சமீபத்தில் ‘புல்லி பாய்’ என்ற செயலி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் முஸ்லீம் பெண் பத்திரிகையாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள் உட்பட பல முஸ்லீம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்தப் பெண்கள் விற்பனைக்கு என்று அறிவிக்கப் பட்டு இருந்தது. அந்தச் செயலிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்தச் செயலியை உருவாக்கி, நிர்வகித்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் மிக அதிர்ச்சிகரமான விஷயம், அவர்களில் மூவர் கல்லூரி மாணவர்கள். ஒருவர் 19 வயது பெண். வேறெந்த நாட்டைவிடவும், இந்தியாவில் சமூக வலைதளங்கள் வெறுப்பைப் பரப்பும் தளமாக பயன்படுத்தப்படுகிறது என்று சமீபத்திய நிலவரங்கள் உணர்த்துகின்றன.
இன்றைய காலத்தில் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்விலும் சமூக வலைதளங்கள் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. தனிநபர் மட்டுமல்லாமல் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வாடிக்கையாளரை சென்று சேர சமூக வலைதளங்களை பெரிதும் நம்புகின்றன. சமூக வலைதளங்கள் இணைப்புப் பாலமாக செயல்படுகின்றன. அதே சமயம் அவை, சக மனிதர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் தளமாக, கருத்துகளை பகிரும் தளமாக, செய்திகளைப் பகிரும் தளமாக மட்டும் இல்லை. வெறுப்பைப் பரப்பும் தளமாகவும் அது இருக்கிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எந்த சமூக வலைதளங்களுக்குள் சென்றாலும், வெறுப்புப் பிரச்சாரங்கள் உச்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மதரீதியாக, சாதிரீதியாக, மொழிரீதியாக வெறுப்புகள் உமிழப்படுகின்றன. இதிலும் மிக வருந்தத்தக்க விஷயம், சமூக வலைதளங்கள் இத்தகைய வெறுப்புக் கருத்துகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகின்றன என்பதுதான். குறிப்பாக ஃபேஸ்புக்.ஏனைய சமூக வலைதளங்களை விடவும், ஃபேஸ்புக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தின் அல்காரிதம் எப்படி வெறுப்புக் கருத்துக்கள் பரவுதற்கு சாதகமாக இருக்கின்றன, இன்ஸ்டாகிராம் எப்படி பதின் வயது பெண்களின் மன ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது என்பது தொடர்பாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகின. ஃபேஸ்புக்கின் தவறான போக்குகள் குறித்து அந்நிறுவனத்தில் தயாரிப்புப் பிரிவின் மேலாளராக இருந்த பிரான்சிஸ் ஹாகென் வெளிட்ட ஆவணங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.
மியான்மரில் 2017-ம் ஆண்டில் அந்நாட்டு ராணுவத்தினர் நிகழ்த்திய வன்முறையால், 7.5 லட்சம் ரோங்கியா முஸ்லீம்கள் அந்நாட்டிலிருந்து தப்பி வங்கதேசத்தில் அகதிகளாக குடியேறினர். ரோங்கியா முஸ்லீம்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருவதற்கு, அவர்கள் தொடர்பாக ஃபேஸ்புக்கில் பரப்பப்படும் வெறுப்புக் கருத்துக்களே முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஃபேஸ்புக் நிறுவனத்திடம் 15,000 கோடி டாலர் இழப்பீடு கேட்டு கடந்த மாதம் ரோங்கியா அகதிகள் வழக்கு தொடுத்தனர்.
வன்முறை நிகழ்வுக்கு ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல்கள் முக்கியக் காரணமாக இருப்பதாக 2018-ம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் கூறியதை இங்கே நினைவு கூரலாம். இப்படி ஃபேஸ்புக்குக்கும் வெறுப்பு பரவலுக்கும் இடையிலான தொடர்பை அடுக்கிக் கொண்டே போகலாம். ஃபேஸ்புக்குக்கு உலக அளவில் 285 கோடி பயனாளர்கள் உள்ளனர். இந்தியாவில் ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 35 கோடியை நெருங்குகிறது. அந்தவகையில் உலகில் அதிகமான ஃபேஸ்புக் பயனாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் மத வெறுப்பு பரவுவதற்கு ஃபேஸ்புக் முக்கிய காரணமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவில் வெறுப்புக் கருத்துகளை, போலிச் செய்திகளை தடுப்பதில் ஃபேஸ்புக் பாரபட்சம் காட்டுவதாக கடந்த அக்டோபர் மாதம் ஒரு ஆவணம் வெளியானது.
ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய லாபத்தை அதிகரிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது. 2004-ம் ஆண்டு மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக்கின் இன்றைய சந்தை மதிப்பு 950 பில்லியன் டாலர். 2017-ம் ஆண்டில் ஃபேஸ்புக்கின் வருவாய் 40 பில்லியன் டாலராக இருந்தது. அது 2020-ம் ஆண்டில் 85 பில்லியன் டாலராக உயர்ந்தது. மக்களிடம் அதிகரித்திருக்கும் வெறுப்பு மனநிலைக்கு தனி நிறுவனம் மீது பழிசுமத்திவிட முடியாது. ஆனால், சமூக வலைதள நிறுவனங்களுக்கு என்று சில பொறுப்புகள் உள்ளன. தங்கள் நிறுவனம் வழியாக வெறுப்பு பரவுவதற்கு அவை அனுமதிக்கக் கூடாது. வெறுப்பை கச்சா பொருளாக்கி அதன் வழியே செல்வம் பெருக்குவது நல்ல வழிமுறை அல்ல!
sivasivasankar00@gmail.co