வணிக வீதி

போதனையா? வியாபாரமா?

எம்.ரமேஷ்

இது போட்டி நிறைந்த உலகம். தாராளமய சிந்தனைக்கு இந்தியா ஆட்பட்டு 25 ஆண்டு களாகிவிட்டது. இந்த கால் நூற்றாண்டில் இந்தியாவில் ஏகப்பட்ட தொழிலதிபர்களும், தொழில் முனைவோர்களும் உருவாகிவிட்டனர். முன்பெல்லாம் டாடா, பிர்லா என்ற பெயர்கள்தான் பிரசித்தம். ஆனால் இப்போது இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இவர்கள்தான் தொழில் தொடங்க வேண்டும், தொழிலதிபராக வலம் வர வேண்டும் என்ற வரையறை ஏதும் கிடையாது. யார் வேண்டுமானாலும் தொழிலதிபராகலாம். இந்தப் பட்டியலில் இப்போது சாமியார்களும் இடம்பெற ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். மத போதனை மூலம் மக்கள் மத்தியில் தங்களுக்குள்ள பிரபல்யத்தை வியாபாரமாக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் அழகு சாதனப் பொருள் விற்பனை சந்தை மிகவும் பெரியது. அந்த சந்தையைப் பங்கு போட ஹிந்துஸ்தான் லீவரும், கோத்ரெஜும், ஐடிசியும், பிற பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தயாரிப்புகளை இந்தியாவில் சந்தையிட்டு வரும் நிலையில் இந்நிறுவனங்களுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ளனர் இந்தியாவின் பிரபல சாமியார்கள்.

இவர்கள் வேறு யாருமல்ல யோக குரு பாபா ராம் தேவ். அடுத்து களமிறங்கியிருப்பவர் வாழும் கலை மையத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச யோகா தினம் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு யோகாசனப் பயிற்சி செய்து, யோகாசனத்தின் அவசியத்தை வலியுறுத்தி, அதை சர்வதேச அளவுக்கு பிரபலமடையச் செய்தார். ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாட முயற்சி மேற்கொண்டதில் யோகா குரு பாபா ராம் தேவின் பங்கும் மகத்தானது.

இதேபோல யமுனை நதிக்கரையில் சர்வதேச கலாசாரத் திருவிழாவை நடத்தி இந்திய கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றிய பெருமையைத் தக்க வைத்துக் கொண்டார் வாழும் கலை மையத்தின் இயக்குநர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். இதிலும் மோடி கலந்து கொண்டார்.

இரண்டு சாமியார்களும் ஏற்கெனவே பிரபலமானவர்கள். இந்த இரு நிகழ்ச்சிகளும் இவர்களை மேலும் பிரபலமடையச் செய்துள்ளது.

இவர்கள் வெறுமனே மதத்தையோ அல்லது யோகாசனத்தையோ இதுவரை போதித்து வந்தவர்கள் என்ற நிலை மாறி இப்போது தொழில் துறையிலும் தடம் பதிக்க முயன்றுள்ளனர்.

பதஞ்சலி எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகிறார் பாபா ராம் தேவ்.

பிஸ்கட், டூத் பிரஷ், பேஸ்ட், ஊதுபத்தி, கூந்தல் தைலம், ஆலோ வெரா ஜெல் (சோற்றுக் கற்றாழை), ஜூஸ், நெல்லிச் சாறு, குளியல் சோப், துணி சோப், பவுடர், பாத்திரம் துலக்கும் சோப், கோதுமை நூடுல்ஸ், பசு நெய், தேன், மாவு வகைகள் என பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் அனைத்துப் பொருள்களும் `பதஞ்சலி’ என்ற பிராண்டு பெயரில் விற்பனைக்கு வந்துள்ளன. சமீபத்தில் பாசுமதி அரிசியையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெறுமனே பொருள்களை அறிமுகம் செய்வ தோடு நில்லாமல், ஊடகங்கள் மூலமான விளம் பரத்திலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டி யாக களமிறங்கியுள்ளது. விளம்பரத்துக்கென நான்கு மாதங்களில் இந்நிறுவனம் ரூ. 360 கோடி செலவிட்டுள்ளது. தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய முன்னணி சங்கிலித் தொடர் விற்பனை நிறுவனமான பியூச்சர் குழுமத்துடன் பதஞ்சலி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதனால் பதஞ்சலி தயாரிப்புகள் பியூச்சர் குழுமத்தின் விற்பனையகங்களான பிக் பஜாரில் இடம்பெற்றுள்ளன.

வாழும் கலை மையமும் ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா அறக்கட்டளை (எஸ்எஸ்ஏடி) என்ற பெயரில் ஆயுர்வேதப் பொருள்களை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. 2003-ம் ஆண்டே இப் பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், பதஞ்சலி தயாரிப்புகளுக்கு கிடைக்கும் வரவேற் பைப் பார்த்து அதே பாணியில் தங்களது தயாரிப்புகளைப் பிரபலப்படுத்த முயற்சித்துள்ளது எஸ்எஸ்ஏடி.

இணையதளம் மூலம் (>sattvastore.com), சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் தயாரிப்புகளைப் பிரபலப்படுத்தும் முயற்சியிலும் எஸ்எஸ்ஏடி இறங்கியுள்ளது.

இந்நிறுவனமும் டூத்பேஸ்ட், ஷாம்பூ, லோஷன் கள், ஆயுர்வேத மருந்துகள், பழச்சாறுகள், ஹெர்பல் டீ, நீரிழிவு நோயாளிகளுக்கான மாத்திரை, வலி நிவாரணிகள் என அனைத்தும் ஸ்ரீ ஸ்ரீ பிராண்டு பெயரில் பட்டியலிட்டுள்ளது.

இந்தப் பொருள்களை உற்பத்தி செய்ய பெங்களூருவில் ஒரு ஆலையும் பொருள் உருவாக்கத்துக்கென ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்த நிதி ஆண்டில் பதஞ்சலி விற்பனை வருமானம் ரூ. 5 ஆயிரம் கோடியை எட்டும் என்ற தகவல் வெளியானதும், தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்த முயற்சித்து வருகிறது எஸ்எஸ்ஏடி.

2003-ம் ஆண்டிலிருந்தே ஸ்ரீஸ்ரீ மையம் பொருள்களைத் தயாரித்து வந்தாலும், 13 ஆண்டுகளாக எவ்வித தாக்கத்தையும் அது ஏற்படுத்தவில்லை. இவை அனைத்தும் 600 விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனையகங்கள் புனித விற்பனையகம் (Divine Shops) என்றே அழைக்கப்படுகின்றன. பிக்பாஸ்கட்.காம் மற்றும் அமேசான்.காம். உள்ளிட்ட இணையதளங்களிலும் இந்தத் தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் கடந்த ஓராண்டில் பதஞ்சலி தயாரிப்புகள் மக்களிடையே பிரமலடைந்துள்ளது இவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கும் தங்களுக்குள்ள 33 கோடி பக்தர்களிடமும் தங்களது தயாரிப்புகள் சென்றடைய வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறது எஸ்எஸ்ஏடி.

அடுத்த ஆண்டுக்குள் 2,500 விற்பனையகங் களைத் தொடங்க எஸ்எஸ்ஏடி முடிவு செய்துள் ளது. பதஞ்சலி பாணியில் முன்னணி சங்கிலித் தொடர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள் வதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

பதஞ்சலி தயாரிப்புகளை விற்பனை செய்யும் பியூச்சர் குழுமத்தின் தலைவர் கிஷோர் பியானி, ஸ்ரீ ஸ்ரீ தயாரிப்புகளை விற்பனை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பதஞ்சலி வரவால் கோல்கேட் பற்பசை விற்பனை சிறிது ஆட்டம் கண்டுவிட்டது. பிற அழகு சாதனப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் இயற்கை சார்ந்த பொருள் தயாரிப்புப் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

இதுபோன்ற மாற்றம் கிராமப் பொருளாதாரம் மேம்பட உதவும். அதேசமயம் கிராமத்தினர் பலருக்கும் வேலை வாய்ப்பை பெற்றுத் தரும்.

பொருளீட்டும் ஓட்டத்தில் மக்கள் தீவிரமாக இருப்பதால் பல்வேறு உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அத்துடன் பக்க விளைவுகள் கொண்ட உணவுகள் உடலுக்குக் கேடு விளைவிக்கின்றன.

மன உளைச்சலுக்கு ஆறுதலான போதனையும், அத்துடன் பக்க விளைவுகள் இல்லாத இயற்கை உணவுகள் என்ற கோஷமும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளன.

மக்களின் நலன் கருதி இவர்கள் தரும் பொருள் கள் தரமாக இருந்தால், பக்க விளைவுகள் இல்லாதிருந்தால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது சந்தையை இழக்க வேண்டியிருக்கும்.

இந்த வரிசையில் ஜக்கி வாசுதேவ் ஏற்கெனவே தனது ஈஷா அறக்கட்டளை மூலம் ஆயுர்வேத பொருள்களை விற்பனை செய்கிறார். அவரும் தீவிரமாகக் களத்தில் இறங்கலாம். குரு ராம் ரஹீம், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்டவையும் இதுபோன்ற தயாரிப்புகளில் இறங்கக்கூடும் எனத்தெரிகிறது.

ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். நுகர்வு கலாச்சாரம் பெருகியதற்கு ஆசைதான் பிரதான காரணம். ரசாயனக் கலவை சார்ந்த பொருள்களுக்கு மாற்றாக இயற்கையான பொருள்களால் இவர்கள் தரும் தயாரிப்புகள் பக்க விளைவுகள் இல்லாமலிருந்தால் நிச்சயம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும்.

- ramesh.m@thehindutamil.co.in

SCROLL FOR NEXT