வணிக வீதி

இது ஜிடிபி பட்ஜெட்

செய்திப்பிரிவு

பொதுவாக ஜிடிபி என்றாலே நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைத்தான் குறிக்கும். ஆனால் இந்த பட்ஜெட் வளர்ச்சி மேம்பாடு சுபிட்சத்தை (Growth Development Prosperity) உள்ளடக்கிய பட்ஜெட் என்று தேசிய வங்கி ஒன்றின் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வேளாண் சார்ந்த நாடு என்று கூறுகிறோம். ஆனால் கிராமப்புற வளர்ச்சியையோ அல்லது விவசாயத்தை முன்னிறுத்தும் பட்ஜெட் கடந்த 20 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்படவேயில்லை. இன்னமும் வேளாண்துறை ஆதரவற்ற துறையாகவே இருந்து வருகிறது.

ஆனால் இந்த பட்ஜெட்டில் முதல் முறையாக வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது, பங்குச் சந்தையிலும், கடன் பத்திரத்திலும் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. வட்டி கிடைக்கும் என்பதற்காக வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் விவசாயத்துறையில் முதலீடு செய்வதே கிடையாது.

நாட்டின் முதுகெலும்பாக திகழ வேண்டிய வேளாண் துறைக்கு அரசு இந்த பட்ஜெட் மூலம் சலுகைகளை வழங்கியுள்ளது.

அரசு அளிக்கும் எந்த சலுகையும் விவசாயிகளைச் சென்றடைவதே கிடையாது. ஆனால் இப்போதுதான் உர மானியம் வரை அனைத்துமே விவசாயிகளை நேரடியாகச் சென்றடைய பட்ஜெட்டில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக உர மானியம் இதுவரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூலமாக விவசாயிகளைச் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அம்மாநிலத்தில் விவசாயத்துக்கு அளிக்கப்படும் முன்னுரிமையைப் போலில்லாவிட்டாலும், இந்த பட்ஜெட்டில் மத்திய அரசும் விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

வங்கித் துறையில் மூன்றாம் காலாண்டு முடிவுகள் சாதகமாக இல்லை. வாராக்கடன் நெருக்கடிதான் வங்கிகளை மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளன. மேலும் வட்டி வருமானம் குறைந்துள்ளதும் நெருக்கடியை அதிகரிக்கச் செய்துள்ளது. அனைத்துக்கும் மேலாக வசதியிருந்தும் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் (willful defaulters) காரணமாக வங்கியின் வாராக் கடன் அதிகரித்துள்ளது.

எந்த ஒரு வங்கி அதிகாரியும் பணம் திரும்ப வராது என்று நினைத்தால் கடன் வழங்கியிருக்க மாட்டார். அதனால் வாராக் கடனுக்கு வங்கி அதிகாரிகளை குறை கூறுவதில் பயனில்லை. ஏனெனில் ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் வகுத்தளித்த வழிகாட்டுதலின் படிதான் கடன் வழங்கியிருப்பர்.

வங்கிகளின் செயல்பாட்டுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான ஒதுக்கீடு போதாது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். போதும் என்பதற்கு எது அளவு. நோய் ஏற்பட்டது என்றால் அதற்குரிய மருந்தை உரிய விகிதத்தில் சரியான சமயத்தில் சாப்பிட வேண்டும். அதைப்போலத்தான் வங்கிகளில் அரசு மேற்கொள்ளும் புதிய முதலீடுகளும். எப்போது தேவை என்பதை ஆர்பிஐ, நிதி அமைச்சகம் தீர்மானித்து அளிக்கும்.

எந்த ஒரு பட்ஜெட்டும் அனைத்துத் தரப்பினரையும் திருப்தி செய்ததாக வரலாறு கிடையாது. ஆனால் இம்முறைதான் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறைகள் இருந்தாலும் இது நிறைவான பட்ஜெட்டே என்று அவர் குறிப்பிட்டார்.

(பொதுத்துறை வங்கிகளில் உயர் பதவி வகிப்பவர்கள் தங்களது பெயர் வெளியாவதை விரும்புவதில்லை).

SCROLL FOR NEXT