கார் பந்தயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். மோட்டார் சைக்கிள் பந்தயமும் நடைபெறுவதுண்டு. ஆனால் இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக டிரக்குகள் எனப்படும் லாரிகளுக்கான பந்தயம் நடைபெறுவது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
டிரக்குகளுக்கான பந்தயம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம். இந்தப் போட்டியில் பயிற்சி பெற்ற ஓட்டுநர்களே பங்கேற்க முடியும்.
ஏறக்குறைய கார் பந்தயம் போலத்தான். சாலைகளில் கார் ஓட்டுவதற்கும், பந்தய மைதானத்தில் கார் ஓட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதே. அதைப்போலத்தான் டிரக்குகளுக்கான போட்டி பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் டிரக்குகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நடைபெறும் ஒரே ஒரு போட்டியும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதுதவிர இந்த ஆண்டு 24 போட்டிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன.
கார்களுக்கான ஃபார்முலா -1 பந்தயம் போல டிரக்குகளுக்கு டி1 பந்தயத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து கனரக வாகன ஓட்டுநர்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். கடந்த இரண்டு முறை நடைபெற்ற போட்டிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் பங்கேற்று கோப்பையை வென்றுள்ளனர்.
சர்வதேச ஆட்டோமொபைல் சம்மேளனம் (எஃப்ஐஏ) இப்போட்டிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள கார் பந்தய மைதானமான புத் சர்கியூட்டில் இந்தப் பந்தயம் நடத்தப்படுகிறது.
மொத்தம் இந்தப் போட்டியில் 12 பிரைமா டிரக்குகள் பங்கேற்கும். இவை 6 அணிகளாகப் பிரிக்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் பிரைமா டிரக்குகளின் செயல்திறன் சர்வதேச விதிமுறைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளன. இவை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.
காஸ்ட்ரால் வெக்டான், குமின்ஸ், டாடா டெக்னாலஜீஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ், டீலர் டேர்டெவில், டீலர் வாரியர்ஸ், அலைடு பார்ட்னர்ஸ் என்ற 6 அணிகளாக இவை பங்கேற்கும்.
இந்த ஆண்டு இப்போட்டி மார்ச் மாதம் 20-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுவரை வெளிநாட்டைச் சேர்ந்த தொழில்முறை கனரக வாகன ஓட்டுநர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இம்முறை இந்தியாவிலிருந்து ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கனரக வாகனங்களுக்கான சந்தை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்பட்சத்தில் சரக்கு வாகனப் போக்குவரத்து எளிதாகிறது. இத்துறையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் டி1 போட்டிகள் எதிர்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெரும் என்பது நிச்சயம். இந்தப் போட்டிகள் நடைபெறுவது அதிகரிக்கும்போது மக்கள் மத்தியில் லாரி ஓட்டுநர்கள் மீதான மதிப்பும் உயரும்.