கரோனா காலகட்டம் பெரும்பாலானவர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது நிச்சயம். உறவினர்களை இழந்த சோகம், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அனுபவம், வேலை இழந்து அல்லது வருமானம் குறைந்து அல்லாடிய அவலம் என பல சோக சம்பவங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அனைவருக்குமே வாழ்க்கை சோகமாக அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு அதிர்ஷ்டம் அது கரோனா காலகட்டமாக இருந்தாலும் கூரையை பிய்த்துக் கொண்டுதான் கொட்டும். அதை யாராலும் தடுக்கவே முடியாது. அத்தகைய அதிர்ஷ்டசாலிகள்தான் பிரெஷ்வொர்க்ஸ் நிறுவன பணியாளர்கள்.
சென்னையில் தொடங்கி இன்று அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தை அமைத்துள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் பிரெஷ்வொர்க்ஸ். இந்நிறுவனம் பொதுப்பங்கு வெளியிட்டு 100 கோடி டாலர்களைத் திரட்டியுள்ளது. பங்கு வெளியீட்டில் நிறுவனப் பணியாளர்களுக்கும் கணிசமான பங்குகளை அளித்துள்ளது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,000 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுள்ள 500 பணியாளர்களும் இன்று கோடீஸ்வரர்கள். தொடக்க நாளிலேயே இந்நிறுவன பங்கு 46.67 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிட்ட விலை 36 டாலர். ஆனால் முதல் நாளிலேயே 30 சதவீத கூடுதல் விலைக்கு இந்நிறுவன பங்குகள் விற்பனையானது.
2011-ம் ஆண்டு சென்னையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இன்ஜினீயரிங் மட்டுமே பல இளைஞர்களின் கனவாக இருந்த காலகட்டத்தில் எம்பிஏ முதுகலைப்படிப்பை முடித்து தனது பாதை வித்தியாசமானது என்ற அணுகுமுறையைக் கொண்டவர். ஸோகோ நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய சூழலில் சொந்தமாக நிறுவனத்தை நண்பர் ஷான் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து தொடங்கியதுதான் பிரெஷ்டெஸ்க். பின்னர் பிரெஷ்வொர்க்ஸாக மாறி 10 ஆண்டுகளில் நியூயார்க் பங்குச் சந்தையில் பொதுப் பங்கு வெளியிட்டு நிதி திரட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது. சிறிய, பெரிய நிறுவனங்களுக்கான சாஃப்ட்வேரை வடிவமைத்து உருவாக்கித் தருவதுதான் இந்நிறுவனத்தின் பிரதான பணியாகும். உலகம் முழுவதும் 50 ஆயிரம் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது இந்நிறுவனம். இந்நிறுவனத்தில் டைகர் குளோபல், ஆக்செல் இந்தியா நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதில் ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்டபோது முதலீடு செய்தது ஆக்செல் இந்தியா நிறுவனம்தான். இவை தவிர செகோயா கேபிடல் 12 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. கூகுள் நிறுவனம் வசம் 8 சதவீத பங்குகள் உள்ளன.
சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகர்
நாஸ்டாக்கில் தனது நிறுவன பங்குகளை பட்டியலிட்ட கிரிஷ் மாத்ருபூதம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். 2017-ம் ஆண்டு சூப்பர்ஸ்டாருடனான சந்திப்பை இன்றளவும் சிலாகித்து பேசுகிறார்.தனது பொது பங்கு வெளியீட்டின் சங்கேத பெயர் (code name) புராஜெக்ட் சூப்பர்ஸ்டார் என பெயரிட்டு தனது மானசீக தலைவனுக்கு மகுடம் சூட்டியுள்ளார் மாத்ருபூதம். அமெரிக்க பங்குச் சந்தை விண்ணப்பக் கடிதத்திலும் ``நன்றி தலைவா'’ என்று சூப்பர்ஸ்டாரை அவர் குறிப்பிட்டுள்ளார்.
700 சதுர அடி பரப்பளவில் உருவான இந்நிறுவனம் இன்று உலகெங்கும் வியாபித்துள்ளது, சூப்பர் ஸ்டாரின் புகழைப் போல...