கடந்த பிப்ரவரி 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனியார்மயமாக்கல் ஏன் காலத்தின் கட்டாயம் என்பதற்கான விளக்கத்தை மிக நீண்ட உரையாக வழங்கினார். அதில் முக்கியமாக அவர் குறிப்பிட்டது “தொழில் செய்வது அரசின் வேலை இல்லை”. அதாவது தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் அரசு ஈடுபடத் தேவையில்லை, அரசின் பொறுப்பு அதன் குடிமக்களுக்கு நல்வாழ்வை உறுதி செய்வதுதான் என்றார். பிரதமரின் இந்தப் பேச்சுக்குப் பிறகு தனியார்மயமாக்கல் குறித்த விவாதங்களும், எதிர்ப்புக் குரல்களும் வழக்கத்தைவிட தீவிரமாகத் தொடங்கியிருக்கின்றன.
ஆனால், தனியார்மயம் இந்தியச் சந்தையில் கலந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 1991ல் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் அந்நிய மற்றும் தனியார் முதலீடுகளுக்குச் சந்தையைத் திறந்ததிலிருந்து இந்தியப் பொருளாதாரம் அரசு மற்றும் தனியார் துறைகளின் கலவையில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அபரிமிதமான முதலீடுகள் உள்ளே வருகின்றன. விவசாயம், உற்பத்தித் துறை மட்டுமே என்று இருந்த சந்தையில் பல புதிய துறைகள் உருவாகின்றன.
பொருளாதாரம் உயர்கிறது. பெரும்பாலானோர் சம்பளதாரர்களாகிறார்கள். மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. அரசுத் துறைகளைக் கீழே தள்ளி தனியார் துறைகளின் வீச்சு நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்கிறது. அப்படியிருக்க இப்போது ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். உண்மையில் தனியார்மயமாக்கலில் உள்ள பிரச்சினைதான் என்ன, எந்தப் புள்ளியில் தனியார்மயம் பயமுறுத்துவதாக மாறுகிறது, தனியார் பங்களிப்பை அதிகரிப்பதில் அரசுக்கு என்ன லாபம்?
தனியார்மயத்தை ஏன் அரசு கையிலெடுக்கிறது?
அரசுத் துறையானது தோல்வி அடையும் போதுதான் தனியார் துறையின் தேவை உண்டாகிறது. தற்போது அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கச் சொல்லும் பிரதான காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்தியே ஆக வேண்டும். அதற்கு அபரிமிதமான முதலீடும், துறைகளை நவீனமயப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களும் ஒவ்வொரு துறைகளுக்கும் அவசியம். ஆனால், இவற்றை செயல்படுத்தும் திறன் அரசிடமும் அரசுத் துறைகளிடமும் தற்போது இல்லை. காரணம், தொடர் நஷ்டம் மற்றும் தொடர்ந்து அதிகரித்துவரும் கடன் சுமை.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் 2020 நிலவரப்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கடன் ரூ.147 லட்சம் கோடியாக உள்ளது. இது நாட்டின் ஜிடிபியில் 72.1 சதவீதம் ஆகும். கடன் அதிகரிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து அரசுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. ஊழல் காரணமாகவும் அரசு ஊழியர்கள் மெத்தனத்தின் காரணமாகவும் சந்தை பங்களிப்பை தனியார் நிறுவனங்களிடம் அரசு நிறுவனங்கள் பறிகொடுத்தன.
மறுபக்கம் தேவையான முதலீடுகளை மேற்கொள்ளாமல் காலத்துக்கேற்ற தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொள்ளாமல் அரசு நிறுவனங்கள் மக்களிடமிருந்து மிக நீண்ட தொலைவுக்குச் சென்றுவிட்டன. இதுதான் அரசு நிறுவனங்களின் தொடர் நஷ்டத்துக்குக் காரணம். இதனால் அரசு நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலை உண்டாகிறது. ஆனால் இனியும் அரசு நிறுவனங்களைக் காப்பாற்றி நஷ்டத்தையும் கடனையும் சுமக்க அரசு தயாராக இல்லை என்
பதைத் தெளிவாகக் கூறியிருக்கிறார் பிரதமர்.
அரசுத் துறைகள் தொடங்கப்பட்டபோது பொருளாதார சூழல் வேறு. அப்போதைய கொள்கை இன்றைய சூழலுக்குப் பொருந்தாது. இவ்வளவு காலமாய் இருந்ததாலேயே அரசு நிறுவனங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இப்போது அதன் சுமையை அரசும் மக்களும் சுமக்க வேண்டுமா என்பது அவரது கேள்வியாக இருக்கிறது. மேலும் வணிக ரீதியிலான முடிவுகளை அரசு நிறுவனம் எடுக்கும்போது பல தடைகள், எதிர்ப்புகள் உள்ளன. இதனால் தேவையான மாற்றங்களைச் செய்வது கடினமாக உள்ளது. இதனால் அரசு நிறுவனங்கள் ஒரு வரம்புக்குள்ளேயே இயங்க வேண்டும் என்ற சூழலில் சந்தையின் வாய்ப்புகளைப் பெருக்குவதில் கட்டுப்பாடுகள் வருகின்றன என்கிறார். அரசுத் துறைகளின் கீழ் நாடு முழுவதும் பல எண்ணிலடங்கா சொத்துகள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை குறைவான பயன்பாட்டிலோ அல்லது பயன்பாட்டிலேயோ இல்லாமலும் இருக்கின்றன. அவை அனைத்தையும் விற்பனை செய்யும்போது பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதோடு பணமாக்கவும் முடியும். இதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி திரட்ட முடியும். இவ்வாறு திரட்டப்படும் நிதியை மக்களின் நலத்திட்டங்களுக்காகவும், ஏழைகளுக்கு வீடு வழங்கவும், சாலைகள் அமைக்கவும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்த முடியும்.
இனியேனும் மக்களின் வரிப்பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என்பதுதான் அவரது தீர்மானமாக இருக்கிறது. ஆனால், இந்தச் சூழலுக்கு வரக் காரணமே அரசுத் துறைகளைக் கண்காணிக்காமல் விட்டதும், வலுப்படுத்தாமல் விட்டதும்தான். சரி இனி அரசுத்துறைகளை வலுப்படுத்த முடியாதா என்று கேட்கலாம். இத்தனை ஆண்டுகளில் அரசுத் துறைகள் இழந்ததை மீண்டும் மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியமல்ல.
அதுமட்டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தின் இயக்கம் படு வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகிக்கொண்டிருக்கிறது. இதற்கு அபரிமிதமான தொழில்நுட்பமும், இணையமும் அதுசார்ந்த மென்பொருள் பயன்பாடுகளும் அவசியம். இவை அனைத்துமே தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அரசு நினைத்தால் தொழில்நுட்பங்களைத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி அரசுத் துறைகளை மேம்படுத்தலாம். ஆனால் அதற்கு அரசு செலவினம் பல மடங்கு அதிகரிக்கும்.
ஏற்கெனவே கடன் சுமையின் பாரத்தை தாங்க முடியாமல் இருக்கும் அரசு மேலும் செலவு செய்யத் தயாராக இல்லை. தற்போது சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம் என அனைத்திலும் மிகப்பெரிய நிலையற்ற தன்மையை உண்டாக்கியிருக்கிறது. இந்தச்சூழலில் பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எனவே அதற்கான கதவுகளைத் தனியாருக்குத் திறந்துவிட முடிவெடுக்கிறது.
தனியார் துறை அபரிமிதமான முதலீடுகளையும், சர்வதேச தரத்திலான தொழில் முறைகளையும் கொண்டுவரும். இதன்மூலம் உலகத்தரத்திலான பொருட்கள், சேவைகள் உற்பத்தி ஆகும். வேலைவாய்ப்புகள் பெருகும். சர்வதேச அரங்கில் நாட்டின் பொருளாதாரப் போட்டித்தகுதி உயரும். எனவே தற்போது சந்தை பொருளாதாரத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல தனியாரின் தேவையை நாட வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது.
தனியார்மயத்தின் சிக்கல்களும் அபாயங்களும்
ஆனால், சந்தை தனியார்மயத்தின் ஆதிக்கத்துக்கு மாறிவிடுவதில் பல பிரச்சினைகள் உள்ளன. முதலில் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளைத் தீவிரமாக மேற்கொள்வதே அதன்மூலம் பெரும் லாபத்தை ஈட்டத்தான். அப்படியிருக்க நுகர்வோர் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுவதற்கான சூழலை உத்திரவாதம் செய்வது யார்? வெறும் நலத்திட்டங்களால் மட்டுமே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திவிட முடியாது. சந்தை என்பது எல்லோருக்குமானதாக இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் சந்தை என்பது மக்கள் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வின் அங்கம். அதில் ஏற்படுகிற ஒவ்வொரு மாற்றமும் அனைவர் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு துறையிலிருந்து அரசு ஒதுங்கிக்கொண்டு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க முடிவெடுப்பதில் உள்ள சிக்கலை ஜியோ vs பிஎஸ்என்எல் ஒப்பீட்டின் மூலமே புரிந்துகொள்ளலாம். ஒரு அரசு வலுவான அதிகாரத்தையும், பேரம் பேசும் திறனையும் கொண்டிருந்தாலும் அரசு நிறுவனத்தை முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக உருவாக்க முயற்சிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு வாய்ப்பை தாரைவார்த்தது. ஜியோ உள்ளே வரும்போது டெலிகாம் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லோருக்குமே தெரியும். குறைந்த விலைக்கு டேட்டா வழங்கும் கட்டாயத்துக்குப் பிற நிறுவனங்கள் ஆளாயின. ஜியோவின் போட்டியை எதிர்கொள்ளும் சக்தி இல்லாமல் போனதும், நிறுவனங்கள் ஒவ்வொன்றாகப் பின்வாங்க ஆரம்பித்தன. சில நிறுவனங்கள் காணாமல் போயின.
இப்போது டெலிகாம் துறையில் ஜியோ வைத்ததுதான் சட்டம். சமீபத்தில் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் ஜியோவுக்கு அருகில் கூட மற்ற நிறுவனங்கள் நெருங்க முடியவில்லை. இப்படி சந்தையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பது என்பது இறுதியில் வலுவான ஒரு சில நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் மாறும் நிலையை உண்டாக்கும். ஏனெனில் ஒரு துறையை அரசு நடத்தும்போது போட்டிக்கான சூழல் இருப்பதில்லை. இதனால் கணிசமான வருமான திட்டத்துடன் மக்களுக்கான சேவைகளைச் செயல்படுத்த முடியும். ஆனால் தனியாருக்கு திறந்துவிடும்போது போட்டி அதிகரிக்கிறது. போட்டி அதிகரிக்கும்போது குறுக்கு வழிகளும், முறைகேடுகளும் அதிகரிக்கின்றன.
வலுவான நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதற்கான வேலையில் இறங்கும். இதனால் பல நிறுவனங்கள் திவால் ஆகும். நிறுவனங்கள் திவால் ஆகும்போது அது நிதித் துறையில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் சந்தையின் அடிப்படை அஸ்திவாரமே அடிவாங்கும். அதனால் வேலைவாய்ப்பு பாதிக்கும். அதை நம்பியிருந்த மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். மேலும் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் அரசு நிறுவனம் ஒன்றாவது இருக்க வேண்டியது அவசியம்.
காரணம் ஒருவேளை தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்துகிற மாற்றங்கள் சந்தையைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும்பட்சத்தில், தனியார் நிறுவனங்கள் தனக்கென்ன என்று போய்விடும். அப்போது ஏற்படுகிற நெருக்கடியின் சவாலைத் தலையில் சுமக்க வேண்டியது அரசுதான். ஏனெனில் தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை நெறிமுறைகளை வகுக்காமல் அவற்றுக்கு கதவு திறந்துவிடும் ஆபத்துகள் ஏற்கெனவே பல துறைகளில் நிகழ்ந்துவிட்டன. அதற்கு ஒரு உதாரணம் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். மல்லையாவுக்குச் சொந்தமான இந்நிறுவனத்தின் வருகையும் வீழ்ச்சியும் இந்திய விமான சேவைத் துறையில் ஏற்படுத்திய வடு இன்னமும் ஆறாமல் இருக்கிறது.
சந்தையின் கட்டுப்பாட்டை அரசு நழுவவிட்டால் விலைவாசி உயர்வு, பற்றாக்குறை, பதுக்கல் போன்றவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதேபோல் தொழிலாளர் சுரண்டல், வேலைவாய்ப்பின்மை, பணி அழுத்தம் போன்றவை அதிகரிக்கலாம். இன்று மருத்துவம், கல்வி இரண்டு துறைகளையும் கூர்ந்து பார்த்தாலே தனியாரின் வீச்சும் அதனால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளும் தெளிவாகத் தெரியும்.
இன்னமும் அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் கொஞ்சம் மிச்சமிருப்பதால்தான் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வு ஓரளவேனும் காப்பற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கான மிச்சத்தையும் எடுத்து விடும்பட்சத்தில் அவர்களின் கதி என்ன என்பதுதான் கேள்வி. பெட்ரோலிய நிறுவனங்கள் சில அரசு நிறுவனங்களாக இருக்கும்போதே எரிபொருள், எரிவாயு விலை உயர்வுக்கு அரசு காரணமில்லை என்று சொல்ல முடிகிறது எனில், முழு சந்தையும் தனியாருக்குப் போய்விட்டால் எப்படி அரசு மக்களுக்கான நல்வாழ்வை உறுதி செய்யும்.
என்னதான் தீர்வு?
ஒரு நாட்டின் சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது பிரதானமாக பொருளாதார நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதும், அதன் மூலமான வளர்ச்சியின் பலனை உரிமை கொண்டாடுவதும்தான். அதை ஒரு அரசு நழுவவிடும்போது ஏற்படுகிற அபாயம் என்ன என்பதுதான் இப்போதைய அச்சத்துக்கான காரணம். எனவே தனியார் மயமாக்கல் நடவடிக்கையை எடுக்கும்போது அதற்கான சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் கடுமையாக நிர்ணயிப்பது அவசியம்.
அதன்மூலம் மட்டுமே எல்லோருக்குமான நியாயமான சந்தையை உருவாக்க முடியும். எல்லாவற்றையும் தனியாருக்குக் கொடுத்துவிட்டு கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமும் வழங்கினால் அது பல்வேறு முறைகேடுகளுக்குத்தான் வழிவகுக்கும். அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. முழுக்க முழுக்க தனியாரின் ஆதிக்கத்தில் இருக்கும் சந்தையில் இது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை. அத்தகைய சூழலை உருவாக்கிவிடும் அரசை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இதை நினைவில் வைத்து அரசு செயல்பட வேண்டும்.
ஜெ.சரவணன், saravanan.j@hindutamil.co.in