வணிக மொழியில், 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பைக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ‘யுனிகார்ன்’ என்பார்கள். 2021-ல் அக்டோபர் மாதம் வரையில் மட்டும் இந்தியாவில் 30 நிறுவனங்கள் ‘யுனிகார்ன்’ பட்டியலில் இணைந்துள்ளன. 2011-2014 வரையில் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு நிறுவனம் யுனிகார்ன் பட்டியலில் இணைந்தது. 2015-ல் அந்த எண்ணிக்கை நான்காக ஆனது.
2018-க்குப் பிறகு யுனிகார்ன் பட்டியலில் இணையும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது. 2018-ல் 8, 2019-ல், 9, 2020-ல் 10 நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்தன. இந்நிலையில் இவ்வாண்டு மட்டும் 30 நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருப்பது, இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான தொழில் வாய்ப்புகள் மீது உலகின் கவனத்தை ஈர்க்கச் செய்திருக்கிறது.
குறிப்பாக, இ-காமர்ஸ், மென்பொருள் சேவை, பணப்பரிவர்த்தனை, லாஜிஸ்டிக்ஸ், கேமிங், கல்வி உணவு விநியோகம், போக்குவரத்து சேவை, சமூக வலைதளம் போன்ற துறைகளில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களே இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளன. பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனங்களில் பேடிஎம், போன்பே, இகாமர்ஸில் பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், மீஸோ, கல்வித் துறையில் பைஜூஸ், அன்அகாடமி, போக்குவரத்து சேவையில் ஓலா கேப்ஸ், விடுதி சேவையில் ஓயோ, கேமிங்கில் டீரீம் 11 என கடந்த பத்தாண்டுகளில் ‘யுனிகார்ன்’ பட்டியலில் இணைந்த நிறுவனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் பைஜூஸ் மற்றும் பேடிஎம் 15 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட நிறுவனங்களாக மாறியுள்ளன. 10 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட நிறுவனங்கள் ‘டெகாகார்ன்’ என்று அழைக்கப்படும்.
இந்தியாவில் வேறெந்த நகரங்களைவிடவும் பெங்களூரில்தான் ‘யுனிகார்ன்’ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகின்றன. அதற்கு அடுத்த இடத்தில் மும்பை இருக்கிறது. இந்த ஆண்டு யுனிகார்ன் பட்டியலில் இணைந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் பெங்களூரையும் 7 நிறுவனங்கள் மும்பையையும் தலைமையிடமாகக் கொண்டவை. ‘யுனிகார்ன்’ ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்தமாக இந்தியாவில் 60-க்கு மேற்பட்ட ‘யுனிகார்ன்’ ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. அமெரிக்கா 396 யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கொண்டு முதல் இடத்திலும், சீனா 277 நிறுவனங்களைக் கொண்டு இரண்டாவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து (32) நான்காவது இடத்திலும், ஜெர்மனி (18) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் இணையப் பயன்பாடு கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் 75 கோடி மக்கள் ஸ்மார்ட் போன் வழியாக இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவில் டிஜிட்டல் செயல்பாடு விரிவடைந்துள்ளது. இதுதான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் வளர்ச்சி காண்பதற்கு அடிப்படைக் காரணம். அதுவும் கரோனா பாதிப்புக்குப் பிறகு, மருத்துவம் முதல் அலுவலக சந்திப்பு வரையில் டிஜிட்டலை நோக்கி நகர்ந்தது.
இந்த மாற்றமே ஒரே ஆண்டில் 30 நிறுவனங்களை யுனிகார்னாக ஆக்கியிருக்கிறது. தற்சமயம் சீன அரசு அந்நாட்டின் தொழிற்கொள்கையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களின் அதீதப் போக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. இதனால், சீன நிறுவனங்களும், சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நெருக்கடியில் உள்ளனர். இதனால், அத்தகைய முதலீட்டாளர்கள் இந்தியாவின் பக்கம் திரும்ப வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இந்தியாவில் யுனிகார்னாக மாறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.