வணிக வீதி

விண்ணும் வசப்படும்...

செய்திப்பிரிவு

“வானம் வசப்படும்”, “வானம் தொட்டு விடும் தூரம்தான்” - இவ்விரண்டு தலைப்புகளில் தமிழில் கதை, கவிதைகள் பல வந்துள்ளன. நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளாக இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வானம் வசப்பட்டு பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. “விண்ணும் வசப்படும்” என்று சொல்லும் காலகட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.

ஜூலை 11-ம் தேதி லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ரிச்சர்ட்பிரான்சனும் ஜூலை 20-ம் தேதி அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பிஸோஸும் விண்வெளிக்குப் பயணித்து திரும்பியுள்ளனர். வரும் செப்டம்பரில் விண்வெளி பயணத்துக்குத் திட்டமிட்டு வருகிறார் எலான் மஸ்க். இதுவரையில் விண்வெளிப் பயணம் என்பது அத்துறை விஞ்ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. ஆனால், தற்போது யார் வேண்டுமானாலும் விண்வெளிக்குச் செல்லலாம் என்ற சூழல் உருவாகியிருக்கிறது.

இதற்கு முன்பு2007-ம் ஆண்டு சார்லஸ் சிமோனியி என்ற கோடீஸ்வரரும் 2008-ல் ரிச்சர்ட் காரியோட் என்ற கோடீஸ்வரரும் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.அவர்கள் தங்களது ஆசையை பூர்த்தி செய்து கொள்வதற்காக அந்தப் பயணத்தை மேற்கொண்டனர். ஆனால், ரிச்சர்ட் பிரான்சனும் ஜெஃப் பிஸோஸும் ஆசைக்காக மட்டும் விண்வெளிக்குச் செல்லவில்லை.

விண்வெளிப் பயணத்தை சுற்றுலாவாக மாற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளிக்குச் சென்றுவர விரும்பும் வசதி படைத்தவர்களை அழைத்துச் செல்ல முடிவு அவர்கள் செய்துள்ளனர். விண்வெளி சுற்றுலாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனமும் இணைய உள்ளது. புவியிலிருந்து 80 கி.மீ முதல் 100 கி.மீ. தூரம் வரையிலான விண்வெளிப் பகுதிக்கு பயணிகளை அழைத்துச் சென்று புவியீர்ப்பு விசை இல்லாத நிலையை உணர வைத்து அவர்களை திரும்ப அழைத்து வருவதே திட்டமாகும்.

70 வயதாகும் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் 57 வயதாகும் ஜெஃப் பிஸோஸ் இருவருமே முதல் தலைமுறை கோடீஸ்வரர்கள். இவர்கள் தாங்களாகவே தொழில் தொடங்கி அதில் உச்சம் தொட்டவர்கள். 1960-ம் ஆண்டில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர் ரிச்சர்ட் பிரான்சன். தற்போது அவரது வர்ஜின் குழும நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 2,200 கோடி டாலராகும். ஆன்லைன் புத்தக நிலையத்தை சியாட்டில் புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் கார் கேரேஜில் தொடங்கிய ஜெஃப் பிஸோஸ், இன்று உலகின் கோடிஸ்வரர்களில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.தான் தொடங்கிய ‘அமேசான்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகி, தனது அடுத்த இலக்கான விண்வெளி பயண திட்டத்தில் அவர் களமிறங்கியுள்ளார்.

‘வர்ஜின் கேலக்டிக்’ நிறுவனம் மூலம் ரிச்சர்ட் பிரான்சனும், ‘புளூ ஆரிஜின்’ மூலம் ஜெஃப் பிஸோஸும் விண்வெளி பயணத்துக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளனர். ரிச்சர்ட் பிரான்சனின் ‘வர்ஜின் கேலக்டிக்’ ராக்கெட்டில் 6 பேர் பயணிக்க முடியும். இதில் 2 பேர் ராக்கெட் செலுத்தும் பைலட். நான்கு பேர் பயணிகள். தரையிலிருந்து புறப்பட்டு 90 நிமிடத்தில் விண்வெளி பகுதியைத் தொட்டுவிட்டு அங்கு பயணிகளுக்கு எடையற்றநிலையை உணர வைத்தபின் தரைக்குத் திரும்பும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

‘வர்ஜின் கேலக்’டிக்கில் பயணம் செய்ய இதுவரையில் 600 பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஒரு டிக்கெட் விலை ரூ.1.8 கோடி. ஜெஃப் பிஸோஸின் ‘புளூ ஆரிஜின்’ ராக்கெட்டிலும் 6 பேர் பயணிக்க முடியும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1.4 கோடி. எலான் மஸ்க் நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ ராக்கெட்டில்7 பேர் பயணிக்க முடியும். மூன்று முதல் நான்கு நாட்கள் விண்வெளியில் தங்கி பிறகு தரைக்குத் திரும்பும் வகையில் இவரது நிறுவனம் பயண திட்டத்தை வகுத்துள்ளது.

ஒரு காலத்தில் விமான பயணம் என்பது வசதி படைத்தவர்களுக்கு என்றிருந்தது. கால சுழற்சியில் ஒரு ரூபாய் கட்டணத்துக்குகூட விமான பயணம் சாத்தியம் என்பதை ‘டெக்கான் ஏவியேஷன்’ இந்தியாவில் நிரூபித்தது. இப்போது விண்வெளி பயண கட்டணம் கோடியில் இருந்தாலும் அடுத்து லட்சமாகக் குறைய வாய்ப்புள்ளது. வரும் காலங்களில் அதிக நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவுக்கு ராக்கெட் விடும்போது இது மேலும் குறையும். அப்போது, செல்வந்தர்களுக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் விண்வெளி வசப்படும்.!

SCROLL FOR NEXT