‘‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’’ என்ற பழம்பெரும் தமிழ்த் திரைப்பட பாடலின் வரிகள் தமிழ்நாட்டிற்கு மிகவும் பொருந்தும். நீண்ட கடல் வளம், பரந்து விரிந்த காவிரி டெல்டா விளைநிலங்கள், முல்லை பெரியாறு, தாமிரபரணி, பவானி உட்பட ஏராளமான பாசன பகுதிகள், பஞ்சு உற்பத்திக்கும், பட்டு நெசவுக்கும் ஏற்ற பாரம்பரிய தொழில் நகரங்கள், சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம் போன்ற நவீன தொழில் நகரங்கள் என்று தொழில்வளம், இயற்கை வளம், கடும் உழைப்பை வழங்கும் தொழிலாளர் வளம் மிகுந்தது, நமது தமிழ்நாடு.
இங்கே, விவசாயம், மருத்துவம், சுற்றுலா, சேவைத்துறை மற்றும் உற்பத்தி துறைகள் வாயிலாக, தற்போது ரூ.18 லட்சம் கோடி அளவுக்கு மாநிலத்தின் ஜி.டி.பி. உள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி. 2.7 பில்லியன் டாலர். இதில் பத்தில் ஒரு பங்கை தமிழகம் தருகிறது. கடந்த50 ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டு பிரதான திராவிட கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆள்கின்றன. இரு பெரும் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்களை பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுத்துள்ளனர். இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும், தொழில் தொடங்குவதற்கும், வாழ்வதற்கும் ஒரு அமைதியான மாநிலமாக தமிழகம் அடையாளம் காணப்படுவது, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒன்று.
ஆனால் அதுமட்டும் போதுமா? பொருளாதார வளர்ச்சியில், நாட்டின் முதல் 5 இடங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், ‘‘நம்பர் ஒன்’’ அல்ல.
தற்போது புதிய அரசை அமைப்பதற்காக, தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில், எளிய மக்களுக்கான, இலவச திட்டங்களை அதிகம் அறிவித்துள்ளன. குடும்பப் பெண்களுக்கு, மாதம்தோறும், ரூ.1,500 என்றும், ரூ.1,000 வழங்குவோம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளன. இலவச எரிவாயு சிலிண்டர், இலவச வாஷிங் மெஷின் என்று பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடும்ப மகளிருக்கு, மாதம்தோறும் ரொக்கம் வழங்கும் திட்டம் குறித்து பல்வேறு விவாதங்கள் சமூகத்தில் எழுந்தாலும், இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் அமல்படுத்த முயற்சிக்கும் திட்டமல்ல. சர்வதேச அளவில், பின்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகள் ‘‘யுனிவர்சல் பேசிக் இன்கம்’’ (Universal basic income – UBI) என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தங்கள் நாட்டில், இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தப்படுத்த முனைந்துள்ளன.
தங்களின் குடிமக்களில், நலிந்த பிரிவினர் வாழ்வாதாரத்துக்காகவும், வாழ்க்கைச் செலவுகளுக்காகவும், குறைந்தபட்ச பணமாக, அந்த நாடுகளின் அரசு வழங்குகிறது. அதன்படி, மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டன. உலகில், மூன்றில் ஒரு பங்கு ஏழைகள், இந்தியாவில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அதன்படி, ஏழைகளுக்காக, இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருவது பற்றி, புதிய அரசுகள் அக்கறைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், அதற்கான நிதியை எப்படி பெறுவார்கள் என்பதில்தான் நிறைய கேள்விகள் எழுகின்றன. எந்த அரசு, புதிதாக பொறுப்பேற்றாலும், முதலில், சுமார் ரூ.5 லட்சம் கோடி கடனை தாங்கிக் கொள்ள வேண்டும். கூடுதலாக, புதிய திட்டங்களுக்கான செலவினங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருடத்திற்கு நிதி திரட்ட வேண்டும்.
வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி போன்றவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டபிறகு, புதிதாக வரி வருவாய் ஏற்படுத்துவதற்கு, மாநிலங்களுக்கு வழியில்லை. மோட்டார் வாகனங்கள் பதிவு, பத்திரப்பதிவு, மதுபான விற்பனை, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகள் வாயிலாகத்தான், மாநில வருவாயை பெருக்க முடியும். அதைவிட்டால், கடன் வாங்குவது, கடன் பத்திரங்கள் வெளியிடுவதுதான் மாநிலங்களுக்கு உள்ள வாய்ப்பு. ஆனால், அதற்காக செலுத்தப்படும் வட்டி, வருங்காலத்தில், மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
ஆகவே, மாநிலத்தின் வளர்ச்சியிலும் கவனம் கொள்ள வேண்டும். மக்கள் நல திட்டங்களுக்கும் நிதி திரட்ட வேண்டும் என்றால், அதற்கு மாநிலத்தின் ஜிடிபியை அதிகரிக்கச் செய்வதே ஒரே தீர்வு. தற்போது ரூ. 18 லட்சம் கோடியாக இருக்கும் தமிழகத்தின் ஜிடிபி, ரூ. 35 லட்சம் கோடியாக அதிகரிக்கும் பட்சத்தில், தாங்கள் அறிவித்துள்ள கவர்ச்சி, கனவுத்திட்டங்களை ஒரு அரசு செய்துவிட முடியும். தற்போதுள்ள தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை, மேலும் 60 சதவீதம் அளவிற்கு அதிகரித்தால்தான், அதன்மூலம் கிடைக்கும் வரிவருவாய் மூலம் புதிய திட்டங்கள் அமலாக்கம் சாத்தியப்படும். இல்லாவிட்டால், வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதியிலிருந்து இந்த செலவுகளை செய்து, வளர்ச்சிப்பணிகளை முடக்க வேண்டியிருக்கும். அல்லது தமிழ் நாடு கடன் வாங்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, அதன்மூலம் ஜிடிபி உயர்வு, அதன்வாயிலாக வரி வருவாய் உயர்வு போன்ற சாதகமான சூழ்நிலைகள் அமைய, தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கும் புதிய அரசு செய்ய வேண்டியது என்ன?
தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தை நாடிவர இருக்கும் தொழில்நிறுவனங்கள் மத்தியில், புதிய அரசு, ஒரு ஆழமான நம்பிக்கையை விதைக்க வேண்டும். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கும், தொழில் நடத்துவதற்கும் இடைஞ்சலாக இருக்கும் சட்ட திட்டங்களை, நடைமுறைகளை எளிமையாக, வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும். தற்போது தமிழகத்தில் எம்.எஸ்.எம்.இ., துறையினர், பிற தொழில் முனைவோர் சந்தித்துவரும் சில சிக்கல்களை பார்ப்போம்.
தொழில் தொடங்குவதற்கு நிலம் வாங்குவதற்கு, அதில் கட்டிடம் கட்டுவதற்கு, டிடிசிபி, உள்ளூர் திட்ட குழுமம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. உரிய தொழில் லைசென்ஸ் பெறுவதற்கும், தடையில்லா சான்று பெறுவதற்கும், பல்வேறு அரசு துறைகளுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், தொழில் முனைவோருக்கு கால விரயம், பண விரயம், மனச்சோர்வு ஏற்படுகிறது. ஒரு தொழில் தொடங்குவதற்கு தேவையான எல்லாவிதமான அனுமதி மற்றும் லைசென்ஸ்களும் பெறுவதற்கான வசதிகளை ‘‘சிங்கிள் விண்டோ’’ முறையில், ஒரே போர்ட்டலில் ஏற்படுத்தி தர வேண்டும். அப்போதுதான் புதிய புதிய தொழில்கள் தொடங்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
பல்வேறு மானியங்கள், சலுகைகள் வழங்கி, நாட்டின் பிற பகுதியில் உள்ள தொழில்களை குஜராத், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் ஈர்க்கின்றன. தமிழகத்தில் நமது மாநிலத்திலும் இதுபோன்று அமல்படுத்தினால், தமிழகத்தில் இயங்கிவரும் தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்வது நிறுத்தப்படும் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது. மின் மிகை மாநிலமாக உள்ளதால், எல்லா வகை தொழிற்சாலைகளுக்கும் சீரான மின் விநியோகம் தற்போது கிடைத்து வருகிறது. தற்போது அவசரகால பயன்பாட்டுக்காக மட்டுமே, பவர் ஜெனரேட்டர்கள், தொழில் நிறுவனங்களில் பயன்படுகின்றன. அப்படியிருக்க, 125 கேவிஏக்குமேல் பயன்பாட்டில் உள்ள ஜென்செட்டுகளுக்கு, மாசுகட்டுப்பாட்டு கருவி பொறுத்த வேண்டும் என்ற அரசின் கட்டாய அறிவிப்புகள் அவசியமற்றது.
சிப்காட், சிட்கோ போன்ற தொழிற்பேட்டைகளை அரசு நடத்தி வருகிறது. அதில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு மானியம், சலுகைகள் வழங்கப்படுகின்றன. தனியார் நடத்தும் தொழிற்பூங்காக்களுக்கும் அதேபோன்ற சலுகைகள், மானியங்கள் வழங்க வேண்டும்.
தமிழகத்தில், எம்.எஸ்.எம்.இ., மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்கினாலோ, தொழிலை விரிவாக்கம் செய்தாலோ, அவற்றுக்கு மானியத்துடன் முதலீட்டு நிதி கிடைக்க அரசு உதவ வேண்டும்.
நாட்டின், வடக்கு மற்றும் வட கிழக்கு மாநில தொழிலாளர்கள், கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றதால், வேளாண்மை தொடங்கி, கட்டுமானம் வரைக்கும் எல்லா வகையான தொழில்களும், தமிழகத்தில் ஸ்தம்பித்தன. உள்ளூர் இளைஞர்களுக்கு, போதுமான, திறன் பயிற்சி அளித்து, தமிழ்நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகளில், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான், தமிழகம், தொழில் வளர்ச்சியில், சுயசார்பு நிலையை எட்டும். அதற்கான முயற்சியில், தமிழக அரசாங்கத்துடன், கொடீசியா போன்ற பல்வேறு தொழில் அமைப்புகள் கைகோர்த்து செயல்பட ஆர்வமுடன் காத்திருக்கின்றன.
தமிழகத்தில், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தொழில் நிறுவனங்கள் குவிவதை தடுத்து, தொழில் மற்றும் வேலைவாய்ப்பை மாநிலம் முழுவதும் பரவலாக்க வேண்டும். வேளாண்மை, நெசவு, கால்நடை வளம் இல்லாத மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க உதவினால், வேலைதேடி, குறிப்பிட்ட நகரங்களில் இளைஞர்கள் குவிவதையும், குடும்பங்கள் இடம்பெயர்வதையும் கட்டுப்படுத்த முடியும்.
கரோனா காலத்தில், சுற்றுலாவும், ஓட்டல், ரெஸ்டாரன்ட் தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. அதற்கு நிவாரணமாக, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள், ரெஸ்ட்டாரன்ட் தொழிலை சிறுதொழில்துறையின் கீழ் அங்கீகரித்து சலுகைகள் வழங்கின. அதுபோன்ற ஊக்கத்தை தமிழகத்திலும் வழங்க வேண்டும்.
மகளிர் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த, பதிவுத்துறை கட்டணங்களில் விலக்கு மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கலாம்.
‘ப்ளூ காலர்’ தொழிலாளர் குடும்பங்கள், வீடு வாங்க வசதியாக, புறநகர், கிராமப்புறங்களில் தனியார் – அரசு முதலீட்டில், குறைந்த விலை வீடுகளுடன் கூடிய டவுன்ஷிப் உருவாக்கலாம். அதனால், சம்பளத்தில் பாதி, வீட்டு வாடகையாக செல்வது தடுக்கப்படும்.
மாறிவரும் தொழில்சூழலுக்கு ஏற்ப, தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்ற வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு சிக்கல்களுக்கு என்ன தீர்வு காண்போம் என்பதை அறிவிக்கும் கட்சிக்குத்தான் தொழில் அமைப்புகளும், அதைச்சார்ந்த தொழிலாளர்களும் ஆதரவு தருவார்கள். தமிழகமும், தொழில் வளர்ச்சியில் நம்பர் ஒன் இடத்தை எட்டும்.
‘மாண்புமிகு’ அரசியல் தலைமைகள் இதை மனதில் கொள்ள வேண்டும்.
மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த, பதிவுத்துறை கட்டணங்களில் விலக்கு மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கலாம்.