கார்களில் உயிர் காக்கும் முக்கியமான பகுதியே ஏர் பேக்தான். சமீப காலமாக ஏர் பேக் பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. ஜப்பானின் டகடா நிறுவனம் தயாரித்த ஏர் பேக் பிரச்சினையால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளைத் திரும்பப் பெற வேண்டியதாயிற்று. தற்போது ஹோண்டா நிறுவனமும் தனது கார்களில் உள்ள ஏர் பேக்குகளை மாற்றித் தர முன் வந்துள்ளது. இதன்படி 2,23,578 லட்சம் கார்களைத் திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளது.
பயணிகள் உயிர் காக்கும் ஏர் பேக் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்பதால் சர்வதேச அளவில் ஏர் பேக்குகளை மாற்றித் தர இந்நிறுவனம் முடிவு செய்து இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தயாரிப்பான சிஆர்-வி, சிவிக், சிட்டி மற்றும் ஜாஸ் கார்களில் ஏர் பேக்குகளை மாற்றித் தர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்பு போர்டு நிறுவனம் மிகவும் அதிகபட்சமாக 1.66 லட்சம் கார்களைத் திரும்பப் பெற்று ஏர் பேக்குகளை மாற்றித் தந்தது. இந்நிறுவனம் பிகோ மற்றும் பியஸ்டா கிளாஸிக் கார்களுக்கு இவ்விதம் ஏர் பேக்குகளை மாற்றித் தந்தது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 1.55 லட்சம் ஸ்பார், பீட், என்ஜாய் ரக கார்களுக்கும், 1.14 லட்சம் டவேரா கார்களுக்கும் ஏர் பேக்குகளை மாற்றித் தந்துள்ளது.
அதற்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கையிலான கார்களை திரும்பப் பெறும் நிறுவனமாக ஹோண்டா திகழ்கிறது. மிக அதிக எண்ணிக்கையில் ஏர் பேக்குகளை மாற்ற வேண்டியுள்ளது ஹோண்டா சிட்டி கார்களுக்குத்தான். 1,43,154 கார்களுக்கு ஏர் பேக் மாற்ற வேண்டும். இவை அனைத்தும் 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையான காலத்தில் விற்பனையானவையாகும். இதேபோல 54,200 ஹோண்டா சிவிக் கார்களும் திரும்பப் பெறப்பட உள்ளன.
கடந்த மே மாதம்தான் அக்கார்டு, சிஆர்வி மற்றும் சிவிக் மாடல்களில் 11 ஆயிரம் கார்களுக்கு ஏர் பேக் பிரச்சினைக்காக திரும்பப் பெறப்பட்டு மாற்றித் தரப்பட்டன.
சர்வதேச அளவில் 2.45 கோடி கார்களை ஹோண்டா நிறுவனம் திரும்பப் பெற்று அவற்றுக்கு ஏர் பேக்குகளை மாற்றித் தந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் லாபம் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் டகடா ஏர் பேக்குகளை மாற்றித் தர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. ரெனால்ட் நிறுவனம் 646 பல்ஸ் கார்களைத் திரும்பப் பெற்றுள்ளது. நிசான் நிறுவனம் 9 ஆயிரம் மைக்ரா, கார்களைத் திரும்பப்பெற்றுள்ளது. டொயோடா 7 ஆயிரம் கொரோலா மாடல் கார்களைத் திரும்பப் பெற்றுள்ளது. மஹிந்திரா நிறுவனம் 2,300 ஸ்கார்பியோ, எக்ஸ்யுவி 500, ஸைலோ கார்களை திரும்பப் பெற்றுள்ளது.
ஹோண்டா நிறுவன பழுது நீக்கும் மையங்களில் இந்த ஏர் பேக்குகள் இலவசமாக மாற்றித் தரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் காருக்கு ஏர் பேக் மாற்ற வேண்டுமா என்ற விவரம் அறிவதற்கு வாகனத்தின் அடையாள எண்ணை (விஐஎன்) நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவு செய்தால் அது பற்றிய விவரம் தெரியப்படுத்தப்படும்.
பயணிகளின் உயிர் காக்கும் விஷயத்தில் நிறுவனங்கள் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் வாகனங்களைத் திரும்பப் பெற்று அவற்றை பழுது நீக்கித் தரும் நடவடிக்கை, அந்நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கச் செய்யும்.