ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்
karthi@gkmtax.com
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வங்கிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகள் வரப்போகிறது என்ற செய்தியைக் கேள்விப்பட்டாலே மக்கள் அலறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களில் வங்கிகள் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகள் வந்துள்ளன. பொதுத் துறை வங்கிகளை இணைப்பது, லாபம் தராத பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது போன்றவை அவற்றில் முக்கியமானவை. இந்த அறிவிப்புகள் வங்கிகள் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பானவை. மக்களுக்கான சேவை தொடர்பானவை அல்ல. இந்தச் சூழலில் தற்போது மக்களுக்கான சேவை தொடர்பாக வங்கி மற்றும் நிதி சார்ந்த பிற துறைகளின் விதிகளில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது ரிசர்வ் வங்கி. சில மாற்றங்கள் வரவேற்கத்தகுந்ததாகவும் சில மாற்றங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளன.
முதலில் வரவேற்கத்தகுந்த மாற்றத்தை பார்க்கலாம். ஆகஸ்ட் முதல் நாளிலிருந்து, நேஷனல் ஆட்டோமேட்டட் கிளியரிங் ஹவுஸ் (NACH) சேவைகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்க தொடங்கி உள்ளது. இந்த சேவையால், இனி சம்பளம், வட்டி, ஓய்வூதியம், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, குடிநீர் போன்ற கட்டணங்கள், கடன் தவணை, நிதி முதலீடுகள், காப்பீடு போன்றவற்றை செலுத்துவதற்கு வார நாட்களுக்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இனி இந்த சேவை சனி, ஞாயிறு உட்பட எல்லா நாட்களிலும் கிடைக்கும். விடுமுறை நாட்களிலும் சேவை கிடைக்கும் என்பதால், தாமதமில்லாமல் ஊழியர்களுக்கு சம்பளம் போய்விடும். அந்தவகையில் இந்த புதிய மாற்றம் பலருக்கும் மிக உபயோகமானதாக இருக்கும். ஆனால் இந்த அறிவிப்பின் மகிழ்ச்சியை நீர்க்கச் செய்துவிடுகிறது ரிசர்வ் வங்கியின் மற்ற சில அறிவிப்புகள்.
ஏடிஎம் சேவைக் கட்டணம் உயர்வு
ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் பணம் எடுப்பதற்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் தற்போது இந்தக் கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
ஒரு வங்கியின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி நாம் வேறு வங்கியின் ஏடிஎம்-ல்பணம் எடுக்கும்போது நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியானது நாம் பணம் எடுக்கும் வங்கிக்கு கட்டணம் செலுத்தும். இதை பரிமாற்றக் கட்டணம் (interchange fee) என்பார்கள். அது பணப்பரிவர்த்தனைக்கு ரூ.15ஆகவும், ‘பின் நம்பர்’ மாற்றுவது. மினி ஸ்டேட்மென்ட், இருப்புத் தொகையைத் தெரிந்துகொள்வது போன்ற பணப்பரிவர்த்தனை அல்லாத சேவைகளுக்கு ரூ.5 ஆகவும் இருந்தது. புதிய அறிவிப்பின்படி பரிமாற்றக் கட்டணம் பணப்பரிவர்த்தனைக்கு ரூ.17 ஆகவும், ஏனைய சேவைகளுக்கு ரூ.6 ஆகவும் உயர்த்துப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பரிமாற்றக் கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களில் மாதம் ஐந்து முறை பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். அதேசமயம் ஏனைய வங்கிகளின் ஏடிஎம்களில் - மெட்ரோ நகரங்கள் என்றால் மாதம் மூன்று முறையும் ஏனைய நகரங்களில் மாதம் நான்கு முறையும்- இலவசமாக பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். அந்த எண்ணிக்கை தாண்டிய ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் ரூ.21 வரை கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
பணமதிப்பிழப்பும் வங்கிப் பயன்பாடும்
கறுப்புப்பணம் ஒழிப்புநடவடிக்கையின் ஒருபகுதியாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசு, பணம் சேமிப்பது, முதலீடு செய்வது, செலவழிப்பது போன்றவற்றை மக்கள் வங்கி வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து மக்களின் பணப்பரிவர்த்தனை பெரும்பான்மையாக வங்கிக் கணக்கை மையப்படுத்தியதாக அமைந்தது.
வணிக நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களின் ஊதியம் போன்றவற்றை வங்கிகள் வாயிலாகவே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டன. இதனால், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள்கூட வங்கியில் கணக்கு தொடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதேபோல் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத்தொகை மக்களை நேரடியாக சென்றடைவதற்கு, வங்கிக் கணக்கு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. அதனால், அடித்தட்டு மக்கள்கூட வங்கியில் கணக்கு தொடங்கினார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பிறகு, பணமாக கையில் வைத்திருந்தால், அது செல்லாது என்று மீண்டும் அறிவித்துவிடுவார்களோ என்று மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தால் நமது பணம் வீட்டில் இருப்பதைவிட வங்கியி்ல் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்கள் நம்பினார்கள். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வங்கி கணக்கில் இருக்கும் தங்களது சம்பளப் பணத்தை தேவைக்குஏற்ப ஏடிஎம் -ல்எடுத்து செலவு செய்கின்றனர். தினமும் அல்லதுவாரம் ஒரு முறை, இருமுறை என்று ஏடிஎம் சென்று 100 ரூபாய், 500 ரூபாயாக அவ்வப்போது எடுத்து செலவு செய்பவர்களும் உண்டு. கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை வைத்து எண்ணி செலவு செய்தவர்களை, இப்படி ஏடிஎம் கார்டுகளுக்கு பழக்கப்படுத்திவிட்டு, இப்போது அதற்கு சேவைக்கட்டணத்தை உயர்த்தி அதிர்ச்சி தந்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. தினம் ஏடிஎம் போய் பழக்கப்பட்ட மக்களுக்கு இந்த சேவைக் கட்டண உயர்வு தகவல் போய் சேர்ந்ததா என்றே தெரியவில்லை.
இனி, நாம் எத்தனை முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்திருக்கிறோம் என்று நினைவில் வைக்காமல் போனால் வீணாக சேவைக்கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஏடிஎம் பயன்படுத்துவதில் சிரமங்களை ஏற்படுத்தும்.
இது இப்படி என்றால்,இந்திய தபால் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்’ (ஐபிபிபி) இனி தனது சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்று அறிவித்துள்ளது. ‘வீட்டு வாசல் வங்கி’ (Door step Bank) மற்றும் பிற சேவைகள் தொடர்பான கட்டணங்களை ஐபிபிபி புதுப்பித்துள்ளது. இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட டோர் ஸ்டெப் பேங்கிங்க் சேவை, ஆகஸ்ட் முதல்நாள் முதல் ஜிஎஸ்டியுடன் ரூ.20 கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைதொடங்கி, கிட்டதட்ட ஐந்து ஆண்டுகள் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் - சில்லரை வணிகத்தில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து - டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் தங்களை பழக்கப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசு டிஜிட்டலை நோக்கி மக்களை செலுத்தும் முயற்சிகளை பரவலாக்கி வருகிறது. 135 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், அதுவும், படிப்பறிவு, கணினி அறிவு அற்ற உழைக்கும் மக்கள் அதிகம் கொண்ட தேசத்தில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை சவாலான ஒன்றாகவே உள்ளது.இந்நிலையில் ஏடிஎம் சேவைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பது, ஏடிஎம் பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலைக்கு மக்களை இட்டுச் செல்லும். மாறாக, சாமானிய மக்கள் பணத்தை கையிருப்பாக வைக்கத் தொடங்குவார்கள்.
சிதையும் நோக்கம்
கறுப்பு பணம் ஒழிப்பு, வரி ஏய்ப்பு தவிர்ப்பு, டிஜிட்டல் பேமென்ட் என்று நாட்டு மக்களைமத்திய அரசு ஒருபுறம் புதிய டிஜிட்டல் யுகத்துக்குள் அழைத்துச் சென்றாலும்,அதன் நோக்கத்தை சிதைப்பதுபோல, ரிசர்வ் வங்கியின், சேவைக் கட்டண உயர்வு அறிவிப்புகள் அமைந்துள்ளன.
இது மக்களிடம் தவறானபுரிதலையும், கோபத்தையும் ஏற்படுத்தவதாக அமைந்துள்ளது. “நம்ம பணம். நம்ம பேங்க்ல கிடக்கு. ஏடிஎம் மிஷின்ல நம்ம பணத்தை எடுப்பதற்கு சேவைக் கட்டணம் தரணுமா. நல்ல கதையா இருக்கே” என்று அப்பாவி மக்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. ஏடிஎம் பரிவர்த்தனைகளில், குறிப்பிட்ட எண்ணிக்கைக்குப் பிறகுசேவைக் கட்டணம் விதிக்கப்படும் என்பதற்குப் பதிலாக, ஒரு மாதத்திற்கு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுக்கப்பட்டால், அதற்கு சேவைக் கட்டணம் விதிக்கப்படும்என்று இருந்தால்நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
கிராமப்புற மக்களில் மட்டுமல்ல நகர்ப்புற மக்களில், நடுத்தர வயது கடந்த பல்வேறு தரப்பினர் இன்னமும், டிஜிட்டல் பணவர்த்தனைகளுக்கு பழகவில்லை. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் இன்னும் ஏடிஎம் மையம் சென்று ஏடிஎம் அட்டையை செலுத்தி பணம் எடுத்துக்கொண்டு பத்திரமாக அட்டையை எடுத்து வருவதற்கே அச்சப்படுகிறார்கள். அருகில் நிற்கும் அந்நியர்களிடம் ஏடிஎம் அட்டையைக் கொடுத்து அவர்களிடமே, ‘பின் நம்பர்’ சொல்லி பணத்தைத் எடுத்து தாருங்கள் என்று உதவி கேட்கும் நிலையில்தான் பலர் இருக்கி்ன்றனர்.இந்த சூழ்நிலையில், ஏடிஎம் சேவைக் கட்டண உயர்வு அப்பாவி மக்களை ஏடிஎம் பக்கம் போவதை தடுத்துவிடும் என்பதை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உணர வேண்டும்!