பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி நாடே கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், பெட்ரோல், டீசல் மட்டும்தான் விலை உயர்ந்திருக் கிறது என்பதுபோலத்தான் பெரும்பாலானோர் அறியாமையில் இருக்கிறோம். கரோனாவுக்கு முந்தைய காலத்தை விடவும், கரோனாவுக்குப் பின் அதாவது கடந்த ஓராண்டு காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து விதமான பொருட்கள், சேவைகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இந்த விலை உயர்வுதான் பணவீக்கம். பணவீக்கத்தைத் தவிர்த்துவிட்டு நாம் நமது அன்றாட வாழ்க்கையைக் கடக்க முடியாது என்பது 99 சதவீத மக்களுக்குத் தெரியாது.
தனிப்பட்ட ஒருவரின் பொருளாதாரத்திலும் சரி, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திலும் சரி முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவது இந்தப் பணவீக்கம். ஒரு நாளைக்கு நாம் என்ன என்ன பொருட்கள் வாங்குகிறோம், என்னென்ன சேவைகளைப் பயன்படுத்துகிறோம் என்று கணக்குப் போட்டு செலவு செய்பவர்கள் மட்டுமே உணரக்கூடிய ஒரு விஷயம்தான் பணவீக்கம். மற்றவர்களுக்கு பணவீக்கத்தின் பாதிப்புக்கு தாம் ஆளாவது கூட தெரியாது.
பணவீக்கம் உயரும்போது அரசும் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டிவரும். இந்தியாவில் கரோனாவுக்கு முன்பு கட்டுக்குள் இருந்துவந்த பணவீக்கம் கரோனாவுக்குப் பிறகு தொடர்ந்து உயர்ந்துவரும் அபாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது. முந்தைய காலங்களிலும் பணவீக்க உயர்வு இருந்திருக்கிறது என்றாலும், கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் பணவீக்க உயர்வின் வேகம் அதிகமாக இருக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்சினை.
பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு
பணவீக்கம் என்பது நாணயத்தின் மதிப்புக்கும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பணவீக்கத்தின் குறியீடுகள் பொருட்கள் வாரியாகவும் துறை வாரியாகவும் தனித்தனியாகப் பிரித்து கணக்கிடப்படுகின்றன. மொத்தவிலை பணவீக்க குறியீடானது முக்கியமான பொருட்கள், எரிபொருள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் விலைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். உணவுப் பொருட்கள், குளிர்பானம், ஆடைகள் மற்றும் புகையிலை ஆகியவற்றின் விலைகளைக் கொண்டு சில்லரை பணவீக்கம் கணக்கிடப்படும். தற்போது இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு பணவீக்கம் மே 2021ல் 12.94 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஏப்ரல் மாதத்தில் 10.49 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில் 7.89 சதவீதமாகவும் இருந்தது. மூன்று மாதங்களில் 5 சதவீத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகவும் இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.
நுகர்வோர் பணவீக்கம் அதாவது சில்லரை பணவீக்கம் மே மாதத்தில் 6.3 சதவீதமாக உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 4.23 சதவீதமாக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் மே மாதத்தில் 37.61 சதவீதமாக உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 20.94 சதவீதமாக இருந்தது. உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் மே மாதத்தில் 10.83 சதவீதமாக உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 9.01 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் 8.11 சதவீதமாக உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 7.58 சதவீதமாக இருந்தது. பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களின் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சி சார்ந்த குறியீடுகள் குறைவாகவே இருக்கும் என கணித்துள்ளன. இந்நிலையில் அதிகரித்துவரும் பணவீக்கம் சரிவிலிருந்து மீண்டுவரும் பொருளாதாரத்துக்குச் சவாலாக மாறும் எனத் தெரிகிறது. தற்போது பணவீக்கம் தொடர்ந்து உயர என்ன காரணம்?
இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம்
கரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நிதி ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்துள்ளன. மேலும், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. பல நாடுகளில் வட்டி விகிதம் பூஜ்யத்துக்கும் குறைவாக உள்ளது. இந்தியாவிலும், ரிசர்வ் வங்கி பல முறை வட்டி விகிதத்தைக் குறைத்துவந்தது. முதலீடுகளை அதிகரிக்கவும், கடன் சந்தையை ஊக்குவிக்கவும் வட்டி விகிதக் குறைப்பு அவசியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. அதுபோலவே முதலீடுகள் இந்தியாவில் குவிந்துள்ளன. பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. ஆனால், பணப்புழக்கம் அதிகரித்த அளவுக்கு அதற்கு இணையான நுகர்வும் டிமாண்டும் அதிகரிக்கவில்லை.
அதேசமயம் சர்வதேச சந்தையில் பல கமாடிட்டிகளின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் அது பரவலாக அனைத்து மூலப் பொருட்களின் விலை உயர்விலும் எதிரொலித்துள்ளது. சர்வதேச கமாடிட்டிகளின் விலை உயர்வதால் நாட்டின் இறக்குமதி செலவு தொடர்ந்து அதிகரிக்கும். முக்கியப் பொருட்களின் இறக்குமதி தவிர்க்க முடியாதபட்சத்தில் பணவீக்கம் தொடர்ந்து உயரும் நிலை உண்டாகியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் சரக்குப் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. 2020 மே மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 30 டாலர் அளவில் இருந்தது தற்போது மே 2021ல் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்து 65 டாலராக உயர்ந்தது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருட்கள், சேவைகளின் விலையை உயர்த்தியிருக்கின்றன. இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெய் 57 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
விலைவாசி கடுமையாக உயர வாய்ப்பு
உலோகங்களின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கெமிக்கல், பேப்பர், டெக்ஸ்டைல் என எல்லாவற்றிலும் விலை உயர்வு காணப்படுகிறது. சில பொருட்களில் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசும் அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுவும் தற்காலிகமானதாகவே உள்ளது. முக்கிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பதனால் நுகர்வோர்களுக்கு முன் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது நுகர்வு குறைவாக இருப்பதால் இந்த விலை உயர்வை உற்பத்தியாளர்கள் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நிலைமை சரியாகி டிமாண்ட் அதிகரிக்கும் போது நஷ்டத்தை சரி செய்ய விலை உயர்வை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உணவு பொருட்களின் பணவீக்கத்தைப் பொறுத்தவரை அவ்வப்போது காய்கறிகளின் விலை குறைந்துவருவது மட்டும்தான் ஆறுதல் மற்றபடி பிற உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவருகிறது. ஊரடங்கினால் உணவுப் பொருட்கள் மண்டிகளை வந்தடைவது பாதிக்கப்பட்டது. மொத்த சந்தைகள் மூடப்பட்டன. இதனால் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. முட்டை, இறைச்சி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
உலோகங்களின் விலை உயர்ந்ததால் கன்ஸ்யூமர் ட்யூரபிள் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. எஃப்எம்சிஜி எனப்படும் அதிகம் நுகரப்படும் பொருட்கள் நுகர்வோர் பணவீக்க விகிதத்தில் 9 சதவீதம் பங்கு வகிக்கிறது. இது 2021ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து குறைவாக இருக்கிறது. கிரிசில் இந்த நிதி ஆண்டுக்கான நுகர்வோர் பணவீக்கம் (5%) முந்தைய ஆண்டைக் காட்டிலும் (6.2%) குறைவாகவே இருக்கும் என கணித்துள்ளது. இது உணவுப் பொருட்களின் பணவீக்கம் குறைவாக இருப்பதனால் சாத்தியமாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால் நிதிசார் ஆய்வு நிறுவனங்களின் கணிப்புப்படி பிற பொருட்கள், சேவைகளின் பணவீக்கம் உயர்வதற்கான சூழல் அதிகமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
அரசின் கடன் மேலும் அதிகரிக்கும்
பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கியினுடையது. பணவீக்கத்தின் அடிப்
படையில்தான் நிதிக் கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். பணவீக்கம் உயர்வு தொடர்ந்தால் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ரிசர்வ் வங்கி உள்ளாகும். தற்போது மிகக் குறைவான அளவில் வட்டி விகிதங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கவும், கடன் சந்தையை ஊக்குவிக்கவும் இந்த குறைவான வட்டி விகிதம் உதவியாக இருந்துவருகிறது. பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்படுமெனில் இதன் காரணமாக இந்திய நிதிச் சந்தையில் பெரும் நிதி நெருக்கடி உண்டாகும். முதலீடுகளும் பணப்புழக்கமும் குறையும்.
அதேசமயம் பணவீக்கம் உயர்ந்தால் கடன் பத்திரங்களின் மதிப்பு உயர ஆரம்பிக்கும். இதனால் அரசின் கடன் மேலும் அதிகமாகும். நடப்பாண்டில் மத்திய அரசு சுமார் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட உள்ளதாகக் கூறியுள்ளது. எனவே வட்டி விகிதங்கள் உயராமல் பார்த்துக்கொள்ளும் பெரும் சவால் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. முந்தைய நிதி ஆண்டில் பல முறை பணவீக்கம் அதிகரித்த போதும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.
பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக குறைவான வட்டி விகிதப் போக்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனால், பணவீக்கம் அதிகமாகும் சூழலிலும் குறைவான வட்டி விகிதங்களையே நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ரிசர்வ் வங்கி ஆளானால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் நிலையும் உண்டாகும். கடந்த ஓராண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 3 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கிறது. இந்தியா இறக்குமதி நாடு என்பதால் அந்நிய செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் பல அபாயங்களுக்கு வழிவகுக்கலாம். இத்தனை சவால்களையும் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை முடிவுகளைக் கையாள வேண்டியிருக்கிறது.
வருமானம் பெரிதும் குறைந்துள்ளது
தற்போதைய பணவீக்கம் அதாவது விலைவாசி உயர்வு மக்களிடையே பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கிவருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வும் சமையல் எரிவாயு விலை உயர்வும் மட்டுமே ஒருவருடைய மாதாந்திர செலவை கரோனாவுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் 20 முதல் 30 சதவீதம் உயர்த்தியிருக்கிறது. பிற பொருட்கள், சேவைகளின் விலை உயர்வு காரணமாக செலவு அதிகரித்ததாலும், வருமானம் குறைந்துள்ளதாலும் பலர் நுகர்வை வெகுவாகக் குறைத்துள்ளார்கள். செலவுகள் அதிகரித்ததால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் பலர் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவருகிறார்கள். நாட்டின் பணவீக்கம் உயர்வதற்கு ஏற்ப மக்களின் வருமானம் உயர்ந்தால் பிரச்சினை இல்லை.
அப்படி வருமானம் உயராத பட்சத்தில் மக்கள் பணவீக்க உயர்வினால் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு மேலும் விலைவாசி உயர்ந்துகொண்டே போனால் நாட்டில் பல குடும்பங்களின் பொருளாதாரம் மிகப் பரிதாபமான நிலைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
கரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.
இன்னும் எத்தனை அலை உள்ளது, மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடவேண்டிய கட்டாயம் ஏற்படுமா என்பதையெல்லாம் பொறுத்தே பணவீக்கம் குறித்த கணிப்புகள் மாறுமா இல்லையா என்பது தெரியும். மீண்டும் மீண்டும் கரோனாவின் பாதிப்புகளைப் பற்றியே பேசுவது ஒருவித அயர்ச்சியைத்தான் ஏற்படுத்துகிறது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த வார்த்தையை உச்சரிக்காமல் நம்மால் பொருளாதாரம், வளர்ச்சி பற்றி பேச முடியாது என்பதுதான் நிதர்சனம்.
saravanan.j@hindutamil.co.i