somasmen@gmail.com
சமீபத்தில் சீன அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை சீன மக்களிடையே மட்டுமல்ல உலக நாடுகளிடையேயும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அறிக்கையில் சீன அரசு, குளிர்காலத்திற்குப் போதுமான உணவு இருப்பதை உறுதி செய்ய உள்ளூர் அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறது. கூடவே, அத்தியாவசியப் பொருள்களை சேமித்து வைக்குமாறு மக்களை அறிவுறுத்தியிருக்கிறது. 2020-ல் கரோனா பரவத் தொடங்கியபோது கூட இவ்வகையான அறிவிப்புகள் சீன அரசிடமிருந்து வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தற்போது சீன அரசிடமிருந்து வந்துள்ள, கிட்டத்தட்ட உணவு பொருள்களுக்கான அவசரநிலை போன்ற அறிவிப்பு உலக நாடுகளை எச்சரிக்கை உணர்வுக்கு தள்ளி இருக்கிறது.
சீனாவில் இந்த ஆண்டு குளிர்காலம் முன்னெப்போதையும் விட 15 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்ற வானிலை அறிக்கை கூறியுள்ளது. இதன் காரணமாக காய்கறி உற்பத்தி மற்றும் போக்குவரத்து சேவை பாதிக்கக்கூடும் என்கிற கவலை சீனாவிற்கு இருக்கிறது. சீனாவின் வடக்குப் பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஷான்டாங் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் காய்கறிகள் விளைச்சல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதன் நீட்சியாக தற்போது சீனாவில் காய்கறிகளின் விலை கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது. இறைச்சியைவிட காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன.
ஆனால், சீனாவின் அந்த அறிவிப்புக்கு குளிர்காலமும், காய்கறி விளைச்சலும் தவிர வேறு சில காரணங்கள் இருக்கக்கூடும் என்ற எண்ணம் சீன மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. சீனாவில் தற்போது கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. தற்சமயம், சீன அரசு சில இடங்களில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கரோனா பரவல் தொடர்ச்சியாக அதிகரிக்கும்பட்சத்தில் சீன அரசு நாடு தழுவிய பொது முடக்கத்தை கொண்டுவர வாய்ப்பிருப்பதாக சீன மக்கள் நினைக்கின்றனர்.
இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது சீன அரசின் செய்தி ஊடகமான எகானமிக் டெய்லி வெளியிட்ட செய்தி ஒன்று. வணிக அமைச்சகத்தின் அறிக்கை குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும், ஒருவேளை கரோனா காரணமாக மக்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருந்தால் உணவை சேமித்து வைப்பதற்கான முன்னெச்சரிக்கையே அந்த அறிக்கை எனவும் எகானமிக் டெய்லி கூறியுள்ளது.
சீனா – தைவான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்றும், போர்ச் சூழல் காரணமாக உணவுத் தட்டுபாடு ஏற்படக் கூடாது என்ற நோக்கத்திலும் சீன அரசு பொதுமக்களை உணவுப் பொருள்களை சேமித்து வைத்திருக்க சொல்லியிருக்கக் கூடும் என்ற ஊகங்களும் நிலவி வருகின்றன. விளைவாக, பொதுமக்கள் கூடுமானவரை உணவுப்பொருள்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கின்றனர்.
சீன இ-காமர்ஸ் தளங்களில் பிஸ்கட்டுகளுக்கான ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அரிசி, சோயா சாஸ், சில்லி சாஸ், நூடுல்ஸ், சமையல் எண்ணெய் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகைப்பொருட்கள் போன்றவை இ-காமர்ஸ் இணையதளங்கள் மூலம் அதிகமான அளவில் வாங்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான விற்பனையாளர்களிடம் போதிய இருப்பு இல்லை.
உணவு விடுதிகளில் உணவுகள் வீணாவதை குறைப்பதற்கான அழைப்புகளும், உணவை வீணடிக்கும் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்குமாறு ஷாங்காய் குடியிருப்பு பகுதிகளில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கரோனா பரவலுக்குப் பிறகு பெரும்பாலான நாடுகள் தற்சார்பை நோக்கி நகர்வது பாதுகாப்பானது என்று பேசத் தொடங்கியுள்ளன. அதன் பகுதியாக, பல நாடுகள் தங்களது தேவைக்கு சீனாவை சார்ந்திருப்பதன் அபாயத்தை உணர்ந்துகொண்டு, மாற்று நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றன.
எனினும், முழுமையாக சீனாவைச் சாராமல் இயங்குவது தற்போதை சூழலில் சாத்தியமில்லை. இந்நிலையில், சீன அரசின் உணவு இருப்பு குறித்த அறிவிப்பு - அது உள்நாட்டு அறிவிப்பாகவே இருந்தபோதிலும் - உலகைசற்று பீதி அடையவைத்திருக்கிறது. சீனாவில் நடக்கும் விசயங்கள் அனைத்தும் மர்மமாகவே இருக்கின்றன. சீனாவை சார்ந்திருப்பது உலக நாடுகளுக்கு ‘கழுத்துக்கு கத்தி’ என்பதாகவே உள்ளது.