வணிக வீதி

அமெரிக்காவில் வங்கி சேமிப்புக்கு கட்டணம்?

செய்திப்பிரிவு

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சினை. பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இங்கு ரகுராம் ராஜன் போராடுகிறார். ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பணவீக்கத்தை உருவாக்க போராடுகிறார்கள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். 5 சதவீதம், 10 சதவீதம், ஒரு மடங்கு என உயர்த்திக்கொண்டே போகலாம். ஆனால் பணவீக்கத்தை உருவாக்க எந்த அளவுக்கு வட்டியைக் குறைக்க முடியும். பூஜ்ஜியத்துக்கு கொண்டு வரலாம். ஆனால் அதற்கு கீழே?

முடியும் என்று கூறியிருக்கிறது ஜப்பானின் மத்திய வங்கி. கடந்த வாரம் வட்டி விகிதத்தை -0.1 சதவீதமாக குறைத்திருக்கிறது. அதாவது வங்கியில் டெபாசிட் செய்யும் தொகைக்கு முதலீட்டாளர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் வங்கியில் பணம் இல்லாமல் மக்கள் கையில் பணம் இருக்கும். அவர்கள் செலவு செய்வதன் மூலம் பணவீக்கத்தை உருவாக்க முடியும் என்று ஜப்பான் நம்புகிறது. இதுவரை பல வகையான ஊக்க நடவடிக்கைகளை கொண்டு வந்த ஜப்பான் அதிரடியாக வட்டி விகிதத்தையும் பூஜ்ஜியத்துக்கும் கீழே குறைத்தது. கடந்த இருபது வருடங்களாக பொருளாதார மந்த நிலையால் ஜப்பான் போராடுகிறது.

ஆனால் ஜப்பானின் இந்த முடிவை ஆதரிக் கும் முதலீட்டாளர்களும் இருக்கின்றனர். அதேபோல இதுபோன்ற ஆலோசனைகளை ஜப்பானுக்கு யார் சொல்லித்தருகின்றனர் என்று விமர்சனம் செய்பவர்களும் உள்ளனர்.

அமெரிக்காவில்?

இந்த நிலைமையில் அமெரிக்காவிலும் இதேபோல வங்கி சேமிப்புக்கு கட்டணம் வசூலிக்கும் எதிர்மறை வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. கடந்த 9 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக கடந்த டிசம்பரில் அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தியது. அதன் பிறகு இந்த ஆண்டில் வட்டி விகிதம் உயராது என்று கருதப்பட்ட நிலையில் எதிர்மறை வட்டி விகிதம் சாத்தியம் என்ற பேச்சுக்கள் உருவாகி உள்ளன.

எதிர்மறை வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி (பெடரல்) பரிசீலனை செய்யும் என்று பேங்க் ஆப் அமெரிக்காவின் உயரதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார். ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் எதிர்மறை வட்டி விகிதம் இருக்கிறது. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கவலைப்படலாம்.ஆனால் எதிர்மறை வட்டி விகிதத்தை அறிவிக்கும் முடிவு அவ்வளவு எளிதாக இருக்காது. அதற்கு முன்பாக பல விஷயங்களையும் பரிசீலனை செய்தே பிறகே எடுக்கும் முடிவாகதான் இருக்கும் என்ற கருத்தும் இருக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் கூறும் போது, எதிர்மறை வட்டி விகிதத்தை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. ஆனால் பொருளாதாரம் மிகவேகமாக சரிவடையும் போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வோம் என்று ஜனவரியில் கூறினார்.

அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் பென் பெர்னாய்க் கூறும் போது, எதிர்மறை வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி முக்கிய கருவியாக நினைக்க கூடாது. அதே சமயத்தில் தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

உலகின் முக்கியமான நாடுகள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதால், நாணயமதிப்பில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இதனால் ரிசர்வ் வங்கியின் சுமை அதிகமாகும் வாய்ப்பும் இருக்கிறது.

SCROLL FOR NEXT