வணிக வீதி

கவலையளிக்கும் ரோபோக்களின் பெருக்கம்

எம்.ரமேஷ்

எங்க சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம் வெளியாகும் முன்னரே உலகின் கவனத்தை ஈர்த்துவிட்டார் என ரஜினி ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டாம். தொழில் துறையில் எந்திரமயமாக்கல்தான் (ரோபோ) உலக பொருளாதார மையத்தில் பங்கேற்ற தலைவர்களை கவலையடையச் செய்துள்ளது.

நான்காவது தொழில் புரட்சி அதாவது ஆறறிவு படைத்த மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோக்களின் புழக்கம் இத்துறையின் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் என்றாலும் அது மனிதர்களை ஓரங்கட்டிவிடும் என்று பெரும்பாலான தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இப்போது நடந்து வரும் மாற்றங்களால் அனைத்து துறைகளிலும் உள்ள மனித உழைப்பு பணிகள்கூட ரோபோக்கள் வசமாகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப புரட்சி என்ற போர்வையில் மனிதர்களுக்கு வேலையிழப்பை, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தும் ஒரு உலகை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று பெரும்பாலானோர் தங்களது கவலையை இந்த மாநாட்டில் பதிவு செய்துள்ளனர்.

70 லட்சம் பேர் வேலையிழப்பு

இப்போதைய நிலையில் ஆராய்ச்சிகளும், ரோபோ பயன்பாடும் அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்று புள்ளிவிவர ஆதாரம் பலரையும் கவலையடையச் செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக இப்போது பரவலாக ரோபோக்கள் புழக்கத்தில் உள்ள பணியிடங்களில் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்ற விவரம் பெண்ணிய சிந்தனையாளர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. இப்போதுதான் பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்து வருகின்றனர் என்ற எண்ணம் பரவலாக தோன்றிவரும் சூழலில் அதுவும் விரைவிலேயே அருகிவிடும் எனும்போது அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.

ராணுவத்தில்…

உற்பத்தித் துறையில் ரோபோக்களை அதிகம் பயன்படுத்துவதற்குப் பதிலாக ராணுவத்தில் பயன்படுத்தினால் மனித உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்ற கருத்தை முன்வைத்த இங்கிலாந்து பல்கலைகழக பேராசிரியர் ஆனல் வின்ஃபீல்டின் கருத்தையும் மறுப்பதற்கில்லை. இதேபோல மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா மற்றும் ஃபேஸ்புக் சிஓஓ ஷெரில் ஷாண்ட்பெர்க் ஆகியோர் ரோபோக்களின் வருகை தொழில்துறை, சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படும் என்று முன்வைத்த வாதங்களும் இந்த அவையில் இடம்பெறத்தான் செய்தன.

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப் போகிறோமா அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இதன் பலன் கிடைக்கும்படியும், மற்றவர்களுக்கு இது கிடைக்காமலும் போகக்கூடிய பிரிவினையை (digital divide) ஏற்படுத்தப் போகிறோமா என்ற கேள்வியை நாதெள்ளா ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.

உற்பத்தி அதிகரிக்கும்

ரோபோக்கள் வருகையால் தொழில்துறையில் உற்பத்தி அதிகரிக்கும் என்பது 100 சதவீத உண்மை. ஆனால் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது இதன் கசப்பான பக்கம். ரோபோக்களை பயன்படுத்துவதால் உற்பத்தி 30 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா கணித்துள்ளது. உற்பத்தி அதிகரித்தாலும் அதைவாங்க மக்களிடம் பணம் இருக்காது. இது மீண்டும் மிகப் பெரிய பொருளாதார தேக்க நிலையை உருவாக்கும் என்று வின்ஃபீல்ட் எச்சரித்தார்.

வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் என்ற தகவல் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது.

ஐந்து நாடுகளில்

உலக அளவில் ரோபோக்களின் பயன்பாடு 5 நாடுகளில் அதிகமாக உள்ளது. மொத்த உற்பத்தியில் 70 சதவீத ரோபோக்களை சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன.

2002-ம் ஆண்டில் 69,000 ரோபோக்கள் உற்பத்தி என்றிருந்த நிலை 12 ஆண்டுகளில் 2.29 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எந்தெந்த துறைகளில்…

பேக்கேஜிங், பொருள்களை எடுப்பது, சில்லரை விற்பனை கடைகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆபத்தான தொழிற்சாலைக் கழிவுகளை அகற்று வது, அணுக்கழிவை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் பெரும்பாலான நாடுகளில் ரோபோக் கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆட்டோ மொபைல் துறையில் குறிப்பாக பெயின்ட் அடிப்பது, வெல்டிங் செய்வது உள்ளிட்ட பணிகளில் ரோபோக் களின் உபயோகம் அதிக அளவில் உள்ளது.

2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையான காலத்தில் ஆண்டுதோறும் விற்பனையான ரோபோக்களின் எண்ணிக்கை 1.15 லட்சம்தான். அதே 2010 முதல் 2014 வரையான காலத்தில் ஆண்டுதோறும் விற்பனையான ரோபோக்களின் எண்ணிக்கை 1.71 லட்சம். தொழில்துறையில் ரோபோக்களின் உபயோகம் 48 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதையே இது உணர்த்துகிறது.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சமீபகாலமாக ரோபோக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. 2014-ம் ஆண்டில் இங்கு 1.39 லட்சம் ரோபோக்கள் விற்பனையாகியுள்ளன. ஆட்டோமோடிவ் துறையில்தான் அதிக எண் ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படு கின்றன. இதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிகல், உலோகம், ரசாயனம், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில், உணவு பதப்படுத்தல்துறை உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

ஜப்பானில் ஒரு ஹோட்டலில் பணியாளர் களுக்குப் பதிலாக ரோபோக்கள் பயன்படுத் தப்படுகிறது. ரோபோக்களுக்கிடையிலான ஐஸ் ஹாக்கி போட்டி உள்ளிட்டவற்றை பார்த்து ரசிக்க பெரும் கூட்டமாய் மக்கள் திரண்டு செல்கின்றனர்.

எந்திரன் படத்தில் ரோபோக்களுக்கும் உணர்வு உண்டு என்பதாக கதை செல்லும். இது கதைக்காக ஜோடிக்கப்பட்டதல்ல. மனிதர்களைப் போல சிந்திக்கும் ஆற்றலை ரோபோக்களுக்கு அளிக்கும் ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. இதில் ஓரளவு முன்னேற்றமும் தென்படுகிறது. வீட்டிலேயே எந்த வேலையும் செய்யாமல் மனிதர்கள் முடங்கிப் போக, மனிதர்களின் தேவைகளை ரோபோக்கள் நிறைவேற்றுவதைப் போன்ற எதிர்காலம் உருவானால் எப்படியிருக்கும்!

மனித உயிர்களை பூண்டோடு அழிக்கும் அணு ஆயுதங்களுக்கு எதிராக உலகமே திரண்டு குரல்கொடுக்கும் காலம் இது. இனி வருங்காலத்தில் ரோபோக்களுக்கு எதிரான குரல் வலுக்கும்.

ramesh.m@thehindutamil.co.in

SCROLL FOR NEXT