பெல் கர்வ் (bell curve). ஐடி துறை பணியாளர்கள் மட்டுமல் லாமல் அனைத்து துறை பணியாளர்களும் பதறும் வார்த் தை இது. இந்த முறையை பயன் படுத்திதான் பல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெரு நிறுவனங்கள் இந்த முறையை நீக்கி வருகின்றன.
இன்போசிஸ், அசென்ச்சர், கேபிஎம்ஜி, சிஸ்கோ, கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த முறையில் பணியாளர்களை வகைப்படுத்தி ஊதிய உயர்வு வழங்குவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கின்றன. அது என்ன பெல் கர்வ். அதன் மீதான விமர்சனம் என்ன என்று விரிவாகப் பார்ப்போம்.
பெல் கர்வ் என்றால்?
1994-ம் ஆண்டு இந்த கருத்தியல் உருவாக்கப்பட்டது. அனைத்து பணியாளர்களை வகைப்படுத்தும் முறைதான் இந்த பெல் கர்வ். படத்தில் இருப்பது போன்று பணியாளர்களை வகைப்படுத்துவார்கள். அதாவது ஒரு நிறுவனத்தில் 100 பணியாளார்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் 20 பேர் சிறப்பாக பணியாற்றுவார்கள். 70 பேர் சராசரியாகவும், 30 பேர் மோசமாகவும் பணியாற்றுவார்கள் என்று பொறுத்துவதுதான் இந்த பெல் கர்வ்.
பிரச்சினை என்ன?
இந்த இடத்தில்தான் பிரச்சினை வருகிறது. ஒரு நிறுவனத்தில் இருக்கும் 100 நபர்களில் இத்தனை சதவீத நபர்களை இங்கு வைக்க வேண்டும் என்ற மறைமுக நிர்பந்தம் நிலவுகிறது. உதாரணத்துக்கு 20 சதவீதம் பேர் மோசமாக செயல்படுவார்கள் என்ற முன் முடிவோடு அணுகுவதுதான் பிரச்சினை. அப்படி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. தவிர பணியாளர்களை இப்படி வகைப்படுத் துவது அவர்களுடைய நம்பிக்கையை குலைக்கிறது. தவிர இதன் காரணமாக வெளியேறுவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சிறப்பாக பணியாற்றுபவர்கள் 20 சதவீதம் என வைத்துக்கொண்டால் மீதி இருக்கும் 80 சதவீத பணியாளர்கள் நாம் எந்த இடத்தில் இருப்போம் என்ற கவலையிலேயே இருப்பார்கள். நாம் சராசரியாக அல்லது மோசமான செயல்பாட்டு பிரிவில் இருப்போமா என்ற கவலையில் இருப்பார்கள். ஒரு நிறுவனத்தில் 80 சதவீதம் நபர்கள் கவலையில் இருந்தால் அங்கு என்ன வேலை நடக்க முடியும்? வேலை நடக்காதது ஒருபுறம் இருக்க, பணியாளர்கள் இடையே போட்டி அதிகரிக்கும். கருத்து வேறுபாடு உருவாகும். நண்பர்களாக இருந்தவர்கள் கூட, எதிரிகளாக மாறும் சம்பவம் நடக்கும். விளைவு சம்பள உயர்வு காலம் முடிந்தவுடன் வெளியேறுவோர் விகிதமும் அதிகரிக்கும். இதனால் பல நல்ல பணியாளர்கள் தொடர்ந்து வெளியேறிவருவதால் பெல் கர்வுக்கு பல நிறுவனங்கள் சாவு மணி அடித்தன.
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனம் பெல் கர்வ் முறையை நீக்கியதால் அந்த நிறுவனத்தில் வெளியேறுவோர் விகிதம் கணிசமாக குறைந்திருக் கிறது.
இதை சரி என்று வாதாடுபவர்களும் இருக்கிறார்கள். பெல் கர்வ் என்பது ஒரு முறை. 100 நபர்கள் இருந்தால் 10 முதல் 20 பேர் சிறப்பாகவும், 10 முதல் 20 நபர்கள் மோசமாகவும் பணியாற்றுவார்கள். 60-80 நபர்கள் சராசரியாக பணியாற்றுவர்கள். இப்படித்தான் அனைத்து இடங் களிலும் இருக்கும். பெல் கர்வ் தோல்வியடையவில்லை. அதை நடை முறைப்படுத்தும் முறையில்தான் அது தோல்வி அடைகின்றன என்று கூறும் ஹெச்ஆர் நபர்களும் இருக்கிறார்கள்.
மைக்ரோசாப்ட் இந்திய பிரிவின் பாஸ்கர் பிராம்னிக் (Bhaskar Pramanik) கூறும்போது, கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்டவர்கள் இந்த வருடம் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்ப முடியாது. மேலும் இதுபோன்ற ரேங்கிங் முறை பள்ளி கல்லூரிகளில் வரிசைப்படுத்த உதவுமே தவிர வேலைகளில் செய்ய முடியாது. நிறுவனங்களில் வேலை என்பது குழுவோடு இணைந்து செயல்படுவது என்று கூறியிருக்கிறார்.
கேபிஎம்ஜி நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவர் கூறும் போது இதனால் பணியாளர்களை வகைப்படுத்து வதிலேயே பெரும்பாலான நேரம் வீணாகிறது. தவிர இந்த முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் பணியாளர்கள் நினைப்பதால் அதனை நீக்கி இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.
பல நிறுவனங்கள் இந்த பூனைக்கு மணிகட்டிவிட்டன.