தொழில்முனைவின் வடிவம் மாறிக் கொண்டே வருகிறது. தன் சக்திக்கு உள்பட்டு தொழில் புரிவது, கடன் வாங்கி தொழில் புரிவது, வென்ச்சர் கேபிடல் நிதியுடன் தொழில்புரிவது, பங்குகளை சந்தையில் விற்று தொழில்புரிவது என பல வடிவங்கள் இருக்கின்றன. இதன் அடுத்த வடிவத்தை பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி உருவாக்கியிருக்கிறார். அது என்ன என்று பார்ப்பதற்கு முன்பு ஒரு பிளாஷ்பேக்.
2009-ம் ஆண்டு கிஷோர் பியானி மற்றும் சிஎன்பிசி தொலைக்காட்சி இணைந்து ஒரு ரியால்டி ஷோவை நடத்தியது. இதன் பெயர் Ban Jao Biyani. அதாவது இந்தியாவில் இருக்கும் பல தொழில்முனைவோர்கள் இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களில் இருந்து பல கட்ட வடிகட்டலுக்கு பிறகு தேர்வாகும் தொழில்முனைவோர் நிறுவனத்தில் கிஷோர் பியானி முதலீடு செய்வார். முதலீடு மட்டுமல்லாமல் அந்த தொழில்முனைவோருக்கு தேவையான ஆலோசனைகளையும் கிஷோர் பியானி வழங்குவார்.
கட் டூ
இப்போது அதேபெயரில் தன்னுடைய நிறுவனத்தில் ஒரு திட்டத்தை கிஷோர் பியானி தொடங்கி இருக்கிறார். தற்போது சுமார் 2,000 கோடி ரூபாயாக இருக்கும் நிறுவனத்தின் வருமானத்தை 2021-ம் ஆண்டு 20,000 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்த திட்டத்தின் கீழ் பல ஆர்வமுள்ள 450 இளைஞர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களிடம் பல கட்ட தேர்வுகள் நடந்தன. அதில் தேர்வான இளைஞர்களுக்கு ஐந்து நாள் பயற்சி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் தொழில்முனைவு குறித்து பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் 9 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பிஸினஸ் நாளிதழ் ஒன்று தெரிவித்திருக்கிறது. இவர்களின் சராசரி வயது 26. பியூச்சுர் குழுமத்தில் உள்ள ஒரு பிராண்ட் இவர்களின் கட்டுப்பாட்டில் வரும். இந்த பிராண்ட் குறித்த அனைத்து உத்தி சார்ந்த முடிவுகளையும் அவர்களே எடுக்க வேண்டும். உற்பத்தி, மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து முடிவுகளை இவர்களே எடுக்க வேண்டும். அந்த பிராண்டின் இலக்கு என்ன என்று முடிவு செய்ய வேண்டியதும் அவர்களே. தேவைப்பட்டால் கிஷோர் பியானி ஆலோசனை வழங்குவார்.
இளைஞர்கள் முடிவெடுக்கும் சுதந்திரம் வழங்கப்படும். அவர்கள் சொந்தமாக முடிவெடுக்கலாம் தேவைப்பட்டால் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளின் ஆலோசனையைப் பெறலாம் என்று கிஷோர் பியானி தெரிவித்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு, தேர்வானவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இ-காமர்ஸ் நிறுவனங்களின் வருகையால் வழக்கமான ரீடெய்ல் நிறுவனங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பியூச்சர் குழுமம் இலக்கை அடைந்தால் வெற்றி. ஒருவேளை தோல்வி அடைந்தால் தொழில் முனைவோர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை தவிர வேறு எந்த பலனும் இல்லை.
ரீடெய்ல் சந்தை மாறி வரும் சூழ்நிலையில் கிஷோர் பியானி இப்படி ஒரு ரிஸ்க் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த தைரியமான முடிவுக்கு பலன் கிடைக்குமா? காலத்தின் கையில் இதற்கான பதில் உள்ளது.