ஊழல் கறைபடிந்த இந்தியாவை மாற்றுவோம் என்ற பிரசாரத்தை முன்வைத்து நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. அதற்கு பிறகு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் முன்னேற்றம், நகர வளர்ச்சி, கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், உற்பத்தி துறை வளர்ச்சி என துறை வாரியாக பல `கவர்ச்சி’ திட்டங்களை கொண்டு வந்துள்ளார் மோடி.
இந்தியாவில் தயாரியுங்கள் என்று முழங்குவது, தூய்மை இந்தியாவை உருவாக்க மோடியே களத்தில் குதித்தது, டிஜிட்டல் இந்தியா வாரம் கொண்டாடுவது என திட்டங்களை பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார் மோடி. அவர் அறிமுகப்படுத்தியவற்றில் சில திட்டங்களின் தொகுப்பு இது.
ஜன் தன் யோஜனா
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்தி தரும் திட்டமாகும். 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த வங்கி கணக்கு மூலம் ரூபே டெபிட் கார்ட் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள சிறப்பு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. 30,000 ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.
இதுவரை தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் 11.89 கோடி.
இதில் கிராமப் புறங்களில் தொடங்கப்பட்ட கணக்குகள் 60.9%
மேக் இன் இந்தியா
இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற தொடங்கப்பட்ட திட்டம்.
மத்திய அரசின் தகவல் படி இத்திட்டத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு 48%.
25 துறைகளை பட்டியலிட்டு இந்தியாவில் தயாரிக்க வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
திறன் மிகு இந்தியா
2022-ஆம் ஆண்டிற்குள் 40 கோடி இந்தியர்களை பல்வேறு துறைகளில் திறமை மிக்கவர்களாக மாற்றுவோம் என்று இலக்கோடு தொடங்கப்பட்ட திட்டம்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை பயிற்சி பெற்ற இளைஞர்கள் 55,00,000
தூய்மை இந்தியா
2019-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு. 2019-ம் ஆண்டிற்குள் 1 கோடி கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்கிற இலக்கும் இந்த திட்டத்தில் உள்ளது.
இதுவரை வீடுகளுக்கு கட்டித்தந்த கழிப்பறை 30,00,000.
இந்திர தனுஷ்
மஞ்சள் காமாலை, காச நோய், போலியோ போன்ற நோய்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசி போடுவதற்காக தொடங்கப்பட்ட திட்டம். முதல்கட்டமாக நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட மாவட்டங்கள் 201
ஸ்மார்ட் சிட்டி
நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதே ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம்.
பொருளாதார வளர்ச்சி, சுத்தமான காற்று, போக்குவரத்து வசதிகளும் இதில் அடங்கும். 2015-16 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.48,000 கோடி.
தமிழகத்தில் 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முத்ரா திட்டம்
சிறுகுறு தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்கவும், மேம்படுத்தவும் வங்கி கடன் வழங்குவதற்காக 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
சிசு, கிஷார், தருண் ஆகிய மூன்று பிரிவுகளில் சிறு முதலீட்டாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
ஆரம்ப கடன் தொகை ரூ.50,000 அதிகபட்ச கடன் தொகை ரூ.10,00,000
இதுவரை பயனடைந்துள்ளவர்கள் 66,00,000 பேர்.
கடனாக வழங்கப்பட்ட தொகை. ரூ.42,000 கோடி
டிஜிட்டல் இந்தியா
பொருளாதார அறிவை வளர்க்கவும் இந்திய சமூகத்துக்கு டிஜிட்டல் சேவையை அளிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது. 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக அறிவித்தார்.
திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தனது புரொபைல் படத்தை இந்தியாவின் மூவர்ண கொடியோடு சேர்த்து இருந்த படமாக மாற்றிக் கொண்டார்.
கவர்ச்சி திட்டங்களா?
மோடி தொடங்கியுள்ள இத்தனை திட்டங்களும் எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்பது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. இதன் காரணமாக `கவர்ச்சி’ திட்டங்களின் நாயகன் என்கிற பெயரையும் மோடி சமீப காலத்தில் பெற்றுள்ளார்.
பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவில் தயாரிக்க வாருங்கள் என்று முதலீட்டாளர்களிடம் கேட்டுக் கொண்டே வருகிறார். ஆனால் பெரிய முதலீடுகள் இதுவரை வரவில்லை. ஜன் தன் யோஜனா திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு 5,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்களின் வங்கி கணக்குகளில் இந்த பணம் இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை. நமாமி கங்கா திட்டத்தில் இன்னும் முதல் கட்ட பணிகளே தொடங்கவில்லை.
மேக் இன் இந்தியா திட்டத்தை பொறுத்தவரை தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி போன்றவை கிடைக்க தாமதமாவதால் பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க தயங்குகின்றன. தூய்மை இந்தியா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் இன்றளவில் அந்த திட்டத்தின் நோக்கம் பெரிய அளவில் நிறைவேறவில்லை.
பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன ஆனால் இந்தத் திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பும் மக்களும் பயனடைந்தார்களா? எல்லா திட்டமும் மக்களுக்கான திட்டமா? என்பதில் கேள்விக்குறியே மிஞ்சுகிறது.