ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘தி மேன் வித் தி கோல்டன் கன்’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் ஒரு காட்சி. ஜேம்ஸ் பாண்ட் வில்லனை துரத்திச் செல்வார். வில்லன் ஒரு கட்டடத்துக்குள் நுழைந்துகொள்வார். ஜேம்ஸ் பாண்ட் அந்தக் கட்டடத்தை நெருங்கி, வில்லன் வெளியே வருவதற்காக அதன் நுழைவாயிலில் துப்பாக்கியுடன் காத்திருப்பார். யாரும் எதிர்பார்த்திராத விதமாக, வில்லனின் கார் அந்தக் கட்டடத்தின் பின்புறம் வழியாக வெளியே வரும். அந்தக் காரின் மேல் பகுதியில் விமான இறக்கைகள் பொருத்தப்பட்டிருக்கும். கட்டடத்திலிருந்து வெளியேறி தரையில் வேகமாக செல்லத் தொடங்கும் அந்தக் கார், அப்படியே தரையிலிருந்து மேல் எழும்பி வானில் பறக்கத் தொடங்கும்.
இப்படி கார் ஒன்று வானில் பறக்கும் காட்சி கடந்த வாரம் நிஜமாக நடந்தது. ஸ்லோவேக்கிய நாட்டைச் சேர்ந்த க்ளைன் விசன் என்ற நிறுவனம், அது உருவாக்கிய பறக்கும் காரை கடந்த வாரம் இரு நகரங்களுக்கிடையே பறக்கச் செய்து சாதனை படைத்திருக்கிறது. 1940 முதலே பறக்கும் கார்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. பரிசோதனை மாதிரியாக சில கார்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை பொதுப் பயன்பாட்டுக்கு ஏற்றத் தன்மையை கொண்டிருக்கவில்லை. இந்தச் சூழலில் சமீப ஆண்டுகளில் சில நிறுவனங்கள் பறக்கும் கார் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி அடைந்து வருகின்றன. அந்தவகையில் சென்ற வாரம் நடந்த நிகழ்வு பறக்கும் கார் உருவாக்கத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
ஜூன் மாதம் 28-ம் தேதி ஸ்லோவேக்கியா நாட்டில் நித்ரா விமான நிலையத்திலிருந்து தலைநகர் பிராட்டிஸ்லாவா சர்வதேச விமான நிலையம் வரையில் க்ளைன் விசன் நிறுவனம் உருவாக்கிய ஏர்கார் வானில் பறந்து சென்றது. 93 கிலோ மீட்டர் தூரத்தை அந்த ஏர்கார் 35 நிமிடங்களில் கடந்தது.க்ளைன் விசன் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீபன் க்ளைன்தான் அந்த ஏர்காரை ஓட்டிப் பறந்தார். 160ஹெச்பி திறன் கொண்ட பிஎம்டபிள்யூ இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஏர்கார், மணிக்கு 190 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியது. 8,200 அடி உயரம் வரையில் இந்தக் கார் பறக்கும்; 1000 கிமீ தூரம் வரையில் பறந்து பயணம் செய்ய முடியும். பெட்ரோலில் இயங்கக் கூடிய இந்த ஏர்கார், பறப்பதற்குத் ஏற்ற நிலைக்கு மாற 2 நிமிடங்களும் 15 வினாடிகளும், பறக்கும் நிலையிலிருந்து தரையில் இயங்கக்கூடியதாக மாற 3 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளும்.
முந்தைய பறக்கும் கார்கள் சற்று ஹெலிக்காப்டர் தோற்றத்தை ஒத்திருந்தன. ஆனால், க்ளைன் விசன் நிறுவனத்தின் ஏர்காரானது வழக்கமான கார்களைப் போலான தோற்றத்திலே இருக்கிறது. பறக்கும்போது மட்டுமே அதன் இறக்கைகள் விரிந்துகொள்கின்றன. தரையிறங்கியதும் அதன் இறக்கைகள் உள்ளொடுங்கிவிடுகின்றன. ஃபோக்ஸ்வேகன், டொயோட்டா போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் பறக்கும் கார்களை உருவாக்க அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. 2030-க்குள் பறக்கும் கார்கள் பரவலான புழக்கத்துக்கு வந்துவிடும் என்று உறுதியாக கூறப்படுகிறது.
இந்தத் தருணத்தில், ஹென்றி ஃபோர்டு கூறிய வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1940-ம் ஆண்டு அவர் கூறிய கூற்று இது,’ என்னுடைய வார்த்தைகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். விமானமும் காரும் இணைந்த ஒரு வாகனம் வரும். நீங்கள் இப்போது என்னைப் பார்த்துச் சிரிக்கலாம். ஆனால் நான் சொல்வது நடக்கும்.’ ஆமாம், நடந்துவிட்டது ஹென்றி ஃபோர்டு.
riyas.ma@hindutamil.co.in