சுப.மீனாட்சி சுந்தரம்
somasmen@gmail.com
நாவல் வகைமைகளில் குடும்ப நாவல், சமூக நாவல், துப்பறியும் நாவல் என்று சில வகைமைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘பிசினஸ் நாவல்’ என்ற வகைமையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? மேற்கத்திய நாடுகளில் இந்த வகைமை பிரபலம்.
என்பது நிறுவனங்களின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கற்பனைக் கதையின் வழியாக வணிக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளப்படும் நாவல் வடிவம்தான் பிசினஸ் நாவல். சுயமுன்னேற்றம், சிக்கலான மேலாண்மைக் கருத்துக்கள் போன்றவற்றை உரைநடை புத்தகங்கள் மூலமாக பகிர்ந்து கொள்வதை விட எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதை வடிவில் தகவல்களை வழங்கும் முறை இது. எலியாஹு கோல்ராட் எழுதிய ‘தி கோல்’, டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன் எழுதிய ‘ஹு மூவ்ட் மை சீஸ்’, ‘ஒன் மினிட் மேனேஜர்’ போன்ற புத்தகங்கள் குறைந்த அளவு பக்கங்களில் வணிகத்தில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களை கொண்ட பிரபலமான புத்தகங்கள்.
அந்த வரிசையில் கிறிஸ்டொமான்ஸ்கி எழுதிய ‘திகாஸ்ட்’ (The Cost) நாவல் கவனிக்கத்தக்கதாக உள்ளது. இந்நாவல் டக் பென்சன் என்ற செலவு பொறியியல் ஆலோசகரைப் பற்றிய கதையாகும். திவால் நிலையின் விளிம்பில் இருக்கும் எலக்ட்ரானிகா என்ற நிறுவனத்தில் நடைபெறும் செலவினங்களைப் புரிந்து கொள்ளவும் அவற்றை மேம்படுத்தவும் தன்னால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்கிறார் டக். எலக்ட்ரானிகா நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்காக தனது சொந்த பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டு, கார்ப்பரேட் நாடகங்களுக்கு மத்தியில் அவர் தனது திறமைகளைப் பயன்படுத்துகிறார்.
பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்களது செலவு மேலாண்மை, கொட்டேஷன் செயல்முறைகளில் பெரிதும் அறியப்படாத வணிக பிரச்சினைகளை இந்தப்புத்தகம் அம்பலப்படுத்துகிறது. நிறுவனங்கள் தோல்வியுறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தோல்விகள் பெரும்பாலும் ஒரு நிறுவனத்தில் ஏற்படும் சொந்த செலவுகளை புரிந்து கொண்டு, அவற்றை சரியான முறையில் நிர்வகிக்க இயலாதபோதுதான் தொடங்குகின்றன. அத்தகையப் பிரச்சினைகள் ஏற்படுவதை எப்படித் தடுப்பது என்பதை இந்த நாவல் பேசுகிறது.
போட்டிகள் நிறைந்த உலகளாவிய சந்தையில் ஒரு நிறுவனம் தனது நிலையை தக்கவைத்துக் கொள்வதோடு, தொடர்ச்சியாக வளர வேண்டுமென்றால் அதற்கு ஒரு “காம்பெடிட்டிவ் எட்ஜ்” என்ற சொல்லக்கூடிய போட்டி விளிம்பு மிகவும் அவசியம். அதன் மூலமே சிறந்த தொழில்நுட்பம், புதுமையான வடிவமைப்பு, காப்புரிமை பாதுகாப்பு, நன்கு நிறுவப்பட்ட வாடிக்கையாளர் உறவுகள் போன்றவற்றில் ஒரு நிறுவனம் தன்னை மேம்படுத்திக் கொள்ள முடியும். கூடவே, செலவுகளை துல்லியமாக அளவிட்டு, கட்டுப்படுத்தி, தயாரிப்பை மேம்படுத்துவதற்கான திறன் இன்றியமையாதது.
நிறுவனங்களின் செலவு பொறியியலில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்வதோடு, அவற்றை கையாளுவதற்கான வழி முறைகளில் எளிமையான முறைகள் இந்நாவலில் விவாதிக்கப்படுகின்றன இறுதியில், எலக்ட்ரானிகா நிறுவனம் தனது மிகப் பெரிய வாடிக்கையாளர் எதிர்பார்த்திருந்த விலையில் பொருளை வடிவமைத்து, செலவைக் குறைத்து ஆர்டரை பெறுகிறது. இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் தருணத்தில் டக், அந்தப் பெருநிறுவனத்தில் உயர் பதவிக்கு நியமிக்கப்படுவதோடு கதை முடிகிறது. இந்தப் புத்தகத்தில் வழங்கப்பட்ட விவரங்களானது நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு வழிகாட்டுதலை அளிக்கிறது. அந்த வகையில் நிறுவனத்தில் பணிபுரியும், வணிகத்தில் ஈடுபடும் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய புத்தகம் இது.