பங்குச் சந்தைகள் அதன் இயல்பிலேயே பன்முகத்தன்மை கொண்டவை. பங்குகளும் சந்தையின் போக்கும் எல்லா நேரமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. பெரு முதலீட்டு பங்குகள் ஏறுமுகத்தில் இருக்கும்போது நடுத்தர மற்றும் சிறு முதலீட்டுப் பங்குகள் சரிவில் இருக்கலாம். புளூ சிப் பங்குகள் பாதுகாப்பான ஒன்றாக பார்க்கப்படுபவை. ஆனால், அவையும்கூட அனைத்து சமயங்களிலும் நல்ல வருவாயை ஈட்டித்தருவதாக இருப்பதில்லை. பங்குச் சந்தையின் மூலமான வருவாயை அதிகரிக்க வேண்டுமெனில் முதலீட்டில் ஒரு நெகிழ்வுத் தன்மை வேண்டும்.
அதாவது, ஒரு நிறுவனத்தில் அதன் சிறு, நடுத்த மற்றும் பெரு முதலீட்டு திட்டங்களில் சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்வதற்கான நெகிழ்வுத்தன்மை அவசியம். இதை பிளெக்சிகேப் ஃபண்ட்ஸ் (Flexicap Funds) சாத்தியப்படுத்துகிறது. பிளெக்சிகேப் ஃபண்ட்ஸானது சந்தையின் போக்குக்கு ஏற்ப பலதரப்பட்ட முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைத் தருகிறது. விளைவாக, முதலீட்டில் இழப்பு ஏற்படுவதை அது குறைக்கிறது. பரஸ்பர நிதித் திட்டங்களில் பிளெக்சிகேப் ஃபண்ட்ஸ் மட்டும்தான் பெரு, நடுத்தர மற்றும் சிறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு தொடர்பாக எந்தக் கட்டுப்பாடுகளையும் கொண்டிருப்பதில்லை.
சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப வெவ்வேறு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். அதன் காரணமாகவே பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமான முதலீட்டுத் திட்டமாக பிளெக்ஸிகேப் ஃபண்ட்ஸ் மாறியிருக்கிறது. அந்தவகையில், பங்கு முதலீட்டுத் திட்டங்களில் பெரு முதலீட்டு திட்டத்துக்கு அடுத்த நிலையில் பிளெக்சிகேப் ஃபண்ட்ஸ் இருக்கிறது. கரோனா காலகட்டம், தடுப்பூசி, வட்டி விகிதம் உயர்வு, பொருளாதார வளர்ச்சி நிலை, ஊரடங்குத் தளர்வு ஆகியவை வெவ்வேறு துறைகளில், பங்குகளில் வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது.
இந்தச் சூழலில் எது நல்ல முதலீடு, எது சிறந்த முதலீடு என்பதை பாகுபடுத்தி அதற்கேற்ற வகையில் முதலீடு மேற்கொள்ள பிளெக்சிகேப் ஃப்ண்ட்ஸ் முதலீடு வழிவகை செய்கிறது. அதன் காரணமாக, தற்போது அந்த முதலீட்டுத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. பென்ச்மார்க் குறியீடுகள், பெரு முதலீட்டு நிதிகள் அவற்றின் உச்சத்தைத் தொட்ட பிறகு, சற்று சரிவில் பயணிக்கக்கூடும். அந்த சமயத்தில் நடுத்தர மற்றும் சிறு முதலீட்டுநிதிகள் ஏற்றத்தில் இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் பிளெக்சிகேப் ஃப்ண்ட்ஸ் திட்டமானது சூழலுக்கு ஏற்றபடி முதலீட்டை மாற்றி அமைத்து வருவாயை அதிகரிக்கச் செய்யும். பிற முதலீட்டுத் திட்டங்களில் இது சாத்தியம் இல்லை. அந்த வகையில் பிளெக்சிகேப் ஃபண்ட்ஸ் தனித்துவம் கொள்கிறது.
அருண்குமார் சேரம்கலாம்
நிர்வாக பங்குதாரர், விஸ்மயம் கேபிடல் சர்வீசஸ் எல்.எல்.பி.