கேட்டு கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர். 14 ஆண்டுகளில் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தவர். அவர் வேறு யாருமல்ல குஜராத்தில் பிறந்து பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய கவுதம் சாந்திலால் அதானி.
சிறிய வர்த்தகராக வாழ்க்கையைத் தொடங்கி 59 வயதில் இன்று 8,900 கோடி டாலர்(ரூ.6,67,500 கோடி) சொத்துகளுக்கு சொந்தக்காரர். கமாடிடி வர்த்தகத்தில் தொடங்கிய இவரது தொழில் வாழ்க்கை இன்று துறைமுகம், சுரங்கம், மரபுசாரா எரிசக்தி என பரந்துபட்டு விரிந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்திலும் 1,200 கோடி டாலர் அளவுக்கு இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. உலகில் வேறெந்த தொழிலதிபரது சொத்து மதிப்பும் இந்த அளவுக்கு உயரவில்லை. அந்த அளவுக்கு சுக்கிர திசை இவருக்கு சாதமாக வீசுகிறது.
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் தற்போது முகேஷ் அம்பானிக்கும் கவுதம் அதானிக்கும் இடையேதான் போட்டி. சென்ற வாரம், முகேஷ் அம்பானியை பின்தள்ளி, ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் அதானி. அடுத்த ஓரிரு நாட்களில் அதானியை பின்தள்ளி அம்பானி முதலிடம் பிடித்தார். இருவரின் சொத்து மதிப்புகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை. முகேஷ் அம்பாயின் சொத்து மதிப்பு 90.3 பில்லியன் டாலர். அதானியின் சொத்து மதிப்பு 89.3 பில்லியன் டாலர். முகேஷ் அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஆச்சரியமான விசயம் இல்லை. ஏனென்றால், தொழில்துறையில் அம்பானி குடும்பத்துக்கு மிகப் பெரும் பாரம்பரியம் இருக்கிறது. ஆனால், அதானியின் வளர்ச்சி அப்படியானது அல்ல.
அதானி 1962-ம் ஆண்டு குஜராத்தில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் 7 பேர். அப்பா சிறிய அளவில் ஜவுளி வியாபாரம் செய்பவர். அதானிக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வமில்லை. இரண்டாம் ஆண்டிலே கல்லூரி படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். அதானிக்கு தொழிலில் ஈடுபட விருப்பம். ஆனால், தந்தையின் ஜவுளித் தொழிலைத் தொடர அவருக்கு விருப்பமில்லை. இந்தச் சூழலில், அதானி அவருடைய 16 வயதில் மும்பைக்குச் சென்று அங்குள்ள வைர வியாபார நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அவர் மும்பைக்குச் சென்ற சமயத்தில், அவருடைய மூத்த சகோதரர் பிளாஸ்டிக் தயாரிப்பு தொடர்பான நிறுவனத்தை அகமதாபத்தில் ஆரம்பித்தார். அதை நிர்வகிக்கும்படி அதானியை அவர் சகோதரர் அழைக்க, 1981-ம் ஆண்டு முதல் அந்தப்
பணியில் அதானி ஈடுபடத் தொடங்கினார். அது அதானியின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. வர்த்தகத்தில் கைதேர்ந்தார். 1988-ம் ஆண்டு அதானி எக்ஸ்போர்ட் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். அதுதான் தற்போது அதானி எண்டர்பிரைசஸ் என்று அழைக்கப்படுகிறது.
உலகமயமாக்கல் அதானிக்கு மிகப் பெரும் வாய்ப்பாக அமைந்தது. அவருடைய தொழில் பல்வேறு துறைகளை நோக்கி விரிவடைந்தது. முந்த்ரா துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் வழங்க 1994-ம் ஆண்டு குஜராத் மாநில அரசு முடிவு செய்தது. 1995-ல் இத்துறைமுக நிர்வாகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசஸ் வென்றது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அதானியின் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்குச் சென்றது. துறைமுகம், மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்கம், விமான நிலையம், தகவல் தொழில்நுட்பம் என்ற நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ளனைத்து துறைகளிலும் அதானி நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 10 மடங்கு அளவில் உயர்ந்துள்ளது.
2020-ம் ஆண்டு 8.9 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு 2022-ம் ஆண்டு ஜனவரியில் 89 பில்லியன் டாலராக மாறியுள்ளது. 2021-ம் ஆண்டில் நாளொன்று அதானி ஈட்டிய வருமானம் ரூ.1,000 கோடி. அரசியல் தொடர்புகள் வழியாகவே அதானி இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளார் என்று கூறப்படுவதுண்டு. அதானியின் வளர்ச்சியை அப்படி சுருக்கிவிட முடியாது. முதல் தலைமுறை தொழில் முனைவரான அதானியின் வளர்ச்சிக்குப் பின்னால் பெரும் உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பே அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.
தொடர்புக்கு: ramesh.m@hindutamil.co.in