‘ஃப்ரம் ஸ்டார்ட்அப் டூ எக்ஸிட்’. இந்தப் புத்தகத்தை தொழில்முனைவில் இருபது வருடம் அனுபவம் கொண்டவரும் சில ஸ்டார்ட்அப்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திவந்தவருமான ஷிரிஷ் நட்கர்னி (Shirish Nadkarni) எழுதியிருக்கிறார். அவரது தொழில்முனைவு பயண அனுபவத்தின் அடிப்படையிலும், வெற்றிகரமாக தொழில் நடத்திவரும் தொழில்முனைவோர்களிடம் அவர் நடத்திய நேர்காணல்களின் அடிப்படையிலும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
ஐடியா, நிறுவனத்தை ஆரம்பித்தல், நிதி திரட்டுதல், நிறுவனத்தை நிர்வகிப்பது, வெளியேறுவது என 5 பகுதிகளாக இந்தப் புத்தகம் பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஐடியா
நல்ல ஐடியா என்பது குறிப்பிட்ட பிரச்சினைக்கானத் தீர்வாக இருக்க வேண்டும். அதாவது ‘வைட்டமின்’ மாத்திரையாக இல்லாமல் ‘ஆஸ்பிரின்’ மாத்திரை போல் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் பரந்த அளவில் தொழிலை ஆரம்பிப்பதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பிரிவில் அக்கறை செலுத்தி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக அமைய வேண்டும். ஆரம்பத்தில் பிளாக்பெரி நல்லதொரு பிராண்டாக இருந்துவந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே மற்ற மொபைல்போன்கள் வருகையால் பிளாக்பெரி காணாமல் போனது. அதுபோல ‘நெட்ஃப்ளிக்ஸ்’ வருகையால் ‘பிளாக்பஸ்டர்’ பாதிப்புக்கு உள்ளானது. அதாவது தொழில்துறையில் ஒரு பிரிவில் ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தகர்க்கக்கூடிய அளவுக்கு புதிய நிறுவனம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று ஷிரிஷ் நட்கர்னி வலியுறுத்துகிறார்.
நிறுவனத்தை ஆரம்பித்தல்
ஐடியாவை உறுதி செய்த பிறகு எந்த மாதிரியான நிறுவனத்தை (LLP, Pvt Ltd…) ஆரம்பிப்பது, தனியாக ஆரம்பிப்பதா இல்லை கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்வதா போன்ற விஷயங்களை தீர்மானிக்க ஏஞ்சல் முதலீட்டாளர்களை அல்லது வெற்றிகரமான தொழில்முனை வோர்களைச் சந்தித்து முடிவெடுக்கலாம் என்கிறார்.
நிதி திரட்டல்
ஆரம்ப முதலீட்டை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அதைத் தொடர்ந்து க்ரெளண்ட் ஃபண்டிங், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்ஸ், வெஞ்சர் கேபிடலிஸ்ட்கள் என பல வகைகளில் நிறுவனத்துக்குத் தேவையான நிதியைத் திரட்டலாம். நிதி திரட்டுவதற்காக முதலீட்டாளர்களை அணுகும்போது நம்முடைய நிறுவனம் குறித்த நடவடிக்கைகளையும், எதிர்காலத்தில் அதற்கு இருக்கும் சாத்தியக்கூறுகளையும் ஒரு ‘கதை’யாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். சொல்லக்கூடிய கதையில் நிறுவனத்தின் நோக்கம் என்ன, பிரச்சினை என்ன, தீர்வு என்ன, கவரக்கூடிய அம்சங்கள் என்ன, நிறுவனத்துக்கென்று சந்தையில் இருக்கும் வாய்ப்புகள் என்ன, போட்டி எந்த அளவுக்கு இருக்கிறது/இருக்கும், சந்தையை அணுகுவதற்கான உத்திகள் என்ன, நிதி நிலைமை எந்த அளவில் இருக்கிறது ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சுவராசியமானதாக இருக்க வேண்டும். நிதி திரட்ட முதலீட்டாளர்களை அணுகுவதற்கு முன்பாக அது சம்பந்தமான விஷயங்களை (venture debt, convertible ones, anti-dilution protection) தெரிந்து வைத்திருப்பது நல்லது என்கிறார்.
நிர்வகித்தல்
நான்காவது பகுதியில் திறமை, நிறுவனத்தின் கலாச்சாரம், பிசினஸ் மாடல், அறிவுசார் சொத்து உரிமை என அனைத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
முதன் முதலாக நிறுவனத்தில் வேலை செய்ய தெரிவு செய்யப்படும் நான்கு அல்லது ஐந்து பேர் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள்தான் நிறுவனத்தின் கலாச்சாரத்துக்கு அஸ்திவாரம் போடுபவர்களாக இருப்பார்கள். மைக்ரோசாஃப்டின் ஆரம்ப காலத்தில் பில்கேட்ஸ் பணியாளர்களைப் பார்த்து சத்தம் போட்டதை மோசமான தலைமைத்துவத்துக்கு எடுத்துக்காட்டாகவும் வாடிக்கையாளர்களை ஈர்த்தல், உரிமை (ownership) மனோபாவம், பேரார்வம், முடிவில் கவனம் செலுத்தல் ஆகிய தன்மைகளைக் கொண்ட அமேசான் நிறுவனத்தை நல்ல தலைமைத்துவத்துக்கு உதாரணமாகவும் அவர் குறிப்பிடுகிறார். பெருந்தொற்று போன்ற காலத்தில் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்குவது என்பது சிரமமான காரியமாக இருந்தாலும் அதையும் அக்கறையுடனும் கண்ணியத்துடனும் செயல்படுத்த வேண்டும் என்கிறார்.
வெளியேறுதல்
தொழிலிலிருந்து வெளியேற நினைத்தால் எப்போது வெளியேறுவது என்பதைப் பற்றி பெரும்பாலான ஸ்டார்ட்அப் புத்தகங்களில் பார்க்க முடிவதில்லை. ஆனால், இந்தப் புத்தகங்களில் எப்போது ஒரு தொழிலிலிருந்து வெளியேறுவது என்பதை விளக்கமாகவே பேசியிருக்கிறார் ஷிரிஷ் நட்கர்னி. ‘நிறுவனம் நன்றாக செயல்பட்டுக்கொண்டு பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும்போது வெளியேறுவது நல்லது’ என்கிறார். முதலீடுகளில் அனுபவம் கொண்ட ஆலோசனை நிறுவனத்தின் மூலம் நிறுவனத்தை நல்ல விலை கொடுத்து வாங்க விருப்பமுள்ள நிறுவனங்களை அல்லது முதலீட்டாளர்களைக் கண்டறியச் சொல்லலாம்.
பங்கு சந்தையில் இடம் பெறுவதற்கு தயார் ஆவது என்பது நீண்ட காலம் எடுக்கக்கூடிய சிக்கலான விஷயமாகும். இதற்கு நல்ல ஒரு சிஎஃப்ஓ, அண்டர்ரைட்டர் மட்டுமல்லாமல் ஐபிஓ குழு ஒன்றையும் அமைக்க வேண்டுமென ஆலோசனை கூறுகிறார்.
மொத்தத்தில், இந்தப் புத்தகம் தொழில் முனைவோர்களுக்கு அவர்களின் தொழில் பயணத்தில் வழிகாட்டியாக இருக்கும். ஷிரிஷ் நட்கர்னியின் அனுபவங்களும் அவர் குறிப்பிட்டிருக்கும் உதாரணங்களும் நிகழ்வுகளும் நூலுக்கான நம்பகத்தன்மையை சேர்க்கின்றன.
| ஃப்ரம் ஸ்டார்ட்அப் டூ எக்ஸிட் ஆசிரியர்: ஷிரிஷ் நட்கர்னி பதிப்பகம்: ஹார்ப்பர் கோலின்ஸ் (லீடர்ஷிப்), விலை ரூ.499 |