சுமார் 25 வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் பெங்களூருவில் பிரபலமாக இருந்த ஒரு மென் பொருள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தார். கெட்டிக்காரர். அவரை ஊக்குவிக்கும் விதமாக அந்நிறுவனம் அவருக்கு 2,000 பங்குகளை (ஊழியர்களுக்கு சலுகை விலையில் வழங்கும் பங்குகள்- ESOP) ஆகக் கொடுத்தது. அன்றைய மதிப்பில் சுமார் ரூ 4 லட்சம்! பின்னர் நண்பருக்கு சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை கிடைத்து மாறிக் கொண்டார்.
அப்பொழுது சக ஊழியர் ஒருவரிடம் தனது பங்குகளை விற்று பணம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அந்த ஊழியரோ ‘உனக்கு இப்பொழுது பணம் தேவையில்லை. நிறுவனம் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. விற்பதற்கு என்ன அவசரம்’ என அறிவுரை கூறிப் பார்த்தார். நண்பர் கேட்காததால் 1,000 பங்குகளை மட்டும் விற்று காசாக்கிக் கொடுத்தார்.
கதைகளில் சொல்வார்களே அது போலக் காலம் கடந்தோடியது. நண்பர் தம்மிடம் 1000 பங்குகள் மீதி இருப்பதையே மறந்து விட்டார். ஆனால் மென்பொருள் நிறுவனம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. உரிமைப்பங்குகள், போனஸ்பங்குகள் அளித்ததுடன் பங்குகளைப் பிரித்தும் (Split) கொடுத்தது. எனவே 1000 பங்குகள் 12000 பங்குகளாக அசுர வளர்ச்சியடைந்தன. மதிப்பு 80 லட்சம் ரூபாய் ஆகி விட்டது!
இந்த மாதிரி நம்பமுடியாத வெற்றிக்கதைகள் பங்குசந்தையில் சாதாரணம்; ஏராளம்! சமீபத்தில் நிதி ஆலோசகர் ஒருவரின் விளம்பரத்தில் கூட ஒரு பரஸ்பரநிதியில் 1 லட்சம் முதலீடு 22 வருடங்களில் சுமார் 85 லட்சங்களாக வளர்ந்திருப்பதைக் கூறி இருந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
பங்கு வர்த்தகத்தில் பல சோகக்கதைகளும் உண்டு என நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது! ஹர்ஷத்மேத்தா காலத்தில் அதில் விளையாடி, நிலத்தை விற்று, வீட்டை விற்று காணாமல் போனவர்கள் பலர். பங்குச்சந்தை முதலீடுகள் நிச்சயம் ஆபத்தானவைதான். புரிந்து கொண்டு இறங்குவதே நல்லது. காலையில் வாங்கி மாலையில் விற்று லாபம் என்பது எல்லோ ருக்கும் எப்பொழுதும் நடக்கக் கூடியது அல்ல!
இன்றைய உலகின் மிகப்பெரிய மிக வெற்றிகரமான முதலீட்டாளராக கருதப்படும் வாரன் பபெட் ‘நான் பங்குச் சந்தையில் பணம் பண்ண முயல்வதே இல்லை. பங்குச்சந்தை நாளையே மூடப்பட்டு அடுத்த 5 வருடங்களுக்கு இது திறக்கப்படாமலேயே கூட இருக்கக்கூடும் என்கிற எண்ணத்தில் தான் நான் பங்குகளை வாங்குகிறேன்’ என்கிறார். சிந்திக்க வேண்டிய கருத்து!
நல்ல நிறுவனர்கள், திறமையான நிர்வாகம், நல்ல வரவேற்பு உள்ள பொருள் என தெரிந்து, தெளிந்து முதலீடு செய்த பிறகு மறுநாளோ, அடுத்த மாதமோ, பங்குவிலை குறைந்தால் பயப்படலாமா? சந்தை சலசலப்புகளுக்கு அஞ்சலாமா? பொறுமை வேண்டாமா? தென்னை மரம் காய்க்க நாளாகாதா? கீரைச்செடி போல இல்லாமல் அது நீண்ட நாள் நின்று பலன் கொடுக்குமே?
உலகை வெற்றி கொள்ளக் கருதுபவர்கள் அதற்கு ஏற்ற காலம் வரும்வரை மனம் தளராமல் காத்திருப்பார்கள் எனும் வள்ளுவர் கூற்று முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும்.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர் - குறள்: 485
- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com