‘எப்போது கரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும், எப்போது நமது இயல்பு வாழ்க்கை திரும்பும்’ என்பதுதான் தற்போது நம் முன் இருக்கும் கேள்வி. இதற்கான பதில் VUCA. நிலையற்றது (Volatility), நிச்சயமற்றது (Uncertainty), சிக்கலானது (Complexity), தெளிவற்றது (Ambiguity) என்பதைக் குறிக்கிறது.
1980களில் வாரன் பென்னிஸ், பர்ட் நானஸின் தலைமைத்துவக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுதான் VUCA. மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பங்கள், நிறுவனங்கள் கையாளும் உத்திகள், சந்தையில் நிலவும் போட்டித்தன்மை, எது எப்போது எப்படி நடக்கும் எனத் தெரியாத சூழ்நிலையை சுருக்கமாக VUCA என்று அழைக்கிறார்கள். இது நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு மட்டுமல்ல நமது வாழ்க்கையை நிர்வகிப்பதற்கும் அவசியமான ஒன்று.
இந்த உலகம் நிலையற்றது
கரோனா பரவல் ஆரம்பித்த பிறகு உலகின் யதார்த்தமே மாறிவிட்டது. தற்போது பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள். சிலருக்கு வேலையே இல்லை; சிலருக்கு தொழிலை நடத்த முடியவில்லை. குழந்தைகளுக்கு வீடே பள்ளியாக மாறியிருக்கிறது. நமது பழைய கொண்டாட்டம், கேளிக்கை, குடும்பத்தோடு ஓட்டலுக்கு சென்று நிம்மதியாக ஒரு டின்னர், பிக்னிக், போன்றவையெல்லாம் கடந்த கால நிகழ்வாக மாறிவிட்டது. இந்தச் சூழல் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரும், பழைய இயல்பு வாழ்க்கை இன்னும் கொஞ்சம் காலத்துக்குச் சாத்தியமில்லையா என்கிற நிலையற்ற தன்மையில்தான் உலகம் உள்ளது.
இந்த உலகம் நிச்சயமற்றது
கரோனா இரண்டாம் அலை இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாம் நினைத்துதான் பாத்திருப்போமா? முதல் அலை தீவிரம் குறைந்ததும், கரோனாவிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், நினைத்துப் பாத்திராதபடி இரண்டாம் அலை விஸ்பரூபம் எடுத்தது. நம்முடைய திட்டங்கள் அனைத்தையும் புரட்டிப்போட்டது. பெரிய தொழில் நிறுவனம் முதல் சிறிய ஸ்டார்ட் அப் வரையில் இந்த நிச்சயமறத்தன்மை எப்போதும் இருக்கும்.
இந்த உலகம் சிக்கலானது
அரசு மேற்கொள்ளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்குப் போதுமானதுதானா, வைரஸ் பரவல், ஊரடங்கு, பொருளாதார விளைவுகள், சமூகப் பிரச்சினைகள், அரசியல் விளைவுகள் எப்படி இருக்கும், நாம் சரியான பாதையில்தான் செல்கிறோமா என்பது பற்றியெல்லாம் தெளிவான அறிக்கையை வெளியிடுவது சாத்தியமில்லை. சிலந்தி வலைப்பின்னல் போல உலகில் உள்ள ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தும், பிணைந்தும் இருக்கிறது. கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்கும்போது அது காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாட்டில் வேலையின்மை அதிகரிக்கும்போது ஏழ்மையும், வன்முறையும் அதிகரிக்கிறது. நிறுவனத்திலும் இதுதான் நிலைமை.
இந்த உலகம் தெளிவற்றது
பல்வேறுவிதமான கணிப்புகள் இருந்தாலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என யாராலும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. ஒருசில அறிகுறிகளை வைத்து சிலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் துல்லியமான கணிப்பு சாத்தியமற்றது. இதை தான் தெளிவற்றத் தன்மை என்கிறோம். ஒருவகையில் தெளிவற்றத் தன்மையே எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு நம்மை தயார்படுத்துகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளச் செய்கிறது. இவ்வுலகம் நிலையற்றதாக, நிச்சயமற்றதாக, சிக்கலானதாக, தெளிவற்றதாக இருக்கிறது என்பது குறைபட்டுக்கொள்ள வேண்டிய விசயம் அல்ல. சொல்லப்போனால், இந்தத் தன்மைகள்தான் உலகத்தை இயக்குகின்றன. இந்தத் தன்மைகள் இல்லாவிட்டால் உலகம் முடங்கிவிடும். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அப்படித்தானே?
somasmen@gmail.com