தனிநபர்களாக தொழிலில் சாதித்த தொழில்முனைவோர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது குடும்பத்தினரின் ஆரம்ப கால தயக்கத்தையும் குறிப்பிடுவார்கள். குடும் பத்தினரின் முழு ஆதரவும், பக்கபலமும் கிடைத்த தொழில்முனைவோர்கள் வெகு சிலரே.
அப்படியாக குடும்ப ஆதரவு கிடைத்த தொழில் முனைவோர்தான் திருமூர்த்தி. அதுமட்டுமல்ல அவரது குடும்பத்தினரே இப் போது தொழிலில் ஆளுக்கொரு வேலை யாக பிரித்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் இருக்கிறது சக்தி புரூட் புராடக்ட்ஸ் நிறுவனம். செல்லமே என பிராண்டை செல்லமாக உருவாக்கி யுள்ளனர். இதன் உரிமையாளரும் நிர்வாக இயக்குநருமான திருமூர்த்தி தனது தொழில் முனைவு அனுபவத்தை இந்த வாரம் உன்னால் முடியும் பகுதிக்காக பகிர்ந்து கொண்டார்.
மேட்டூருக்குப் பக்கத்தில் கீழ்பவானி அருகே சின்ன கிராமம்தான் சொந்தஊர். பூர்வீகம் விவசாய குடும்பம் என்றாலும் அப்பா ஈரோட்டில் சிறிய அளவில் டெக்ஸ்டைல் தொழில் செய்து கொண்டிருந்தார். நான் கர்நாடக மாநிலத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். பப்பாளி பால் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அது. உற்பத்தி சார்ந்த தொழில்களை கவனித்துக் கொண்டிருந்தேன். எனது அண்ணன் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் நான் வேலையிலிருந்து விலகி இதே தொழிலை சொந்தமாக செய்யலாம் என முடிவெடுத்தேன். இதற்கு எனது குடும்பத்தினர் ஒத்துழைப்பும் உற்சாகமும் கொடுத்தனர்.
வேலை நிமித்தமாக கர்நாடகா செல்வதைவிடவும் இங்கிருந்தே தொழில் செய்வது எனது குடும்பத்தினரின் எதிர் பார்ப்பாகவும் இருந்தது என்று தனது தொழில் முயற்சிகளின் தொடக்க காலத்தை விவரித்தார் திருமூர்த்தி. தொடர்ந்து பேசினார் அவரது சகோதரரும் நிறுவனத்தின் தலைவருமான சந்திரசேகரன்.
தம்பி சொந்த தொழிலில் இறங்க வேண் டும் என முடிவெடுத்த பிறகு அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்றால், தொழிலுக்கு தேவையான மூலப் பொருள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். அதற்காக எங்களுக்கு சொந்தமான சுமார் 60 ஏக்கர் நிலத்தில் பப்பாளி பயிர் செய்ய முடிவு செய்தோம்.
தவிர எங்கள் ஊர்க்காரர்கள், உறவினர்கள் என அனைவரும் பப்பாளி பயிரிட்டுக் கொடுத்தனர். அவரு டையை இதர வேலைகளைக் கவனித்துக் கொள்ள எனது சகோதரியும், மைத்துனரும் சேர்ந்தனர். இப்படியாக குடும்ப ஒத்துழைப்போடு தொழிலில் இறங்கினார்.
ஒரு இரண்டு வருட இடைவெளியில் பப்பாளி பாலுக்கான சர்வதேச சந்தை விலை சரிந்தது.
ஆப்பிரிக்காவிலிருந்து குறைந்த விலைக்கு கிடைப்பதால், இங்கிருந்து இறக்குமதியை குறைத்துக் கொண்டனர். இதனால் பெரும் நெருக்கடியை சந்தித்தார் தம்பி. இந்த நிலையில்தான் பப்பாளி காயிலிருந்து தயாரிக்கப்படும் டூட்டி புரூட்டி குறித்து அறிந்து கொண்டு அதைத் தயாரிக்க திட்டமிட்டோம்.
இதற்கான இயந்திரங்கள் இங்கு கிடைத் தாலும் அதனை பேக்கிங் செய்வது, வித விதமாக கட் செய்வதற்கு ஏற்ற இயந் திரங்களை எங்களது முயற்சியிலேயே வடிவமைத்தோம். டூட்டி புரூட்டியின் தயாரிப்பு முறையை எளிதாக்க எங்களுக்கு நான்கு வருடங்கள் தேவைப்பட்டது. அதற்கு பிறகு நானும் எனது வேலையிலிருந்து விலகி தம்பிக்கு உதவியாக வந்து விட்டேன்.
டூட்டி புரூட்டிக்கு அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபோது பழ ஜாம் தயாரிப்பு முயற்சிகளை மேற்கொண்டோம்.
தம்பி தயாரிப்பை கவனித்துக் கொள் வார். நான் மார்க்கெட்டிங், மைத்துனர் நிர்வாகம் என வேலைகளைப் பிரித்துக் கொண்டோம். கிராமத்திலேயே செய்து கொண்டிருந்த பிசினஸை ஓரளவு வளர்ந்த பிறகு ஈரோட்டுக்கு மாற்றிக் கொண்டோம்.
இந்த தொழிலில் முக்கியமான பிரச்சினை என்னெவென்றால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்க்கொள்வதுதான். அதையும் எங்களது அனுபவத்திலிருந்தே ஒவ்வொன்றாக சரிசெய்து கொண்டோம். தயாரிப்புகளைப் பொறுத்தவரை உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். வெளிநாட்டு ஆர்டர் களுக்கு நேரடியாக அனுப்பி வைப் பதில்லை. தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாக வும் சுமார் 100 பேருக்கு வேலை அளித்து வருகிறோம்.
எங்கள் குடும்பத்தினர் அனைவருமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் தொழிலில் உள்ள நெளிவு சுளிவு களை எல்லோருமே புரிந்து கொள்ள முடிகி றது. எங்களது மதிய உணவும் இங்கேயே பணியாளர்களுக்கு மத்தியில்தான். இதனால் அவர்களோடும் குடும்பமாக பழக முடி கிறது.
இந்த தொழிலில் சர்வதேச நிறுவன தயாரிப்புகளோடுதான் போட்டிபோட வேண்டியிருக்கிறது. என்றாலும் நமக்கான சந்தையை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் தொழிலின் மீது நமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதுதான் எங்களது அனுபவம் என்கிறார்கள் இவர்கள்.
- maheswaran.p@thehindutamil.co.in