வணிக வீதி

செபியின் அடுத்த தலைவர்?

செய்திப்பிரிவு

அதிக அதிகாரங்கள் உள்ள பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) தலைவர் பதவி விரைவில் காலியாக உள்ளது. தற்போதைய தலைவரான யு.கே.சின்ஹாவின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 17-ம் தேதியுடன் முடிவடைகிறது. இவரது பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் வரை நீட்டிக்க முடியும் என்றாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

2011-ம் ஆண்டில் செபியின் தலைவராக மூன்று வருடங்களுக்கு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. அதனால் இன்னொரு முறை பதவியை நீட்டிக்கும் வாய்ப்பு குறைவு. யு.கே.சின்ஹாவுக்கு முன்பாக இருந்த தலைவர்களான சி.பி.பாவே, எம்.தாமோதரன் மற்றும் ஜி.என். பாஜ்பாய் ஆகியோர் மூன்று வருடங்கள் மட்டுமே தலைவராக இருந்தனர். டி.ஆர். மேத்தா செபியில் அதிக காலம் (1995-2002) தலைவராக இருந்தவர்.

அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சின்ஹா தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் உள்ளிட்டோர் உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் அக்டோபர் 7 வரை புதிய தலைவருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுவரை 55-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை தவிரவும் தகுதிவாய்ந்த நபர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. `செபி’யின் தலைவர் தவிர இயக்குநர் குழுவில் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் மூவர் முழு நேர உறுப்பினர்கள் ஆவார்கள். புதிய தலைவர் 5 வருடங் களுக்கு அல்லது தலைவராக நியமிக்கப் படுபவரின் வயது 65 ஆக இருக்க வேண்டும் இதில் எது குறைவோ அவ்வளவு காலத்துக்கு நியமிக்கப்படுவார்கள். புதிய தலைவரின் மாதச் சம்பளம் ரூ.4.5 லட்ச அளவில் இருக்கும்.

`செபி’ தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. விண்ணப்பித்திருக்கும் 55 நபர்களில் பலர் முக்கியமானவர்கள். பங்கு விலக்கல் துறை செயலாளர் ஆராதனா ஜோஹ்ரி, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் சுபிர் கோக்ரன், பார்வேர்ட் மார்க்கெட் கமிஷனின் முன்னாள் தலைவர் ரமேஷ் அபிஷேக், `செபி’யின் முழு நேர உறுப்பினர் ராஜிவ் குமார் அகர்வால், முன்னாள் துணை செயலாளர் (பங்குச்சந்தை) தாமஸ் மேத்யூ, தற்போதைய துணை கவர்னர் உர்ஜித் படேல், போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் (சிசிஐ) எம்.எஸ்.சாகூ உள்ளிட்டோர் செபி தலைவராக ஆர்வம் காட்டுகின்றனர்.

சமீபத்தில் கமாடிட்டி ஒழுங்குமுறை ஆணையமான எப்.எம்.சி. செப்டம்பர் 28-ம் தேதி செபியுடன் இணைக்கப்பட்டது. இது வரை பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட் களை மட்டுமே நிர்வாகம் செய்த செபி இனி கமாடிட்டி சந்தையையும் நிர்வகிக்க வேண்டும். அதனால் தற்போதைய, முந்தைய தலைவர்களை விட வரப்போகும் தலைவருக்கு கூடுதல் பொறுப்புகள், சவால்கள் காத்திருக்கின்றன.

SCROLL FOR NEXT