வணிக வீதி

மல்லையாக்கள் உருவாவதைத் தடுக்க முடியுமா?

செய்திப்பிரிவு

கிங்பிஷர் நிறுவனத்துக்காக வங்கிகளில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் நிதி மோசடி செய்தவர் மல்லையா. சுமார் 7 ஆயிரம் கோடி கடன் வட்டியுடன் 9 ஆயிரம் கோடியாக வளர, கடன் கொடுத்த வங்கிகள் நெருக்கத் தொடங்கின. வழக்குகள் சுற்றி வளைக்கத் தொடங்கியதும் இங்கிலாந்துக்கு பறந்துவிட்டார் மல்லையா. மாநிலங்களவை நியமன உறுப்பினராக உள்ள விஜய் மல்லையா மார்ச் 1-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மார்ச் 2-ம் தேதி நிதி மோசடி வழக்கிற்காக நீதிமன்றத்துக்கு ஆஜராக வேண்டியவர், இந்தியாவில் இல்லை, தப்பிச் சென்றுவிட்டார் என அறிவிக்கிறார் மத்திய அரசின் வழக்கறிஞர்.

மல்லையா செய்த மோசடி வெளிப்படையாக தெரிந்த ஒன்று. பொதுத்துறை வங்கிகளில் அவர் வாங்கிய பணம் அனைத்தும் மக்களின் பணம். வங்கிகள் கடன் கேட்டு நெருக்க தொடங்கியபோதே சட்ட நடவடிக்கைகள் எடுத்து அவரிடமிருந்து பணத்தை திருப்பி வாங்கவில்லை மத்திய அரசு. கைது செய்யப்படுவோம் என்கிற நிலைமையில் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதற்கிடையே மல்லையா விவகாரம் இந்தியா முழுவதும் கேள்விகளை எழுப்பிய பிறகுதான் மத்திய அரசு வாய் திறந்துள்ளது.

விஜய் மல்லையாவுக்கு கொடுத்த மொத்த தொகையும் வங்கிகள் வசூல் செய்யும். புலனாய்வு அமைப்புகள் கடுமையான நடவடிக்கைகள் விஜய் மல்லையா மீது எடுத்து வருகின்றன. மல்லையா எங்கெல்லாம் விதிமுறைகளை மீறி இருக்கிறாரோ அங்கெல்லாம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்று குறிப்பிட்டுள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி. அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைப்பும் அவர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நடவடிக்கைகள் எப்போது எடுக்கப்படும், பணத்தை எப்படி திருப்பி வாங்கப்படும் என்பதும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டிய ஒன்று.

கடந்த காலங்களில் இப்படி நிதி மோசடிகள் செய்த எத்தனை தொழிலதிபர்களிடமிருந்து அரசாங்கம் சொத்துக்களை மீட்டுள்ளது என்பது கேள்விக்குறி. நீதிமன்ற நடவடிக்கை மூலம் சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய் தண்டனை அனுபவித்தாலும், அவரிடமிருந்து எத்தனை கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டு முதலீட்டாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது? நிலைமை இவ்வாறிருக்க அருண்ஜேட்லி சொல்வதுபோல அவ்வளவு சீக்கிரம் மல்லையாவிடமிருந்து பணத்தை திரும்ப வாங்கிவிட முடியுமா என்பது கேள்விக்குறி.

வளர்ச்சியும் வீழ்ச்சியும்

விஜய் மல்லையாவின் தந்தை விட்டல் 1983-ல் மறைந்த பிறகு 10 கோடி டாலர்களாக இருந்த நிறுவனத்தின் சொத்தை, 400 கோடி டாலர்களாக உயர்த்தினார். தனது யூபி குரூப் நிறுவனத்தை உலகத்திலேயே இரண்டாவது பெரிய மதுபான நிறுவனமாக வளர்த்தவர் மல்லையா. யூபி நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மட்டும் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளது. 2003-ம் ஆண்டில்தான் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். 64 விமானங்களுடன் இந்தியாவில் இரண்டாவது பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக கிங்பிஷர் இருந்தது. விலை குறைவான விமான சேவையில் இருந்த ஏர் டெக்கானை வாங்கியதில் பெரிய சறுக்கல். இதுதான் அவருக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

மல்லையாவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தினால் அவருக்கு எந்த வகையிலும் இழப்பு இல்லை. கிங்பிஷர் ஊழியர்கள் சம்பள நிலுவை கேட்டு குரல் கொடுத்தபோது அவர் கோவாவில் தனது 60 தாவது பிறந்த நாளை மிகுந்த ஆடம்பரம்பரமாக கொண்டாடிக் கொண்டிருந்தார்.

வங்கிகள் கொடுத்த கடனுக்கு மன்றாடியபோது தனது காலாண்டர் தயாரிப்புக்கான மாடல் அழகிகளுடன் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தார். எனவே கிங்பிஷர் நிறுவனத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் மல்லையா திவாலாகிவிடவில்லை. அவர் தனது சொகுசு சாம்ராஜ்ஜியத்தில் எந்த குறையும் இல்லாமல்தான் இருக்கிறார். இந்த 9,000 கோடி ரூபாய் அவரது சொத்துக்களின் சாம்ராஜ்ஜியதில் சிறு அளவாகத்தான் இருக்கும் என்பதும் உண்மை.

மல்லையாவுக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சொத்துகள் இருக்கின்றன. மொனாகோ, ஸ்காட்லாந்து, நியூயார்க், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள மாளிகைகளும், பெங்களூரில் உள்ள பரம்பரை வீடும் அடங்கும். விலையுயர்ந்த கார்கள், கலைப்படைப்புகள், அரிய பொருட்கள், மதுபானப் புட்டிகளின் சேகரிப்புகளை வைத்திருக்கிறார். கடந்த 2004-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 1 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து எடுத்தார்.

2009-ல் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகளின் கடிதங்களை 1.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். மல்லையாவுக்குச் சொந்தமான இண்டியன் எம்பரஸ் என்ற 95 மீட்டர் நீளமுள்ள உல்லாசப் படகு, உலகிலேயே பெரிய தனிநபர் படகுகளில் ஒன்று. தவிர தனது குழும நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவு பங்குகளில் மதிப்பும் பல ஆயிரம் கோடிகள் மதிப்பு கொண்டவை. கிரிக்கெட் அணி உள்ளிட்ட சொத்துக்கள் பட்டியல் நீள்கிறது.

தலையீடுகள் காரணமா?

மும்பையில் உள்ள கிங்பிஷர் நிறுவனத்துக்கு சொந்தமான அதன் தலைமை அலுவலகத்தை ஏற்கெனவே எஸ்பிஐ நிறுவனம் ஜப்தி செய்திருந்தது. அதை 150 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விட உள்ளதாகவும் அறிவித்தது. மார்ச் 17 ஆம் தேதி நடந்த ஏலத்தில் கலந்துகொள்ள ஒருவரும் வரவில்லை. கட்டிடத்தின் மதிப்பை விட ஏலத்தொகை அதிகமாக இருந்தது என்று கருத்து எழுந்துள்ளது. இந்த ஏலத்தில் வேறு நெருக்கடிகள் எழுந்ததா என்று ஆராய வேண்டும்.

ஏற்கெனவே யுபி நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதற்காக டியாஜியோ அளித்த பணத்தை விஜய் மல்லையா பயன்படுத்த பெங்களூரு கடன் வசூல் தீர்பாயம் தடை விதித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பு வரும் முன்பே பாதி தொகையைக் கொடுத்துவிட்டதாக டியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோல கடன் கொடுத்த ஒவ்வொரு வங்கிகளும் தங்களது கடனுக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொத்துக்களை கையகப்படுத்தவும், அவரது நடவடிக்கைகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

சாத்தியமாகுமா?

இந்த நிலையில் வாராக்கடன் பிரச்சினைதான் இந்திய வங்கிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்று கூறிவருகிறார் அருண்ஜேட்லி. ஆனால் வாராக்கடன் பிரச்சினைக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்றால் கிடையாது. 1 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியவர்கள் பரவலாக கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.

25 லட்சத்துக்கும் அதிகமாக கடன் வாங்கியவர்களில் வங்கிக்கு திருப்பி செலுத்தாதவர்களின் சதவீதம் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள்ன. கடனை திருப்பி வசூலிக்கும் அளவும் மிகக் குறைவாகவே உள்ளது. தவிர ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புக்கு வங்கி நிதி மோசடி வழக்குகளை அமலாக்கப்பிரிவு வைத்துள்ளது. வழக்கு தொடுத்ததோடு சரி. வேறு நடவடிக்கைகள் இல்லை.

இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் இந்தியாவில் சட்ட ரீதியாக கடன் வசூலிக்கும் நடைமுறைகளில் பல ஓட்டைகள் இருந்து வருகின்றன என்பதுதான். அரசியல் தலையீடுகளும், உள் ஒப்பந்தங்களும் கடன் வசூல் நடவடிக்கைகளை தாமதப்படுத்துகின்றன என்கிறார்கள்.

தொழில் சூழல் சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் வங்கிகள் கடன்களை அளிக்கின்றன. ஏமாற்ற வேண்டும் என்று திட்டமிட்டே கடன் வாங்கும் தொழிலதிபர்களிடமிருந்து கடனை வசூலிக்க கடுமையாக நடைமுறைகள் ஏற்படுத்த வேண்டும். என்பது எல்லோரது எதிர்பார்ப்பும்.

மல்லையாவிடமிருந்து 9,000 கோடி ரூபாய் வசூலிக்க முடியுமா என்பது இந்தியாவில் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்விக்குறி? சாத்தியமில்லை என்றால் பல மல்லையாக்கள் உருவாவதைத் தடுக்க முடியாது.

SCROLL FOR NEXT