ரோமன் கிறிஸ்தவர்களின் (ஆர்சி) புனிதத் தலமாகக் கருதப்படும் நகரம் வாடிகன். கிறிஸ்தவ தேவாலயங்களின் தலைமையகம் எனப்படும் இந்நகருக்கு ஒருமுறையாவது சென்று தங்கள் மத குருவான போப்பை தரிசித்து அவரது அருளுரையைக் கேட்க வேண்டும் என்பது கிறிஸ்தவர்களின் ஆசை.
குர்காவ்னைச் சேர்ந்த விநீத் ஜே மெஹ்ராவுக்கு போப்பை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கிறிஸ்தவர்கள் பலருக்கே போப்பின் தரிசனத்தைப் பெரும் வாய்ப்பு மிக அரிதான விஷயம். ஆனால் மெஹ்ராவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது அவரது கண்டுபிடிப்பான பேட்டரி வாகனம் மூலமாகத்தான்.
வாடிகன் நகரில் பேட்டரி ஸ்கூட்டர், பேட்டரியில் இயங்கும் கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை உபயோகிப்பது தொடர்பாக போப்பை சந்தித்து விவரிக்க உள்ளார் மெஹ்ரா.
வாடிகன் நகரில் உள்ள சர்வதேச ஸ்திர வளர்ச்சி அமைப்பு (ஜிஎஸ்என்எப்) இவருக்கு அழைப்பு விடுத்துள்ளது. வாடிகன் நகரில் புகை வெளியிடாத வாகனங்களை உபயோகிப்பது தொடர்பாக போப் பிரான்சிஸை சந்தித்து அவரது ஆலோசனை பேரில் வாகனங்களை தயாரித்து அளிக்க உள்ளார் மெஹ்ரா.
புவி வெப்பமடைவது குறித்த விஷயத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள போப், வாடிகன் நகரிலும் சூழல் பாதிப்பில்லாத வாகனங்களை இயக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதிதான் மெஹ்ராவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாகும்.
டெல்லியில் சுற்றுச் சூழல் கேடுக்கு தீர்வு காணும் விதமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் டி ஓடி எனும் நிறுவனத்தைத் தொடங்கினார் மெஹ்ரா. கரியமில வாயுவை வெளியிடாத வாகனங்களைத் தயாரிப்பதே இவரது நிறுவனத்தின் நோக்கமாகும்.
பல நிறுவனங்களின் பேட்டரி ஸ்கூட்டரை வாங்கி அதைப் பார்த்து அதிலுள்ள குறை நிறைகளை ஆராய மூன்று மாதம் தேவைப்பட்டதாகக் கூறுகிறார் மெஹ்ரா.
இந்நிறுவனம் 100 பேட்டரி ஸ்கூட்டரை டெல்லிக்கு அளித்துள்ளது. இவை டெல்லி-என்சிஆர் பகுதியில் இயக்கப்படுகின்றன. இவற்றின் வேகம் மணிக்கு 25. கி.மீ. ஆகும்.
டெல்லியில் உபெர் வாடகைக் கார் களை இயக்கும் நிறுவனம் பின்பற்றும் முறையில் வாடகைக்கு இ-மோட்டார் பைக்குகளை அறிமுகப்படுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தவிர, பேட்டரி ரிக் ஷாக்களை தயாரிக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பேட்டரி மோட்டார் வாகன உருவாக்கத்துக்கென இந்நிறுவனம் 25 லட்சம் டாலரை முதலீடு செய்துள்ளது. இப்போது மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பஸ் நிறுத்தங்களுக்கிடையே பேட்டரி ரிக் ஷாக்களை இயக்க உள்ளது. மும்பை மாநகருக்கு 100 பேட்டரி பஸ்களைத் தயாரித்துத் தரும் டெண்டரையும் இந்நிறுவனம் சமீபத்தில் பெற்றுள்ளது. இ-கார் சேவையில் இறங்கும் திட்டமும் உள்ளதாக மெஹ்ரா கூறுகிறார்..
குப்பைகளை அள்ளும் பேட்டரி வாகனங்களை ஒவ்வொரு நகராட்சிகளுக்கு தயாரித்து அளிக்கும் திட்டமும் தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறார் மெஹ்ரா.
தபால் துறையின் சேவையும் பசுமையாக மாற பேட்டரி ஸ்கூட்டர்களை வாடகைக்கு விடவும் முடிவு செய்துள்ளது இந்நிறுவனம்.
சுற்றுச் சூழலைக் காக்கும் முயற்சியில் தீவிரமாகவும் அதற்கான வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இவருக்கு போப்பிடமிருந்து அழைப்பு வந்ததில் வியப்பில்லை.