வணிக வீதி

இப்படியும் வறுமையை ஒழிக்கலாம்!

செய்திப்பிரிவு

தாராளமயம், சந்தைமயமாக்கலில் இந்தியாவில் கோடீஸ்வரர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதேசமயம் ஏழை-பணக்காரர்கள் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

நாளொன்றுக்கு நகர்ப்புறத்தில் ரூ.41.80 வருமானம் ஈட்டுபவரும், கிராமப்பகுதியில் ரூ. 27.50 வருமானம் ஈட்டுவோரும் வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பதாக டெண்டுல்கர் குழு பரிந்துரைத்தது. வறுமைக் கோட்டுக்கான அளவீடுகளில் இன்னமும் சர்ச்சை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் அளவை அதாவது ஏழ்மையை போக்க அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டுதானிருக்கிறது.

மானிய உதவி, வேலை உறுதித் திட்டம் என வறுமையை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒருபுறமிருந்தாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளன.

நந்தன் நிலகேணி உருவாக்கியுள்ள நட்ஜ் அறக்கட்டளை, வறுமையைப் போக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனமாக லாப நோக்கமில்லாத அறக்கட்டளையாக இது செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை சமூகத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களது குடும்பத்தினரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து திறன் மிக்கவர்களாக உருவாக்கி வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம் வறுமையில் சிக்கித் தவித்த குடும்பங்கள் இப்போது அதிலிருந்து மீண்டு வருகின்றன.

குருகுலம்

குருகுலக் கல்வி மன்னர் கால முறை என்றிருந்தாலும், அந்தப் பெயரில் தேர்வு செய்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உறைவிட பயிற்சி (தங்குமிட வசதியோடு) அளிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான நான்கு மாத கால பயிற்சியில் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரின் புறநகர்ப்பகுதியில் வசித்து வந்த ஏழ்மைக் குடும்பத்தை சேர்ந்த ஆயிஷா சித்திகாவுக்கு பியூட்டி பார்லர் அமைப்பதற்கான பயிற்சியை அளித்துள்ளது. இந்த அறக்கட்டளையுடன் இணைந்து கோத்ரெஜ் இப்பயிற்சியை அளித்து இப்போது அவர் மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளார். 8 பேரடங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஆயிஷாவுக்கு இந்தப் பயிற்சி வாழ்க்கையின் நம்பிக்கை கீற்றாக அமைந்துள்ளது.

பயிற்சிக் காலத்தில் நான்கு மாதமும் அவரது குடும்பத்துக்கு ரூ. 3,500 தொகையை இந்த அறக்கட்டளை வழங்கியுள்ளது. வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை இந்த பயிற்சி ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார் ஆயிஷா.

இதேபோல தும்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மகன் குமாருக்கு சமையலறை சூப்பர்வைசர் பணி கிடைத்துள்ளதும் இந்நிறுவனம் அளித்த பயிற்சியினால்தான். இப்போது அவர் மாதம் ரூ. 17 ஆயிரம் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

பிற தன்னார்வ நிறுவனங்களின் உதவியோடு வறுமையில் வாடும் குடும்பத்திலிருந்து 18 வயது முதல் 22 வயது வரையானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு திறன் மிகு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகக் கூறுகிறார் நட்ஜ் அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி அதுல் சாடிஜா.

பயிற்சி முடித்தவர்களுக்கு கார்டிசன், டிரைவ் யு, உபெர் சலூன், இன்னர் செப், நேச்சுரல்ஸ், லக்மே, ஒய்எல்ஜி உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.

வசதி குறைந்த குடும்பத்தில் உள்ள இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பைப் பெறுவதற்கேற்ற பயிற்சியை அளிப்பதே தங்கள் நோக்கம் என்கிறார் அதுல் சாடிஜா.

2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் 20 ஆயிரம் டாலரை முதலீடு செய்துள்ளார் நந்தன் நிலகேணி. இது தவிர அறக்கட்டளைக்கு கிரேட் கிளப் 50 ஆயிரம் டாலரும், இன்மொபி 75 ஆயிரம் டாலரும், பேடிஎம் 20 ஆயிரம் டாலரும் வழங்கியுள்ளது.

நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வை நிறைவேற்ற (சிஎஸ்ஆர்) சில கிராமங்களைத் தத்து எடுத்து அங்கு குடி தண்ணீர், மின்சார வசதி, சாலை வசதி, பள்ளிக்கூட அறைகள் கட்டித் தருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றன.

நட்ஜ் அறக்கட்டளை அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று வறிய குடும்பத்து ஆண், பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த மேற்கொள்ளும் முயற்சி உண்மையிலேயே ஆக்கபூர்வமான வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கையே. அடுத்தகட்டமாக 60 பேருக்கு பயிற்சியளிக்கும் பணியை மார்ச் மாதத்தில் தொடங்கிவிட்டது நட்ஜ் அறக்கட்டளை.

தொடரட்டும் அவர்கள் பணி. ஒழியட்டும் வறுமை.

SCROLL FOR NEXT