karthi@gkmtax.com
கடந்த சில மாதங்களாக ‘பேட் பேங்க்’ (Bad Bank) என்ற வார்த்தையை நீங்கள் பத்திரிகைகளில் அடிக்கடி பார்த்து, அது என்ன ‘பேட் பேங்க்’ என்று முழித்திருக்கலாம். பலர் ‘பேட் பேங்க்’ என்றால் நஷ்டத்தில் உள்ள வங்கிகளைக் குறிப்பதாக புரிந்துகொண்டதையும் பார்க்க முடிந்தது. பேட் பேங்க் என்றால் என்ன, ஏன் அது தற்போது அதிகம் பேசப்படுகிறது… விரிவாகப் பார்க்கலாம்.
அது என்ன பேட் பேங்க்?
பொதுத்துறைவங்கிகளில் அதிகரித்துவரும் வாராக்கடன் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (NARCL) மற்றும் இந்திய கடன் தீர்வு நிறுவனம் (IDRCL) என்ற அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ‘பேட் டெப்ட்’ (Bad Debt) என்று சொல்லப்படும் வாராக்கடனைகையாள்வதற்கென்றே தொடங்கப்பட்டுள்ளதால்அவ்வமைப்பு ‘பேட் பேங்க்’ (Bad Bank)என்று அழைக்கப்படுகிறது.
வங்கிகள் வைத்திருக்கும்வாராக்கடன் சொத்துக்களைதனிமைப்படுத்தும் அமைப்பாக இது செயல்படும்.அப்படி வங்கிகளிடமிருந்து பெற்ற வாராக்கடன் சொத்துகளை சந்தையில் விற்று அந்தத் தொகையை அந்தந்த வங்கிகளுக்குத் திருப்பிக் கொடுக்கும். மொத்தத்தில் வாராக்கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதே இந்தப் பேட் பேங்கின் பணியாகும். அப்படிப்பார்த்தால் இது பேட் பேங்க் இல்லை. குட் பேங்க்.
1988-ம் ஆம் ஆண்டு அமெரிக்காவில் வாராக்கடனை வசூலிக்கும் பொருட்டு முதன்முதலில் பேட் பேங்க் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டு வாராக்கடன் பிரச்சினையைத் தீர்த்தது. அதைத் தொடர்ந்து பின்லாந்து, ஸ்வீடன், இந்தோனேஷியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் பேட் பேங்க் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் வாராக்கடன் நாட்டின் பொருளாதாரத்துக்கே நெருக்கடி ஏற்படுத்தும் அளவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு பேட் பேங்கை உருவாக்கியுள்ளது.
திரும்பி வராத கடன்
பேட் பேங்க் எப்படி செயல்படும் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால், வாராக்கடன் பற்றி கொஞ்சம் தெளிவு ஏற்படுத்திக்கொள்வோம். நாம் வங்கியில் பணம் போடுகிறோம் அல்லவா,அந்தப் பணத்தை வங்கியானது வெளி நிறுவனங்களுக்கு அல்லது கடன் தேவைப்படுபவர்களுக்கு வழங்கும். சும்மா வழங்காது வட்டிக்குத்தான். அதேபோல் நாம் போட்ட பணத்துக்கும் வங்கிநமக்கு வட்டியைத் தரும். ஆனால், வங்கி நமக்குத் தரும் வட்டிக்கும், வங்கி கடனாகக் கொடுத்து அவர்களிடமிருந்து வசூலிக்கும் வட்டிக்கும் பெரிய இடைவெளி உண்டு.
உதாரணமாக, நம்முடைய வைப்புத் தொகைக்கு வங்கி நமக்கு 5 சதவீதம் வட்டி தருகிறது என்றால், நம் பணத்தை வெளியே 10 சதவீத வட்டிக்குக் கடனாகக் கொடுக்கும். இப்படித்தான் வங்கிகள் செயல்படுகின்றன. இப்படியான கட்டமைப்பில், வங்கியிடமிருந்து கடன் வாங்கியவர்கள் வட்டியை முறையாக செலுத்தாவிட்டால், நீண்ட நாள் ஆகியும் கடனையே திருப்பிச் செலுத்தாவிட்டால் என்ன ஆகும்? வங்கி நஷ்டத்தைத் சந்திக்க ஆரம்பிக்கும், வேறு யாருக்கும் புதிதாக கடன் வழங்க முடியாத நிலை ஏற்படும், ஒரு கட்டத்தில் நாம் போட்டத் தொகையையே வங்கியால் திருப்பித் தர முடியாமல் போகும். இந்தச் சூழல் தீவிரம் அடைந்தால் அது நாட்டின் பொருளாதாரத்தையே பாதித்துவிடும்.
எந்தவொரு கடனுக்கும் அசல் அல்லது வட்டியை90 நாட்களுக்கும் மேலாக திரும்ப செலுத்தப்படாவிட்டால், அது வாராக்கடன் என வகைப்படுத்தபடும்.2021 மார்ச் மாத நிலவரப்படி இந்தியாவின் வங்கி அமைப்பில் உள்ள மொத்த வாராக்கடன் ரூ.8.34 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டில் அது ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளிலே வாராக்கடன் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் வாராக்கடனை வசூல் செய்வதற்கு வங்கி திவால் சட்டம்,சர்ஃபேசி சட்டம்,சொத்து மறுசீரமைப்புநிறுவனங்கள்என 28 அமைப்புகள் உள்ளன. ஆனால், இவற்றால் இந்திய வங்கிகளின் வாராக்கடனை முழுமையாக மீட்க முடியவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வங்கி திவால் சட்டம்தனது கடன் தீர்ப்பாயங்கள் மூலம் எடுத்துக்கொண்ட வழக்குகளில் வங்கிகளுக்கு கிடைக்கவேண்டிய தொகையில் சுமார் 50 சதவீதத்துக்கும்குறைவான தொகையை மட்டுமே வசூல் செய்துகொடுத்துள்ளது என்பதும் மீதமுள்ள தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டதுஎன்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.இந்தச் சூழலில்தான் மத்திய அரசு பேட் பேங்கை உருவாக்கியுள்ளது.
பேட் பேங்க் என்ன செய்யும்?
பேட் பேங்கானது, பிற வங்கிகளின் வாராக்கடன் கணக்குகளை பெற்று, கடன் பெற்ற குறிப்பிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதாவது, வங்கிகள் தங்களது வாராக்கடன்களில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்திடம் கொடுக்கும். அந்நிறுவனம் அந்த வாராக்கடன் தொகையில் 15சதவீதத்தை உடனடிபணமாகவும், மீதமுள்ள 85சதவீதத்தை அரசு உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்புப் பத்திரங்களாகவும் (Security Receipts)அந்த வங்கிகளுக்கு வழங்கும். இந்த பத்திரங்களின் மீதான அரசின் உத்தரவாதம் ரூ.30,600கோடி.
இவ்வாறு பெறப்படும் அச்சொத்துக்கள் இந்திய கடன் தீர்வு நிறுவனம் (IDRCL) மூலம் சந்தையில் விற்கப்பட்டு அதன் மூலம் வங்கிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மீதுமுள்ள 85சதவீம் ஒப்படைக்கப்படும். வங்கிகளிடம் இருந்து பெற்ற சொத்துக்களை விற்கும்போது அதன் ஒப்பந்தத் தொகையைவிட குறைவாக விலை போகும் பட்சத்தில், அதனால் உருவாகும் இழப்பீடுகள் ரூ.30,600கோடி மதிப்புடைய அரசு உத்தரவாத பத்திரத்தின் மூலம் ஈடு செய்யப்படும். தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் முழுமையான பொதுத்துறை நிறுவனமாக செயல்படும். இந்திய கடன் தீர்வு நிறுவனத்தின் 51 சதவீத பங்குகள் தனியார் வசம் இருக்கும்.
ஒவ்வொரு வங்கிக்கும் வாராக்கடன் வசூலிப்பில் அதற்கென்று தனித்த அணுகுமுறை, வசூலிப்பு முறை, நிதிக்கொள்கை இருக்கும். பேட் பேங்க் புதிய முறையில் வாராக்கடன் வசூலிப்பை மட்டுமே மேற்கொள்ள இருப்பதால், அதன் முயற்சி நல்ல பலன் அளிக்கவே வாய்ப்புகள் அதிகம்.தவிர, வங்கிகள் அதன் அன்றாடச் செயல்பாடுகளுக்கு மத்தியில் வாராக் கடன் வசூலில் ஈடுபடுவ தென்பது சிரமமான காரியம். ஆனால், பேட் பேங்க் வாராக்கடன் பிரச்சினையை மட்டுமே கையாளும். இதனால், வங்கிகளின் வாராக்கடன் சுமை நீங்கும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி வாராக்கடன் சுமை குறைந்தால் வங்கிகளால், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதியகடன்களை வழங்க முடியும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் பிரகாசிக்க வாய்ப்பு உள்ளது.காத்திருந்து பார்ப்போம்!