வரி விதிப்பு மிக மிகக் குறைவாக இருப்பது, கடுமையான வங்கிச் சட்டங்கள், (அதாவது அந்நாட் டில் உள்ள வங்கியில் பணம் போடுபவர் பற்றிய விவரத்தை வேறு எந்த நாட்டுக்கும் தெரிவிக்கக் கூடாது என்பதான சட்டம்.) பணம் போட்டவர் விவரத்தைக் கோரும் நாடுகளுக்கு அதை தெரிவிக்காமல் இருப்பது. இந்த மூன்று அம்சங்களும் உள்ள நாடுதான் வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்க பூமியாகும்.
பனாமா பேப்பர்ஸ் விவகாரம் வெளியாகி இன்றுடன் 10 நாட்களாகிறது. ஒவ்வொரு ஊழல் விவகாரம் வெளிவரும்போது, இதுதான் வரலாறு காணாத வகையிலான மிகப் பெரும் ஊழல் என்று கூறப்படும். அந்த வகையில் இப்போது வெளியாகியிருக்கும் பனாமா பேப்பர்ஸ் விவரங்கள் இதற்கு முன் வெளியான விக்கி லீக்ஸ் மற்றும் ஸ்விஸ் வங்கி ஆவணங்களை விட அதிக விவரங்களைக் கொண்டது.
2,600 ஜிபி அளவுக்கான ஆவணங்கள் பனாமா பேப்பர்ஸில் வெளியாகியுள்ளது. விக்கி லீக்ஸ் வெறும் 1.7 ஜிபிதான். ஸ்விஸ் ஆவணம் 3.3 ஜிபி மட்டுமே. 2014-ல் வெளியான லக்ஸம்பர்க் ஆவணம் 4.4 ஜிபி, 2013-ல் வெளியான ஆஃப்ஷோர் சீக்ரெட் 260 ஜிபி. ஆக இப்போதைய அளவில் பெரியது பனாமா பேப்பர்ஸ்தான்.
ஒரு கோடியே 15 லட்சம் ஆவணங் கள் அதாவது 40 ஆண்டுகளாக செய்யப் பட்ட வரி ஏய்ப்பு விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத் தில் மொத்தம் 2.14 லட்சம் நிறுவனங் கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கையில் 200 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் ஆகி யோர் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள் ளது. மொசாக் பொன்செகா என்ற சட்ட நிறுவனம் வரி குறைந்த வர்ஜின் ஐலண்ட் நாடுகளில் புதிதாக நிறுவனம் தொடங்கித் தந்து அதில் பணத்தை முதலீடு செய்ய உதவும்.
பண பரிவர்த்தனையில் 500 வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள் ஈடுபட்டுள்ளன. இந்த வங்கிகளில் மட்டும் 15,600 நிறுவனங்கள் (வரி ஏய்ப்புக்காக தொடங்கப்படுபவை) கணக்கு வைத்துள்ளன.
இதுபோன்ற வரி ஏய்ப்புக்கு செஷல்ஸ் மற்றும் பனாமாதான் சிறந் தவை என்றில்லை. அமெரிக்காவில் டெலாவேரிலும் இதேபோன்ற ஷெல் நிறுவனங்களைத் தொடங்க முடியும். லக்ஸம்பர்க், ஸ்விட்சர்லாந்து, கேமன் ஐலண்ட், லண்டன், ஐயர்லாந்து, பெர்முடா, சிங்கப்பூர், பெல்ஜியம் உள் ளிட்ட நாடுகளும் வரி ஏய்ப்பாளர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நாடுகள் என்று ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தை முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த Sddeutsche Zeitung பத்திரிகை ஓராண்டுக்கு முன்பு வெளியிட்டது. சங்கேத வார்த்தைகள் கொண்ட ஆவணத்தை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் (ஐசிஐஜே) அமைப்பிடம் ஜெர்மன் நாளிதழ் அளித்துவிட்டது. இதை 100 புலனாய்வு பத்திரிகையாளர்கள் ஓராண்டாக ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோரும் அவரது குடும்பத்தினரும் இத்தகைய ஷெல் நிறுவனங்களைத் தொடங்கியதாக பனாமா பேப்பர்ஸ் குறிப்பிட்டுள்ளது. நடிகர்களில் ஜாக்கி சான் தொடங்கி அமிதாப் பச்சன் வரை யிலும், சர்வதேச கால்பந்து சங்க நிர்வாகிகள் மற்றும் லியோனல் மெஸ்ஸி யின் பெயரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எந்த ஒரு ரகசியமும் வெளியாகும்போது அது பெரும் அதிர்வலையைத் தோற்றுவிக்கும். பனாமா பேப்பர்ஸ் விவகாரமும் அதற்கு விதிவிலக்கல்ல. உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஐஸ்லாந்து பிரதமர் சிக்முந்துர் குன்லாக்ஸன் பதவி விலகிவிட்டார். 40 லட்சம் டாலர் வரை ஐஸ்லாந்து வங்கி பங்குகளை மனைவி பெயரில் வாங்கியிருக்கும் தகவல் பனாமா பேப்பர்ஸில் இடம்பெற்றிருந்தது.
தனது தந்தை உருவாக்கிய ஆஃப் ஷோர் டிரஸ்ட் மூலம் தான் ஆதாயம் அடைந்ததாக பிரதமர் டேவிட் கேமரூன் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் 2010-ம் ஆண்டு பிரதமர் ஆவதற்கு முன்பே அவர் அந்த பங்குகளை விற்றுவிட்டார். ஆனால் இக்குற்றச்சாட்டை ரஷிய அதிபர் புடின் மறுத்துள்ளார். கம்யூனிச நாடான சீனாவின் தலைவர்களும் பனாமா பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ள னர். அரசியல் உயர்நிலைக் குழுவான பொலிட்பீரோவைச் சேர்ந்த 8 பேர் இப்பட்டியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளின் பெயர்களும் பனாமா பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே நாட்டில் பணக்காரர் ஏழை இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்ட செல்கிறது. இதுபோன்ற கருப்புப் பண பதுக்கல் அதிகரித்தால் இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அர்த்தமுள்ள கவலை!