வணிக வீதி

சூயஸ் கால்வாய் தரும் படிப்பினை!

ஜெ.சரவணன்

இதுவரையில் பள்ளி நாட்களில் வரலாறு பயிலும்போது தேர்வுக்காகத் தெரிந்த ஒன்றாகத்தான் சூயஸ் கால்வாய் இருந்தது. ஆனால், இப்போது சூயஸ் கால்வாயைப் பற்றி அங்குலம் அங்குலாக விவாதிக்கும் அளவுக்கு அது விவாதப் பொருளாகிவிட்டது. கடந்த இரண்டு வாரங்களில் சூயஸ் கால்வாய் குறித்து பேசாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வரலாற்றை மறந்தவர்களுக்கு சிறிய நினைவூட்டல். 1869-ம் ஆண்டு மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய (120 மைல்) நீர்வழிப் பாதைதான் இந்த சூயஸ் கால்வாய்.

சினாய் பெனின்சுலா பிராந்தியத்திலிருந்து எகிப்தை பிரிக்கும் இந்த வழித்தடம் மத்திய தரைக்கடலிலிருந்து செங்கடல் மூலம் இந்தியப் பெருங்கடலை இணைக்கும் கால்வாயாகும். ஐரோப்பிய ஆசிய நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படும் பகுதியாக இந்தக் கால்வாய் இருக்கிறது.

1956-ம் ஆண்டு சூயஸ் கால்வாய்க்கு உரிமை கோரி இஸ்ரேல்-பிரிட்டன், பிரெஞ்சு ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அன்றிலிருந்து இன்று வரை இந்த வழித்தடத்தை உபயோகிக்க கப்பல்கள் கட்டணம் செலுத்திவருகின்றன. சூயஸ் கால்வாய் உலக வர்த்தகம் தொடர்பான போக்குவரத்தில் 10 சதவீதம் பங்கு வகிக்கிறது. மேலும் உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் இக்கால்வாய் வழியாக 7 சதவீத எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கால்வாயில் கடந்த மார்ச் 23-ம்தேதி ஆசியாவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பா சென்றுகொண்டிருந்த தாய்வான் நிறுவனத்துக்குச் சொந்தமான எவர் கிவன் என்ற 400 மீட்டர் நீளமுள்ள ராட்சத சரக்குப் பெட்டக கப்பல் கடுமையான சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டு தரைதட்டி கால்வாயின் குறுக்கே நின்றுவிட்டது. உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான இந்த சரக்குக் கப்பல் குறுக்கே நின்றதால் இரு புறமும் கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போனது. ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் பெருமளவிலான சரக்குப் போக்குவரத்து இதனால் முடங்கிப் போனது.

400க்கும் மேலான சரக்குக் கப்பல்கள் அவ்வழியே பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு நாளைக்கு ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் கொண்டுசெல்ல முடியாமல் தேங்கியதாகக் கூறப்பட்டது. தரைதட்டிய இந்த கப்பலை மீட்க ஒருவாரமாகப் போராடினார்கள். 10க்கும் மேற்பட்ட மீட்புப் படகுகளை பயன்படுத்தி, ஏராளமான கப்பல் மீட்பு நிபுணர்கள், பொறியாளர்கள் போராடி ஒருவழியாக மார்ச் 29-ம் தேதி கப்பல் மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.

இதில் முக்கியப் பங்கு இயற்கைக்கு உண்டு. பெளர்ணமி நாளில் கடல் அலைகள் அதிகமாக உருவாகியதன் மூலம் கப்பலை மீட்பது எளிதானது. அதன்பிறகு கால்வாய் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதன்பிறகே கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனாலும் கப்பல் தரைதட்டியதால் கால்வாயில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னமும் முழுமையாக நீங்கவில்லை என்கிறார்கள். மேலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் அனைத்து கப்பல் போக்குவரத்து நிறுவனங்களும் இழப்பீடு கோரும். இந்த இழப்பீட்டுத் தொகை மிகப் பெருமளவு இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. முதல் கட்டமாக எகிப்து அரசு எவர் கிவன் நிறுவனத்திடம் 100 கோடி டாலர் இழப்பீடு கோரியுள்ளது. ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

ஏறக்குறைய ஒரு வார காலம் சர்வதேச வர்த்தகத்தையே முடக்கிப் போடும் அளவுக்கு முட்டுக் கட்டையாக நின்ற சரக்குக் கப்பல் மிகப் பிரம்மாண்டமாய் பெரியதாக இருந்தது முதல் காரணம். செயற்கையாக உருவாக்கப்பட்ட குறுகிய அளவுள்ள கால்வாயில் அளவில் பெரிய, நீளமான கப்பல்களை அனுமதித்திருக்கக் கூடாது. சிறிய அல்லது நடுத்தர ரக கப்பல்களே இந்த வழித்தடத்தில் செல்வதற்குச் சிறந்தவை என்பதை உணர்த்தியிருக்கிறது.

தற்போது சீனாவைச் சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனமான ஹூடோங் ஷோன்ஹுவா தற்போது 25 ஆயிரம் கன்டெயினர்களைச் சுமந்து செல்லும் கப்பலை கட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து 30 ஆயிரம் கன்டெயினர்களைச் சுமந்து செல்லும் கப்பலையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இவை பிரமிப்பை ஏற்படுத்துபவையாகவும், அதிக சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன்கொண்டவையாகவும் இருக்கலாம். ஆனால் சூயஸ் கால்வாய் போன்ற வழித் தடங்களில் இவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இதன்மூலம்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற விபரீத நிகழ்வுகள் ஏற்படாமலிருக்கும் என்பது நிச்சயம்.

- saravanan.j@hindutamil.co.in

SCROLL FOR NEXT