பேராசை மற்றும் பயம் ஆகிய இரு உணர்வுகள்தான் பங்குச்சந்தையின் போக்கை தீர்மானிக்கின்றன. பேராசை அதிகமாக இருக்கும்போது பங்குச்சந்தைகள் உயர்ந்தும், பயம் அதிகமாக இருக்கும் போது பங்குச்சந்தை களில் சரிவும் ஏற்படும்.
பயம் இரு காரணங்களால் ஏற்படலாம். தகவல்களின் அடிப்படையில் பயம் உருவாகும். பொருளாதார நிலைமை சரியில்லை, நிறுவனங்களின் வருமானம் குறைந்திருக்கிறது என்று தகவல்களின் அடிப்படையில் பயம் வரலாம். ஆனால் இப்போது முதலீட்டாளர்களுக்கு வந்தி ருப்பது தகவல்களின் அடிப்படையில் இல்லாமல் வரலாறு காரணமாக பயம் வந்தி ருக்கிறது.
இதுவரையிலான மிகபெரிய பங்குச் சந்தை சரிவுகள் அக்டோபர் மாதத்தில்தான் ஏற்பட்டிருக்கின்றன. சர்வதேச அளவில் 1929,1987 மற்றும் 2008-ம் ஆண்டு பங்குச் சந்தை சரிவுகள் அக்டோபர் மாதத்தில் ஏற்பட்டன.
தவிர இந்தியாவிலும் கடந்த சில வருடங்களில் அக்டோபர் மாதங்களில் சந்தை சரிந்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட் டிருக்கிறது.
காரணம் என்ன?
கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்த பிறகும் கூட பயம் வருவதற்கு காரணம் இருக்கிறது. முதலாவது செப்டம்பர் காலாண்டு முடிவுகள். வட்டி விகித குறைப்பு செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் எதிரொலிக்காது. தவிர, இந்த வட்டிக்குறைப்பின் பலன் பொருளாதாரத்தில் பிரதிபலிக்க குறைந்தபட்சம் இரண்டு காலாண்டுகள் ஆகும்.
தவிர சர்வதேச அளவில் தேவை குறைவு, சர்வதேச பொருளாதார மந்த நிலை, சீனாவின் பிரச்சினை, வட்டி குறைப்பை அறிவித்தவுடன் இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்த ஏற்றம் காரணமாக உடனடியாக சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தை தவிர சென்டிமென்டும் சேர்ந்திருப்பதால் முதலீட்டாளார்கள் அச்சப்படுகின்றனர். மேலும் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 23,350 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு வெளியேறி இருப்பதும் கவனிக்கத்தக்கது.
இது குறித்து மும்பையைச் சேர்ந்த டெக்னிக்கல் அனலிஸ்ட் ஒருவரிடம் பேசியபோது இப்போதைய அக்டோபர் பயம் தேவையற்றது. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்த வாய்ப்பிருப்பது உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும் பங்குச்சந்தை தற்போதைய நிலையில் இருந்து உயரவே வாய்ப்பு இருக்கிறது என்றார்.
அவ்வப்போது சிறிய சிறிய சரிவு ஏற்பட்டாலும் இப்போதைய நிலைமையில் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு பங்குச்சந்தையில் ஏற்றம் அதிகமாக இருக்கும். தற்போது 7954 புள்ளியில் இருக்கும் நிப்டி இன்னும் நான்கு மாதங்களில் 1,000 புள்ளிகள் உயரும் வாய்ப்பு இருக்கிறது. 1,000 புள்ளிகள் என்பது குறைந்தபட்சம்தான். அதற்கு மேலே செல்வதற்கான வாய்ப்பும் இருக் கிறது. இதனால் சந்தையை கவனிப் பதற்காக என்னுடைய வெளியூர் பயணங் களை கூட மாற்றி அமைத்துவிட்டேன் என்று கூறினார்.
வரலாறு மீண்டும் திரும்புமா அல்லது பொய்த்துப் போகுமா என்பதை பொருத் திருந்துதான் பார்க்க வேண்டும்.